குக்கர் பற்றி முக்கியமாய் அறிய வேண்டியவை

ஜனவரி 01-15

குக்கரின் உள்ளே அடிப்பகுதியில் வைக்கப்படும் தட்டை அவசியம் உபயோகப்படுத்த வேண்டும். இல்லையென்றால் குக்கருக்குள்ளே பாத்திரம் வைத்தவுடன் தண்ணீர் மையப் பகுதியிலிருந்து விலகி, தண்ணீரற்ற அப்பகுதி சூடாகி, சிறு விரிசல் விடும். இதனால் நீர் கசிந்து, அதுவும் கேஸ் அடுப்பின் சூட்டில் உடனே ஆவியாகி, அடிப்பகுதி மிக வேகமாக உருக வாய்ப்பு உள்ளது. எனவே உள்தட்டை அவசியம் உபயோகியுங்கள்.

குக்கருக்கும் அதனுள்ளே வைக்கப்படும் பாத்திரத்துக்கும் அரை இன்ச் இடைவெளி அவசியம். அப்போதுதான் நீராவி மேலே எழும்பி வர ஏதுவாக இருக்கும்.

குக்கருக்குள் வைக்கப்படும் உணவுப் பொருட்கள் அனைத்தும் நீராவியில்தான் சமைக்கப்படுகிறது. அதனால் அளவுக்கு அதிகமாக வெளிப்பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றக்கூடாது.

குக்கருக்குள் பாத்திரத்தின் மேல் பாத்திரம் என்று அடுக்காதீர்கள். குக்கருக்குள் வைக்கும் பாத்திரத்தை அவசியம் மூட வேண்டும். பருப்பு, காய்கறி ஏதாவது ஆவி வெளியேறும் துவாரத்தில் போய் அடைத்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

விசில் போடுவதற்கு முன்பு மூடியின் வழியாக நன்றாக ஆவி வெளியேறும் சப்தம் கேட்ட பிறகே, வெயிட் போட வேண்டும். பலபேர் கண்ணால் ஆவியைப் பார்த்தவுடனே வெயிட் போட்டு விட்டு, அடுத்த வேலைக்குப் போய்விடுவார்கள். ஆனால், ஆவி வெளியேறுவதைக் கேட்ட பிறகே வெயிட் போட வேண்டும், அப்போதுதான் உள்ளே எல்லாம் ஒழுங்காக இருக்கிறது என்று அர்த்தம்.

வெயிட் போட்ட பிறகு அடுப்பின் தணலை சிம்மில் வைக்க வேண்டும். அதாவது, சற்று குறைந்த தீயில்தான் வெயிட் போட்ட பிறகு குக்கர் இயங்க வேண்டும்.

ஆவி வருவதற்குள் வெயிட் போட்டதால் நடந்த விபரீதம்! ஒரு பெண் காய்கறிகளையும் அரிசியையும் குக்கரில் போட்டு வேக வைக்க, அரைகுறையாக மூடியை மூடியிருக்கிறாள். போதாக்குறைக்கு ஆவி வருவதற்கு முன்னாடியே வெயிட்டையும் போட்டு விட்டு, குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தவள், குக்கரை சுத்தமாக மறந்தே போய்விட்டாள். சற்று நேரத்தில் கட்டிடமே அதிரும்படியான ஒரு சத்தம் கேட்டது. எல்லோரும் அலறி அடித்துக் கொண்டு கீழ் வீட்டுக்குப் போனார்கள்.

குக்கர் மூடி பறக்கும் தட்டு போல மேலே பறந்து கீழே விழுந்து கிடந்தது. தீய்ந்த வாசனை அறையெங்கும் பரவியிருந்தது. பக்கத்து வீட்டு இளைஞன், தைரியமாகப் போய் சிலிண்டரையும் அடுப்பையும் அணைத்தான். பழைய குக்கரை உபயோகிப்பதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஒரு ஸ்விட்சை இத்தனை முறைதான் ஆன் _ ஆஃப் செய்ய வேண்டும் என்று கணக்கு இருக்கிறது. அதேபோல் ஒரு குக்கரின் மூடியும் இத்தனை முறைதான் மூடுவதற்கும்  திறப்பதற்கும் உபயோகப்படுத்த வேண்டும் என்று கணக்கு இருக்கிறது. மூடியின் லாக் தேய்மானத்தாலும் நாள்பட்ட உபயோகத்-தாலும் வளைவதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது. இப்படி வளைந்திருந்தால் என்னதான் காஸ்கெட் மாற்றினாலும் ஆவி வெளியேறு-வதை தடுக்கவே முடியாது.

குக்கரை அடிக்கடி சர்வீஸ் செய்தும், வெயிட் மற்றும் ஆவி வெளியேறும் பகுதி ஆகியவற்றை நன்றாகச் சுத்தம் செய்தும் மட்டுமே குக்கரின் முழுப் பயன்பாட்டை அனுபவிக்க இயலும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஸீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *