மதங்கள் உருவாக்கப்பட்டது மனிதனை நல்வழிப்படுத்துவதற்காகத்தான் என்று மதவாதிகள் சொல்கிறார்கள். சுய ஒழுக்கத்-தையும், பொது ஒழுக்கத்தையும் மதக்கதைகள் போதிக்கின்றன தெரியுமா என்றும் அவர்கள் கேட்கிறார்கள். மனிதனுக்கு கடவுள் மீதான அச்சம் இருக்கவேண்டும் அப்போதுதான் அவன் நமக்கும் மேலே ஒருவன் இருக்கிறான் என்ற பயத்தில் ஒழுக்கமாக வாழ்வான் என்றெல்லாம் சொல்லுகிறார்கள். இதனால்-தான் கடவுள் பக்தியை பயபக்தி என்று குறிப்பிட்டனராம்.
பெரியார் சொன்னார் அச்சமும் அறியாமையும் பெற்றெடுத்த குழந்தையே கடவுள் என்று.அது சரிதான் என்பதை இந்த பயபக்தி சொல்லிவிட்டது.
இருக்கட்டும். இப்படி மதங்களும் மதவாதிகளும் சொல்கிறபடிதான் இன்று எல்லாம் நடக்கிறதா? மதநம்பிக்கையில் ஊறித்திளைத்திருக்கும் இந்தப் பரந்த பாரத தேசத்தில் ஆகட்டும், பிற மதங்கள் கோலோச்சும் நாடுகளில் ஆகட்டும் மதம் எதற்குப் பயன்படுகிறது?
ஈராக் மீது போர் தொடுக்க நான் கடவுளின் அனுமதியைப் பெற்றுவிட்டேன் என்று அன்றைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் சொன்னார். எம் மதத்தவர் மீது கை வைத்தால் குண்டுகள் பேசும் என்று மிரட்டுகிறார் பின்லேடன். ராமன் இங்கே-தான் பிறந்தான் என்று பாபர் மசூதியை இடித்தது இந்துத்துவா கும்பல். ஆக, இவர்களை மதங்கள் எப்படி வழிநடத்தியிருக்-கின்றன என்பது தெரிந்துவி-ட்டது. ஒருகாலத்தில் மண்மீதும், பொன்மீதும் ஆசை கொண்டு போர்கள் நடந்தது உண்டு. ஆனால், இப்போது மதவெறியால்தான் உலகின் பல நாடுகளில் உள்நாட்டுப் போர்களும், அண்டை நாடுகள் மீது ஆக்கிரமிப்புகளும், இயற்கை வளங்களைச் சுரண்ட போர்களும் நடக்கின்றன; மனித உயிர்கள் பலியிடப்-படுகின்றன. மத நிறுவனங்களின் ஆசியோடு அதிகார பீடங்கள் இந்தக் கேடுகளைச் செய்து கொண்டிருக்க இன்னொருபுறம் தனி மனித குணங்களும் கடவுள், மத நம்பிக்கையால் நாசமாகிக் கொண்டிருக்கின்றன என்பதை நாளும் வரும் செய்திகள் சொல்கின்றன. * கடவுளுக்காக தன் உறவுகளையே நரபலி கொடுக்கும் கொடுமை…
* ஜோதிட நம்பிக்கையால் பெற்ற குழந்தையையே கிணற்றில் வீசிக் கொல்லும் தாய்…
* மதங்களின் பேரால் ஆசிரமம் அமைத்து ஆண்களையும் பெண்களையும் வசீகரித்து அடிமைகளாக்கும் சாமியார்கள்…
* காவி அணிந்து காமச்சேட்டை புரியும் நித்தியானந்தாக்கள்…
* வெள்ளை அங்கி அணிந்து இளம்-பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்யும் கிறித்துவப் பாதிரிகள்…
* இன்னும் அறியாமையில் இருக்கும் மக்களிடம் மூடநம்பிக்கையை வளர்த்து பணம் பறிக்கும் ஜோதிடர்கள்,குறி சொல்லிகள், மந்திரவாதிகள்(?)…
* வளர்ந்துவரும் அறிவியலைத் துணைக்-கொண்டு கணினி, தொலைக்காட்சிகள் வாயிலாக படித்த பாமரர்களை தங்கள் வலையில் வீழ்த்திக் கொள்ளை அடிக்கும் நவீன ஜோதிடக்காரர்கள்…
இப்படி பல வழிகளிலும் கடவுளும், மதங்களும், மூடநம்பிக்கையும் மக்களுக்கு எதிராகப் பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன.இதற்கு எதிராகப் போராட, குரல் எழுப்ப, அறிவு புகட்ட பகுத்தறிவாளர்களைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்? இதனால்தான் நாத்திக நன்னெறியே வாழ்வியல் நெறி, அது ஒரு மாற்று வாழ்வியல் பண்பாடு என்ற முழக்கத்தை முன் வைத்து திருச்சியில் 2010 ஜனவரி 7, 8, 9 ஆகிய நாள்களில் கூடுகிறார்கள் உலக நாத்திகர்கள்.
எல்லா இசங்களையும் பார்த்துவிட்ட உலகம் இன்று பெரியாரிசத்தின் தேவையை உணரத்தொடங்கியிருக்கிறது. பெரியாரை உலகமயமாக்க திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி உலக நாத்திகர்களை இங்கே அழைத்திருக்கிறார்.
உலகின் நாத்திகத் தலைநகரம் தமிழ்நாடு. நாத்திகக் கருத்துகளை ஏற்றுள்ள மக்கள் இயக்கமாக மலர்ந்து லட்சோப லட்சம் பேர்களை மாற்றி மான வாழ்வு பெற்றவர்களாக்கியுள்ளது!
மண் புழுவைவிடக் கேவலமாக மதிக்கப்பட்ட நடத்தப்பட்ட மக்கள் மனிதர்கள் நாம்; மண்ணன்று என்று உணரத் தலைப்பட்டு விட்டனர்.
மதங்களால் மிஞ்சியது ஒழுக்கம் அல்ல; மாறாக, தீவிரவாதம் – பயங்கரவாதம்! ரத்த ஆறு, உயிர், உடைமைக் கொள்ளைகள்.
கற்பனையான கடவுள், பேய், பூதம், பிசாசுகள், மூட நம்பிக்கைகளில் மூழ்கிப் பயமுறுத்தும் பாழுங்கிணற்றுக்குள் வீழ்ந்து மடியாமல், மக்களைக் காப்பாற்றி அறிவு வழி, அமைதி வழி நடத்துவதே நாத்திகம் என்ற நன்னெறி யாகும்!
இந்தக் கருத்துகளை – இன்று உலகத்தின் பற்பல நாடுகளிலும் ஏற்கும் பரிபக்குவம் வளர்ந்த வண்ணம் உள்ளது.
இதனை ஆக்கப்பூர்வச் சிந்தனைகளாலும், செயல்களாலும் அன்பும், பண்பும் தழைத்-தோங்கும் வழிகளை வகுக்கவே உலக நாத்திகர் மாநாடு திருச்சியில் கூடவிருக்கிறது.
அய்ரோப்பாக் கண்டத்தில் உள்ள பிரான்ஸ், நார்வே, ஸ்வீடன் போன்ற பல நாடுகளி-லிருந்தும், அமெரிக்காவிலிருந்தும், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தியாவின் பற்பல மாநிலங்களிலிருந்தும் பல நூற்றுக்கணக்கான பேராளர்கள் அம்மாநாட்டிற்கு வந்து கலந்துகொள்ளவிருக்கின்றனர். என்று கூறி உலக மாந்த நேய சிந்தனை கொண்ட அனைவரையும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அழைத்திருக்கிறார். வாருங்கள் எல்லோரும் திருச்சியில் கூடுவோம். மதங்கள் மாய்ந்திட,மனிதம் வென்றிட, மாற்றத்தை உருவாக்க நல்ல முடிவெடுப்போம்.