ஆசிரியர் பதில்கள்

ஜனவரி 01-15

கேள்வி : எங்கள் அய்யாவே! தங்களின் பிறந்த நாள் லட்சியக் கனவு என்ன?
– அ.காஜாமைதீன், நெய்க்காரப்பட்டி

பதில் : பிறந்த நாளுக்கு என தனி லட்சியக் கனவு என்பதைவிட, என்றுமே நம்முன் பணி நிறைவடையாத பணி _ ஜாதி, தீண்டாமை ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, சமூகநீதி, அறிவியல் பகுத்தறிவுச் சிந்தனை வளர்ப்பு ஆகியவைகளை நிறைவேற்றும் பணிதான்.

கேள்வி : மனிதம் வாழ மனிதன் எப்படி வாழவேண்டும்?
– அ.காஜாமைதீன், நெய்க்காரப்பட்டி

பதில் : தனக்கென வாழாப் பிறர்க்குரியாளனாக ஆக வேண்டும் மனிதன்.

கேள்வி : தனி மனிதத் துதிபாடல் என்பது தமிழகத்தில் வேகமாக பரவிவரும் விஷக் கிருமியாக மாறியுள்ளதே?
– நாத்திகன் சா.கோ., பெரம்பலூர்

பதில் : கடவுள்களே அதை விரும்புவதாக ஆக்கிவிட்டு அது நாளும் பலமுறை நடைபெறும்போது, மனிதர்கள் இப்படி கெட்டுப்போவதில் என்ன அதிசயம்?

கேள்வி : முற்போக்குச் சிந்தனையுடைய சித்தராமையா முதல்வராய் உள்ளநிலையில், எச்சில் இலை மீது உருளும் அவலம் கர்நாடகத்தில் உள்ளது பற்றி தங்கள் கருத்து என்ன?
– சீ.இலட்சுபதி, தாம்பரம்

பதில் : அரசு இயந்திரத்தைக்கூட அவரால் அந்த அளவுக்குத்தான் இயக்க முடியும்போல் இருக்கிறது! மூடநம்பிக்கை, ஜாதி ஆணவத்திற்குள்ள வீரியம் எவ்வளவு பார்த்தீர்களா?

கேள்வி : திருவள்ளுவருக்குக் கோயில் கட்ட வேண்டும் என்கிறாரே நடுவணரசு அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன். அதனால் ஏதேனும் பயனுண்டா?
– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

பதில் : அவரை அறிவுப் புலத்திலிருந்து நகர்த்த அருமையான யோசனையை வழங்கியுள்ளார் நம்ம அமைச்சர்! வேடிக்கைதான்!

கேள்வி : ஏரி, குளம், ஆறு போன்ற இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை சர்வ கட்சியினரும் அனுபவிக்கும்போது, ஆக்கிரமிப்புகளை அரசு கண்டிப்பாக அகற்ற வேண்டும் என தலைவர்கள், ஒருமித்தக் குரல் கொடுப்பார்களா? உண்மை இதழில் ஆக்கிரமிப்பை அகற்றத் தாங்கள் ஒரு தலையங்கம் தீட்டினால் என்ன? – சுமதி சண்முகசுந்தரம், திட்டக்குடி

பதில் : ஏரி, குளம் மட்டுமா ஆக்கிரமிப்பு? அவைகளை அகற்றும்போது, நடைபாதைக் கோயில்கள், போக்குவரத்துக்கு இடையுறாக உள்ள நடுவீதிக் கோயில்கள் உட்பட அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவதும் அவசர அவசியமாகும்.

கேள்வி : அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்பது ஆகம விதிகளுக்குப் புறம்பானது என்பது நிச்சயம் என்று துக்ளக் (30.12.2015) தலையங்கம் கூறுவது பற்றி தங்கள் பதில் என்ன?
– வெ.குணசீலன், திண்டிவனம்

பதில் : விடுதலை _ 23, 24 நாளைய எனது விளக்கக் கட்டுரைகளைப் படியுங்கள்! விளங்கும்!

கேள்வி : பார்ப்பனர்க்கு உரிமையுடைய ஆனந்தவிகடன் திராவிட உயர்வையும், செயலலிதா ஆட்சியின் சீர்கேட்டையும் தீவிரமா எழுதிவரும் நிலையில், பார்ப்பனரல்லார் நடத்தும் குமுதமும், தினந்தந்தியும் பச்சைப் பார்ப்பனத் தனத்தோடு எழுதுவது ஏன்?
– தீ.மணிமாறன், வேலூர்

பதில் : அரசின் நல்லெண்ணத்தினை சம்பாதிக்கும் ஏடுகளுக்கும், அதற்கு மாறான எழுத்துகளுக்கும் ஒரே மாதிரியான அணுகுமுறை இப்பணியில் இருக்குமா? யோசித்துப் பாருங்கள்! கேள்வி : ஆர்.எஸ்.எஸ். வெள்ள நிவாரணம் பற்றி செய்திபோடும் தினமணி, தி.க. வெள்ள நிவாரணப் பணிபற்றி செய்தி வெளியிடாதது எதைக் காட்டுகிறது?
– செ.சாரதா, மதுராந்தகம்

பதில் : என்ன செய்வது பார்ப்பான் பண்ணையம் கேட்பாரில்லை என்ற ரீதியாக தினமணியின் போக்கு உள்ளதே! ஸீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *