சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்!
பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு அளிக்காதது ஏன்?
சமூகநீதி சக்திகள் ஒருங்கிணைந்து போராடுவோம்!
மிகப்பெரிய போராட்டங்களுக்குப் பிறகு பி.பி.மண்டல் தலைமையிலான பிற்படுத்தப்பட்டோர் நலக் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது. இதற்காக பத்து ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. இந்தியா முழுவதும் (டில்லி உள்பட) 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் திராவிடர் கழகம் நடத்தியது. வேறு சில அமைப்புகளும் அவ்வப்போது நமக்கு ஒத்துழைப்பை நல்கி வந்தன.
உயர்ஜாதியினரும் – ஊடகங்களும்!
‘‘10 ஆண்டுகள் ஆன நிலையில், மண்டல் குழுவின் அறிக்கை செயலற்றதாகி விட்டது, இனி அதற்கு உயிர்ப்பு இல்லை’’ என்று பார்ப்பனர்களும், அவற்றின் ஆயுதங்களான ஊடகங்களும் ஒரு பக்கத்தில் ஊளையிட்டுக் கொண்டு திரிந்தன.
வாராது வந்த மாமணியாக இந்திய அரசியல் வானில் உதித்த சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி.சிங் அவர்கள் துணிந்து மண்டல் குழுப் பரிந்துரைகளுள் ஒன்றான வேலை வாய்ப்பில் 27 விழுக்காட்டை 1990 ஆகஸ்டில் நாடாளுமன்றத்தில் பிரகடனப்படுத்தினார்.
தந்தை பெரியாரின் கனவு!
தந்தை பெரியார் அவர்களையும், பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களையும், ராம் மனோகர் லோகியா அவர்களையும் நன்றி உணர்வோடு நினைவு கூர்ந்து, அவர்களின் கனவு நனவானது என்று மகிழ்ச்சிப் பொங்கப் பிரகடனப்படுத்தினார்.
அந்தச் சமூகநீதிக்காகவே அவர் ஆட்சிக் கவிழ்க்கப்பட்டது. மண்டல் குழுப் பரிந்துரை-களில் ஒன்றினைச் செயல்படுத்த முனைந்த நிலையில், உயர்ஜாதிப் பார்ப்பன அமைப்பான, இட ஒதுக்கீட்டுக்கு எப்பொழுதுமே எதிரான பி.ஜே.பி. வெளியிலிருந்து கொடுத்து வந்த தன் ஆதரவை திடீரென்று விலக்கிக் கொண்டது. அதற்காக வருந்தவில்லை அந்தச் சமூகநீதிக் கோமகன்!
சமூகநீதிக்காக ஆயிரம் பிரதமர் நாற்காலிகளை இழக்கத் தயார் என்று சூளுரைத்த பெருமான் வி.பி.சிங்
நீதிமன்றத்தில் முட்டுக்கட்டை
நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிவித்தாலும் அதனை எதிர்த்தும், உச்சநீதிமன்றம் சென்றனர். இரண்டு ஆண்டுகள் மேலும் காலங்கடத்தப்-பட்டது, 1992இல் அமைக்கப்பட்ட ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு, பிரதமர் வி.பி.சிங் பிறப்பித்த ஆணை செல்லும் என்று சொன்னாலும், அரசமைப்புச் சட்டத்தில் இல்லாத இரண்டு தீய அம்சங்களை அதில் திணித்தது.
‘‘கிரிமீலேயர்’’ என்னும் பொருளாதார அளவு, 50 சதவிகிதத்திற்குமேல் இட ஒதுக்கீடு கூடாது என்கிற புது நிபந்தனைகளை வலிந்து திணித்தது.
1950 ஜனவரி 26 இல் அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்திருந்தாலும் – 40 ஆண்டுகளுக்குப் பிறகுதான் முதன்முதலாகப் பிற்படுத்தப்பட்டவர் களுக்கு இட ஒதுக்கீடே அமலுக்கு வருகிறது, – அந்தக் கட்டத்திலேயே பொருளாதார அளவுகோல் என்றால், இது என்ன நீதி? எவ்வளவுக் காலம் இட ஒதுக்கீடு நீடிப்பது என்று கேட்பது பித்தலாட்டம் அல்லவா!
கல்வியில் கொண்டுவரப்படவில்லை
வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வந்ததே தவிர, கல்வியில் இட ஒதுக்கீடு கொண்டு வரப்படவில்லை. அதற்காகவும் தொடர்ந்து கழகம் குரல் கொடுத்து வந்த நிலையில், 2006 ஆம் ஆண்டில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் கணக்குத் திறக்கப்பட்டது. அதுவும் ஆண்டுக்கு 9 சதவிகிதம் என்று கணக்கிட்டு மூன்றாண்டுகளில் 27 சதவிகிதம் கல்வியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்-பட்டது. அதற்கு மேலும் தாமதம் செய்யப்பட்டது என்பதுதான் உண்மை.
தகவல் அறியும் உரிமையின் அடிப்படையில்…
இவ்வளவு நடந்தும் பிற்படுத்தப்பட்டவர்-களுக்கு அளிக்கப்பட்ட இடங்கள் எத்தனை? ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஏடு (26.12.2015) வெளிப்படுத்தியது. சென்னையைச் சேர்ந்த சமூகநீதியாளர் முரளிதரன் அவர்கள் நீண்ட காலமாகப் போராடி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கிடைத்த தகவல்களைத்தான் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ வெளியிட்டது.
வெளியாகியுள்ள புள்ளி விவரங்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன. பிற்படுத்தப்பட்டோர் எந்த அளவுக்கு வஞ்சிக்கப்பட்டுள்ளனர் என்பதும் தெளிவாகி விட்டது.
12.9 விழுக்காடு தாழ்த்தப்பட்ட பிரிவினர், 4 விழுக்காடு பழங்குடியினர். மற்றும் 6.7 விழுக்காடு பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு பணிநியமனம் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் முக்கியமான துறைகளில் பணியாளர்களின் எண்ணிக்கை 6,879 ஆக உள்ளது. இதனடிப்படையில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான பணியிடங்கள் பெரும்பாலும் நிறைவேற்றப்படவில்லை. இது மண்டல் குழுவின் பரிந்துரைகளை புறம் தள்ளும் நடவடிக்கையாக கருதப்படுகிறது. குடியரசுத் தலைவரின் உதவியாளர்கள் பட்டியலில் இட ஒதுக்கீட்டின்படி 7 பேர் பிற்படுத்தப்பட்ட பிரிவின்கீழ் நியமனம் செய்யப்பட வேண்டும். ஆனால் இத்தனை ஆண்டுகளாக அங்கு பிற்படுத்தப்பட்டவர்கள் யாரும் நியமனம் செய்யப்படவில்லை. மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தில் வெறும் 9 விழுக்காடு பிற்படுத்தப்பட்டவர்கள் மட்டுமே நியமனம் செய்யப்பட்டுள்ளனர். என்னே கொடுமை!
சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்!
உயர்கல்வித் துறையில் வெறும் 5 விழுக்காடு பிற்படுத்தப்பட்ட பணியாளர்கள் மட்டுமே நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கிரேடு ஏ பிரிவில் 10 விழுக்காடு பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். உயர்கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சித் துறையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்காக வெறும் 41 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், ஒரே ஒருவர் மட்டுமே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேற்கண்ட புள்ளி விவரங்கள் தெரிவிப்பது என்ன?
மூன்றில் ஒரு பாகமே!
சட்டப்படி 27 சதவிகித இடங்கள் அளிக்கப்பட்டாகவேண்டும். அதில் பாதி அளவுகூட கொடுக்கப்படவில்லை. சில துறைகளில் மூன்றில் ஒரு பாகம் மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது.
குடியரசுத் தலைவர் அலுவலகமா? கோவில் கர்ப்பக் கிரகமா?
அரசமைப்புச் சட்டத்தின் தலைவராக இருக்கக்கூடிய குடியரசுத் தலைவர் அலுவலகத்திலேயே சட்டப்படி அளிக்கப்பட-வேண்டிய இடங்கள் புறக்கணிக்கப்பட்டு இருப்பது நியாயம்தானா? ஓரிடம்கூட அளிக்கப்படவில்லை என்றால், குடியரசுத் தலைவர் அலுவலகம் என்பது நவீன கோவில் கர்ப்பக்கிரகமா?
பிற்படுத்தப்பட்டவர்களுக்குரிய இடங்கள் கிடைக்கப்படாததற்குக் காரணம் என்ன என்பதை மத்திய அரசு வெளிப்படையாகத் தெரிவிக்கவேண்டும். அறிக்கையை அளிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வற்புறுத்திப் பெற்றாகவேண்டும்.
போதிய எண்ணிக்கை கிடைக்கப் பெறாதது ஏன்?
பிற்படுத்தப்பட்டோரிலிருந்து போதிய எண்ணிக்கையில் நபர்கள் கிடைக்கவில்லை என்று சொல்ல முடியாது. வேலையில்லாப் பட்டதாரிகள் லட்சக்கணக்கில் இருக்கின்றனர்; அப்படி இருக்கும்போது உரிய எண்ணிக்கையில் இடங்கள் கிடைக்காதது ஏன்?
1. தகுதி வாய்ந்த பிற்படுத்தப்பட்டவர்கள் கிரிமீலேயர் என்று சொல்லி வெளியேற்றப்படுகிறார்கள்.
2. பல மாநிலங்களில் ஒழுங்கான பிற்படுத்தப்பட்டோர் பட்டியலே கிடையாது; அங்கெல்லாம் அதற்கான சான்றுகளைப் பெறுவதில் சிக்கல்.
3. உயரதிகாரிகள் பெரும்பாலும் பார்ப்பனர்களாக இருப்பதாலும், இட ஒதுக்கீட்டுக்கு எதிராக இருப்பதாலும் அவர்களின் சூழ்ச்சிகள்.
4. தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு சட்ட ரீதியான அங்கீகாரம் அளிக்கப்படவில்லை. அதிகாரம் உள்ள அமைப்பாக அமையும் பட்சத்தில், அது கண்காணிப்புக் குழுவாக செயல்பட வாய்ப்பு உண்டு.
அப்போதுதான் இட ஒதுக்கீட்டைப் பின்பற்றாத துறை அதிகாரிகளை நேரில் அழைத்து விசாரணையும் நடத்த முடியும்.
ஷெட்யூல்டு பிரிவினருக்கு – தாழ்த்தப்பட்டோர் (SC) மற்றும் மலைவாழ் (ST) மக்களுக்குப் பயன்படும் வகையில் தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணையத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதிலும்கூடப் பிரித்தாளும் தந்திரம் – சூழ்ச்சி!
5. சட்டப்படி அமல்படுத்தாத அதிகாரிகள் தண்டிக்கப்படவேண்டும்; திரு.சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் அமைந்திருந்த நாடாளுமன்ற நிலைக்குழு மிகவும் சரியான பரிந்துரையை அளித்தது (2003). அதன்படி இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவதில் தவறு இழைக்கும் அதிகாரிகளுக்கு 3 ஆண்டுத் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படவேண்டும் என்று பரிந்துரைக்கப்-பட்டது – அது கிடப்பில் போடப்பட்டு விட்டது.
எப்படி அரசியல் சட்டப் பிரிவு 338A, 338B பிரிவு இருக்கிறதோ அதுபோல,338C என்ற பிரிவு ஒன்றையும் அரசியல் சட்டத்தின் திருத்தமாகச் சேர்த்து கண்காணிப்புக்குரிய அதிகாரம் வழங்கப்பட்டால்தான் சட்டபூர்வமாக இதை உண்மையாக செயல்படுத்த வைக்க முடியும்.
6. அதிக மதிப்பெண்கள் பெற்ற பிற்படுத்தப்பட்டவர்கள் திறந்த போட்டியில் வைக்கப்படவேண்டும்; அவ்வாறு செய்யாமல் அவர்களை பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டின்கீழ் கொண்டுவரும் தில்லு முல்லுகளும் ஒரு பக்கத்தில் நடந்து கொண்டுவருகின்றன.
இவையெல்லாம்தான் பிற்படுத்தப்பட்டோர் – அவர்களுக்குரிய விகிதாச்சாரத்திற்கான இடங்கள் பெற முடியாமைக்கான முக்கிய காரணங்களாகும்.
இட ஒதுக்கீட்டில் பி.ஜே.பி.யின் கொள்கை என்ன?
இதற்கிடையே மத்தியில் உள்ள பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கொள்கை இட ஒதுக்கீட்டில் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு இல்லை.
அவர்களின் சித்தாந்தக் குருபீடமான ஆர்.எஸ்.எஸின் தலைமை, இட ஒதுக்கீடு குறித்து தெரிவித்த கருத்துகள் _- அதன் விளைவை பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பி.ஜே.பி. சந்தித்ததும் நாடறிந்த ஒன்றாகும்.
ராஜஸ்தானில் இருக்கக்கூடிய பி.ஜே.பி. அரசு அந்த மாநிலத்தில் இட ஒதுக்கீட்டை 50 சதவிகிதத்திலிருந்து 68 சதவிகிதமாக உயர்த்தியிருந்தால் அந்த அளவை வரவேற்கலாம். இதில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 14 சதவிகிதம் என்று சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது.
இட ஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் என்பதற்கு சட்டத்தில் இடமில்லை; பி.வி.நரசிம்மராவ் அவர்கள் பிரதமராக இருந்தபோது பொருளாதார அடிப்படையில் 10 சதவிகிதம் என்று ஒதுக்கீடு செய்திருந்த நிலையில், உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
ஆழம் பார்க்கிறார்கள் – எச்சரிக்கை!
சட்டப்படியும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படியும் விரோதம் என்று தெரிந்திருந்தும், மத்தியில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் மாநிலத்தில் இப்படி ஒரு சட்டம் இயற்றுவது – இட ஒதுக்கீடுப் பிரச்சினைக்கான அடிப்படையைத் தகர்க்க ஒரு வெள்ளோட்டம் (Feeler) விட்டுப் பார்க்கிறார்கள் என்றுதான் கருதப்படவேண்டும்.
தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு என்கிற கண்ணோட்டம் வலிமை பெறவேண்டிய கட்டாயத்தில், அவசியத்தில், காலகட்டத்தில் திசை திருப்பிப் பார்க்கிறார்கள். இதில் சமூகநீதி சக்திகள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இதுகுறித்து தமிழக முதல்வர் ஏன் அக்கறை காட்டவில்லை?
திராவிடர் கழகத்தின் பணி!
ஒரு பக்கம் மதவாதம் – இன்னொரு பக்கம் சமூகநீதிக்கான சவால் – இவற்றை முன்னிறுத்தி அரசியலையும், தேர்தலையும் அணுகவேண்டியது மிக அவசியம்.
இவற்றை முன்னிறுத்தித் திராவிடர் கழகம், தன் பிரச்சாரப் பணியைச் செய்யும் – மக்கள் மத்தியில் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும்.
கடந்த 2 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கட்சியைக் கடந்து அனைவரும் ஆதரவு தந்தனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மூலம் சமூகநீதி அணி பலப்பட தன் உணர்வை எரிமலைபோல் காட்டவேண்டும்.
– கி.வீரமணி
ஆசிரியர்
——————————
சமூகநீதிக்கான திராவிடர் கழக செயற்குழு தீர்மானம்
மண்டல் குழுப் பரிந்துரைகள் அமலாக்கப்பட்டு 20 ஆண்டுகள் கடந்த நிலையிலும், 27 சதவிகித இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்படவேண்டும் என்று மத்திய அரசு ஆணை நிறைவேற்றிய பிறகும், இதுவரை பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்-பட்டுள்ள இடங்கள் 12 சதவிகிதத்தைத் தாண்டவில்லை என்பது மிகவும் அதிர்ச்சிக்குரிய வேதனையாகும். பெரும்-பாலான துறைகளில் 7 சதவிகிதத்துக்கும் குறைவாகவே அளிக்கப்பட்டுள்ளது என்ற புள்ளி விவரங்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தெரிய வந்துள்ளன.
பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி, சரிவரப் பயன்-படுத்தப்படவில்லை என்று பிற்படுத்தப்பட்டோருக்கான நாடாளு-மன்றக் குழு கவலை தெரிவித்துள்ளது.
இவை பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியும், அரசியல் சட்ட விரோதமும் ஆகும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து மத்திய அரசு திட்டவட்டமான விவரங்களை அதிகார-பூர்வமாக வெளியிடவேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துவதுடன், உடனடியாக இதற்குரிய பரிகாரமும் காணப்பட வேண்டும்.
நாடாளுமன்றத்தில் உள்ள சமூகநீதிக் கொள்கையுடைய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள், குறிப்பாக பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் உரிமைக் குரல் கொடுக்கவேண்டும் என்றும், பிரதமரைச் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்றும் இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
மத்திய அரசை வலியுறுத்தவும், ஒடுக்கப்-பட்ட மக்கள் மத்தியில் சமூகநீதி விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வரும் 2016 ஜனவரி 2 ஆம் தேதி காலை
11 மணிக்கு மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.