சாதிகளால் மோதல்கள்
வீதிகளில் வருவதினால்
வேறுபட்டு நிற்குமடா நாடு – இந்த
மேதினியும் மேன்மையுற
மேல்சாதி கீழ்சாதி
மாறவேண்டும் என்றுநீர் பாடு (சாதி)
பாடுபடும் பாட்டாளி
பலருக்கும் கூட்டாளி
பாருக்குச் சொல்லுங்கடா சேதி – உடம்பில்
ஓடும் இரத்தம், உதிரும் வேர்வை
ஒன்றுயென உணர்வதினால்
ஒருதாயின் மக்களென வாதி (சாதி)
ஆடுமாடு விலங்கினங்கள்
அவைகள் யாவும் ஓரினமாய்
அன்பு காட்டி வாழுதடா காட்டில் – இங்கு
காடுகளை மேடுகளை
கழனிகளாய் மாற்றித் தந்த
ஓடப்பனை ஒதுக்கி வைத்தார் நாட்டில்
சாதி மத பேதங்கள்
சாத்திரத் சண்டைகள்
மனித உறவைக் கெடுக்குதடா தம்பி – அந்த
போதிமகான் போதித்த
புனிதமானக் கருத்துக்களை
பூவுலகில் போற்றுங்கடா நம்பி (சாதி)
– புலவர் இரா.சாமிநாதன், எம்.ஏ., பி.எட்