தமிழினத்தின் தனிப்பெருந் திருநாள் பொங்கல் திருவிழா!
இயற்கையோடு ஒட்டி உறவாடி வாழ்ந்த இனங்களிலே மிகவும் சிறப்பான இனங்கள் தமிழினமும், அமெரிக்கப் பூர்விகக் குடிகளும் ஆவர். அமெரிக்கப் பூர்விகக் குடியினர் நன்றித் திருநாள் நம் பொங்கல் போன்றதே!
இன்று கனடா நாட்டில் பொங்கல் அரசு மூலமாக சிறப்பிக்கப்பட்டு இந்த தை மாதமே தமிழர் மாதம் என்று கொண்டாடப் படுகின்றது. நன்றி! அங்கு வாழும் நம் ஈழ உடன் பிறப்புக்களுக்கு அய்க்கிய அமெரிக்காவிலும் பல மாநிலங்களில் பள்ளிகளில் பொங்கல் சிறப்பு பெற்று வருகின்றது.
நம் குழந்தைகள் பள்ளிகளுக்குப் பொங்கல் பற்றிச் சொல்லி அன்று கொண்டாடுகின்றனர்.
பொங்கலன்று தமிழ்க் குடும்பங்கள் பொங்கல் கொண்டாடுவர். ஆனால் சனி, ஞாயிறு நாட்களில் பல் வேறு தமிழ்ச் சங்கங்கள் சிறப்பாக விழாவெடுத்து, ஆடல் பாடல்,பேச்சு என்று ஒவ்வொரு அமெரிக்கப் பெரு நகரிலும் பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்படும்.
இன்று இளைய தலை முறை பறை இசைத்து ஆடி பல அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் தமிழ் நாட்டில் வாழ்வதை விட இங்கு சிறப்பாகக் கொண்டாடி விடுகின்றனர் ! குழந்தைகள் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு பெற்று மகிழ்வர்!
உலகின் பல நாடுகளில் தமிழர் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். அதில் மிகவும் சிறப்பு சிங்கப்பூரில்! தெருவெல்லாம் தோரணம்! பார்த்தாலே உற்சாகம் பொங்கி வரும்.
சில இடங்களில் தான் தமிழ்ப் புத்தாண்டு என்பது உணரப்பட்டு வருகின்றது. தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பதைத் தமிழினம் உணர்ந்து வந்து கொண்டுள்ளது!
உலகெங்கும் உள்ள அனைவர்க்கும் பொங்கலோ பொங்கல்!
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!
– மருத்துவர் சோம இளங்கோவன்