– இசையின்பன்
வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு தவிக்கின்றனர் என்று அறிந்த அடுத்த நொடியே திராவிடர் கழகம் உதவிப் பணிகளைத் தொடங்கியது. பெரியார் திடல் நிவாரணப் பணிகளின் தலைமையிடமாக மாறியது. 83 வயதில் தமிழர் தலைவர் அவர்கள், நிவாரணப் பணிகளைக் கண்காணித்து, நெறிப்படுத்தி களங்காணச் செய்தார். சமையல் கூடத்திற்குச் சென்று அடுப்பை அணைக்காது தொடர்ந்து உணவு தயார் செய்யுங்கள். எங்கு எப்போது உணவு தேவைப்பட்டாலும் உடனே அனுப்பி வையுங்கள் என்று கூறி உணவுகளையும் சுவைத்துப் பார்க்கவும் செய்தார்கள். மருத்துவர் குழுக்களை ஆங்காங்கு அனுப்பி நோய் தடுப்புக்கு உதவினார்கள்.
பொருட்களைக் கொடுத்து உதவ முன்வந்தவர்கள் யாரிடம் கொடுக்கலாம் என்ற சிந்தித்தபோது பெரியார் திடலில் கொடுத்தால்தான் சரியாகப் போய்ச் சேரும் என்று முடிவெடுத்து திடலில் கொண்டுவந்து குவித்தனர். நலப்பணியாளர்களின் நம்பிக்கை நட்சத்திரம் திராவிடர் கழகம் என்பது நமக்குக் கிடைத்த முதல் நற்சான்று. தொண்டு செய்ய களத்தில் குதித்த இளைஞர்கள் யாரோடு இணைந்து செயல்படலாம் என்று தேடியபோது அவர்கள் நாடிவந்து சேர்ந்த இடம் பெரியார் திடல். இது தொண்டுள்ளங்கள் தந்த இரண்டாவது நற்சான்று. சாலைகளில் தேங்கிய சாக்கடை நீருக்குள் நின்றபடி சுவாசிக்கவே முடியாத அளவில், நாற்றம் பிடித்து அழுகி நாறிக்கிடந்த குப்பைகளையும் நாம் எடுத்து, கொண்டுவந்த பெரிய, பெரிய நெகிழிப் பைகளில் போட்டு வண்டிகளை வரவழைத்து ஏற்றுவதைக் கண்ட சிலர், யாரு வூட்டுப் புள்ளைகளோ! ஆம்பள, பொம்பளப் புள்ளைங்க, அதுக வூட்லகூட இந்த வேலைய பாத்திருக்குமா! நமக்காக வந்து இந்த நாத்தத்துல கைய வைக்குதுக பாத்துகிட்டு சும்மாயிருக்குறதா வாங்கடி, வாங்கடா என்று கூவியபடியே வந்து நம்மோடு இணைந்து கொண்டனர். இது நமக்குக் கிடைத்த அடுத்த நற்சான்று. அரசாங்கத்தின் காதுகளில் நாங்கள் பலமுறை எங்கள் குறைகளைச் சொல்லியும் கேளாக் காதுகளுக்குச் சொந்தக்காரர்களாவே உள்ளனர். எதிர்பார்க்காமல் நீங்கள் வந்தீர்கள் என்று நன்றிப் பெருக்குடன் நம்மைப் பார்த்துக் கூறியது முத்தாய்ப்பான நற்சான்று. பார்த்தோ, பழகியோ இல்லாத நண்பர்கள் பலர் முகநூலிலும், கட்செவிகளிலும் (Whatsapp), சுட்டுரைகளிலும் ,(Twitter) உதவிகள் செய்கின்ற கலங்கரை விளக்கமாய் நம்மை சுட்டிக்காட்டிக் கொண்டேயிருந்தனர்.
இது நமக்குக் கிடைத்து நற்பெருஞ்சான்று. இருவாரங்கள் தாண்டியும் நிவாரணப் பொருட்கள் கொடுத்து ஓய்ந்த பாடில்லை. உணவா, உடையா, பாயா, போர்வையா, மருத்துவமே தேவை என்று கேட்டுவரும் எண்ணற்ற மக்களுக்கு ஏமாற்றம் அளிக்காமல், எண்ணிக்கை பாராமல் கொடுத்து உதவப்பட்டது. இந்தப் பெருவெள்ளம் நம் இயக்கத்திற்கும் பல புதிய அனுபவங்களை சொல்லிக் கொடுத்துள்ளது.
பல புதிய உறவுகளின் வரவுகளை நம் இயக்கத்திற்கு இந்த வெள்ளம் சேர்த்துக் கொடுத்துள்ளது.