நூல்: ஆலயப் பிரவேச உரிமை (முதற்பாகம்)
ஆசிரியர்: பி.சிதம்பரம் பிள்ளை B.A., B.L., M.L.A., (நாகர்கோவில்)
வெளியீடு: திராவிடர் கழக (இயக்க) வெளியீடு,
பெரியார் திடல், 84/1(50), ஈ.வெ.கி.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை – 600 007.
பக்கங்கள்: 136
நன்கொடை: ரூ. 65/-_
பிரிட்டிஷ் ஸர்க்கார் 1863-இல் இந்துக் கோவில்களின் பரிபாலனத்தை இந்துக்களிடம் ஒப்புவித்தார்களே, அந்த இந்துக்கள் யார்? அவர்கள் பார்ப்பனரா? அல்லது பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரரென்ற ஆரிய வகுப்பினரா? அல்லது திராவிடரா? அல்லது அனாரியரா? அல்லது தென்னிந்தியாவில் தங்களை இந்துக்களென்று அழைத்துக் கொள்பவரும், அரசாங் கத்தாரால் இந்துக்களென அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றவர் களுமான திராவிட – ஆரிய சமூகங்களைச் சேர்ந்தவர்களா?
வங்காள சட்ட நிபுணர் திரு.ஜே.ஸி. கோஷ் அவர்கள் தமது நூலில் அடியில் வருமாறு குறிப்பிடுகிறார்:-
1863-ஆம் ஆண்டு 20-வது சட்டமானது இந்து, மகமதிய மத ஸ்தாபனங்களைப் பற்றியதாகும். ஆனால், இந்துவென்பது விவரிப்பதற்குக் கஷ்டமான ஒரு பதமாகும். வாரிசு பாத்தியதை, சொத்துப் பிரிவினை இவற்றைப் பற்றிய இந்துச் சட்டம் சீக்கியர், சமணர், பௌத்தர், பிரம்ம சமாஜிகள், மெமான் மகமதியர், கச்சி, சந்தால் முதலிய பூர்வ ஜாதியினர் முதலியவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. ஆயினும், இந்துச் சட்டமானது பூரணமாக மேற்குறித்த வகுப்பினர் ஒருவருக்கேனும் செல்லத்தக்கதல்ல. ஸ்மிருதிகளின்படியுள்ள இந்து கல்யாணச் சட்டத்தை நாயர்கள், சமணர்கள், சீக்கியர், பிரமசமாஜிகள், பூர்வசாதியினர் ஆகியவர் களுக்கு வழங்க முடியாது; மேலும் இந்துக்களில், பிராமணரைக் கொண்டு கல்யாணச் சடங்குகளை நடத்த முடியாதவர்களும், விவாகரத்து, புனர்விவாகம் இவற்றைத் தாராளமாகப் பெண்களுக்கு அனுமதிக்கக் கூடியவர்களுமான கீழ்சாதியாரில் பெரும்-பாலாருக்கும் இந்தச் சட்டத்தை வழங்க முடியாது. மனு சொல்லுகிறபடி இந்து வாரிசுச் சட்டம், இந்து விவாகச் சட்டத்தைப் பின்பற்றியதேயாகும். அங்ஙனமிருக்க, ஸ்மிருதிகளின்படியுள்ள கல்யாணச் சட்டங்களுக்கு விரோதமான விதிகளையுடைய வர்களுக்கு இந்து வாரிசுரிமைச் சட்டத்தை எவ்வாறு வழங்கலாம் என்பது விளங்கவில்லை. அது எவ்வாறாயினும் மகமதியர், கிறிஸ்தவர் நீங்கலாகவுள்ள இந்தியர் அனைவருக்கும் இந்துச் சட்டம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இவ்வகுப்பார்களின் மத ஸ்தா-பனங்களை இந்து மத ஸ்தாபனங்கள் என்ற பிரிவின் கீழ் கொண்டு வருவது கஷ்டமான காரியமாகும்.
நாயர்களைப் பொறுத்தமட்டிலும், அவர்கள் இந்துப் பழக்க வழக்கத்துக்கு மாறுபட்ட கல்யாணச் சடங்குகளையும், வாரிசுரிமைச் சட்டங் களையும் கொண்டிருந்த போதிலும், அவர்கள் இந்து தெய்வங் களையே வழி-படுகிறார்கள். ஆகையினால், மற்ற விஷயங்களில் அவர்களுக்கு வேண்டிய சட்டமானது இந்துச் சட்டத்தினின்றும் வேறுபட்டிருந்த போதிலும், மத ஸ்தாபனங்களைப் பொறுத்த வரையில் இந்துச் சட்டமானது அவர்களுக்கும் பொருத்த முடையதுதான். அவ்வாறே ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது.
1817-ஆம் ஆண்டு 7-வது ரெகுலேஷன்படி ரெவனியூ போர்டுகளுடைய ஆதிக்கத்தின்கீழ் மலையாளத்திலுள்ள பல நாயர் கோவில்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. சில சீக்கியர்களும், இந்துக் கடவுள்களை வணங்குகிறார்கள். ஆனால், அவர்களில் முக்கிய மானவர்கள் விக்கிரக ஆராதனையைப் பூராவாக விட்டுவிட்ட படியால், இந்துமத தர்ம பரிபாலனச் சட்டம் அவர்களையுங் கட்டுப்-படுத்துமெனக் கருத முடியாது. எனினும், 1863-ஆம் ஆண்டு 20-ஆவது சட்டம் சீக்கிய மத ஸ்தாபனங்களையும் கட்டுப்படுத்து மெனக் கொள்ளப்பட்டிருக்கிறது. சமணர்களும், இந்துமதத் தெய்வங்களை வணங்குவதில்லை; எனினும், இந்தச் சட்டமானது சமண மத ஸ்தாபனங்களையும் கட்டுப்படுத்துமென்று கொள்ளப்படுகிறது. இதேமாதிரி தான் பௌத்த கோவில்களும், பிரம்மசமாஜ தர்ம ஸ்தாபனங்களும், இச்சட்டத்தின் அதிகாரத்துக்குள் கொண்டு வரப்பட்டிருக்-கின்றன. எனவே, இந்துக் கடவுள்களை வணங்குகிற, தாழ்ந்த சாதி இந்துக்களையும், ஆதிகாலந்தொட்டே இந்தியாவில் இருந்து வருகிற பூர்வ குடியினரையும் இந்தச் சட்டத்தைப் பொறுத்தமட்டில் இந்துக்-களாகவே கருத வேண்டும். (அதாவது 1863-ஆம் வருஷத்து 20-வது சட்டம்).
அவ்வாறு அவர்களை இந்துக்களாகக் கருதாததே துன்பத்துக் கிடமாயிற்று. ஏன் அவ்வாறு கருதப்படவில்லையென்பதே கேள்வி.
மகமதியர், கிறிஸ்தவரல்லாத சகல இந்தியருக்கும், இந்துச் சட்டம் வழங்கப்பட்டு வருகிறது என்று வங்காளச் சட்ட நிபுணரான ஜே.ஸி. கோஷ் அபிப்பிராயப்படுகிறார்.
மத சம்பந்தமாக இந்து என்பது யார் என்ற கேள்வியைப் பொறுத்து, சர் எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களுடைய கருத்து ருசிகரமானதாகும்:-
பூர்வ குடிகளும், காட்டுமிராண்டிகளும், அரைகுறையான நாகரிகமடைந்த வகுப்பினரும், கல்வி கற்ற திராவிடர்களும், வேத ஆரியர்களும் ஒரே தாய்மக்களாதலால் இந்துக்கள் தாம் ………………. இந்து மதம் சமயப் பித்தையும் குறுகிய மனப்பான்மையையும் உண்டு பண்ணவில்லை; ஆனால், எதற்கும் இடங்கொடுக்கக் கூடிய பரந்த தர்ம சிந்தனையுள்ள மனப்பான்மையை உண்டு பண்ணிற்று. பெரும்பாலும் ஆரிய அய்தீகத்துக்குப் புறம்பான பூர்வ தேவதைகள் ஒன்றுக்குப் பத்தாகப் பெருகுவதை அது ஒப்புக்கொண்டதோடு, அவ்வாறு ஏற்பட்டது சரியென்றும் அங்கீகரித்தது. கடவுள் நம்பிக்கையுடையவர்கள் அனைவரையும் ஒன்றாகச் சேர்த்தது. பல்வேறுபட்ட கொள்கைகளையுடையவர்கள் இன்று இந்து மதத்திலிருக்கின்றார்கள்… அனேக மதஸ்தரும், சாதியாரும் மிருகங்களைத் தெய்வமாகக் கொண்டிருந்தார்கள். இவர்கள் இந்து சமூகத்தைச் சேர்ந்தபோது, அவர்களுடைய மிருக தேவதைகள் இந்துக் கடவுள்களுக்கு வாகனங்களாகவும், துணைவர்களாகவும் அமைக்கப்பட்டன. ஒரு கடவுளுக்கு மயில் வாகனம்; மற்றொருவர் அன்னத்தின் மீதேறுகிறார். ஒரு கடவுள் எருதையும், மற்றொரு கடவுள் ஆட்டையும் வாகனமாகக் கொண்டிருக்கின்றனர். …………. மிக உயரிய நாகரிக மெய்தியுள்ள திராவிடர்களோடு சேர்ந்ததனால், வேத மதம் ஆஸ்திக மதமாக மாறியது. திராவிடர்களுக்கு சிறப்பான விக்கிரக வணக்கத்தை ஆரியர்களும் கைக் கொண்டார்கள்.
பல வடிவங்களையுமுடைய காளி தேவதை அனாரிய, திராவிடத் தேவதை யென்பது வெளிப்படை….. ஆஸ்திகரும், நாஸ்திகரும், கடவுள் நம்பிக்கையுடையவர்களும், நிரீச்சுவர வாதிகளும், சகல பேரும் இந்துக்களாகவே இருக்கலாம்; அவர்கள் இந்துமத சம்பிரதாயங்-களை ஒப்புக் கொண்டாற்போதும். இந்து மதத்தை ஒரு தனிக் கருத்தை அடிப்படையாகக் கொண்டது என்று சொல்வதைவிட மனிதருடைய வாழ்க்கை முறையைப் பற்றியது என்று சொல்வதே மிகப் பொருத்தமாக இருக்கும்.
ஆகையினால், இந்து யார் என்று விவரிப்பதில், திரு. ஜே.ஸி. கோஷ் சொல்வது போல அவ்வளவு கஷ்டமில்லை. பல வருஷங்களுக்கு முன் கிறிஸ்தவர்களுக்காக இந்திய சட்டசபை ஒரு வாரிசுரிமைச் சட்டத்தை மிக எளிதாக ஏற்படுத்தி, அதற்கு இந்தியர் வாரிசுரிமைச் சட்டம் என்று பெயருமிட்டு, அதற்கு மகமதியர், சமணர், பௌத்தர், பார்சி முதலியோர் அல்லாத ஒவ்வொரு இந்தியனுக்கும் இது செல்லத்தக்கது என்றும் வரையறுத்தது. பிரிட்டிஷ் இந்தியாவில் கிறிஸ்தவர்கள் தொகை மொத்த ஜனத் தொகையில் நூற்றுக்கு மூன்று சதவீதந்தான். இம்மாதிரிச் சட்டமியற்றினது மிகவும் வேடிக்கையான முறையாகும். ஆதிகாலந் தொட்டே இந்தியாவில் நிலைபெற்று வரும் மதம் இந்து மதந்தான். இன்றுகூட, பிரிட்டிஷ் இந்தியாவில் மொத்த ஜனத் தொகையில் மூன்றில் இருபாகத்தினர் இந்துக்களாகவே இருக்கின்றார்கள்.
வட்டமேஜை மாநாட்டில் டாக்டர் மூஞ்சே சொன்னதுபோல, இந்தியர் ஒவ்வொருவரும் இந்துவேயென்று சொன்னால் அதில் ஆச்சரியப்படத்தக்கது எதுவுமில்லை. இருந்தாலும், தென் இந்தியாவில் மாண்ட்-போர்டு சீர்திருத் தங்களின்படி தேர்தல் தொகுதிகளை வகுக்கப் புகுந்த சென்னை அரசாங்கத்தார், இந்துத் தொகுதியென்று சொல்ல சங்கடப்பட்டு, முகமதியரல்லாதார் தொகுதியெனப் பெயரிட்டிருக்கிறார்கள்! எல்லாவற்றிலும் மேலாக, 1927-ஆம் வருஷம் நிறைவேறிய சென்னை இந்துமத தர்ம பரிபாலனச் சட்டத்திலுங்கூட எச்சரிக்கை-யுடனும், முன்யோசனையுடனும் இந்து என்றால் யாரென்பதைத் தெளிவுபடுத்தாமல் விடப்-பட்டிருக்கிறது. இந்தக் குறையிலிருந்து தான் இவ்வளவு சச்சரவுகளும் கிளம்பி விட்டன. ஆனால், இந்து என்ற பதத்தை எளிதாக விவரித்து விடலாம். முகமதியர், கிறிஸ்தவர், பார்ஸிகளும், இந்தியாவுக்கு அன்னியமான மதத்தைச் சேர்ந்தவர் களும் நீங்கலாக ஏனைய இந்தியர் ஒவ்வொருவரும் இந்துதான்.
எனவே, சட்டப்படியும், நியாயத்தின்படியும், பிரிட்டிஷ் ஸர்க்கார் தங்கள் தஸ்தாவேஜிகள் மூலமாக யாரையெல்லாம் இந்துக்களாக அங்கீகரித்திருக்கிறார்களோ, அவர்களிடமெல்லாம் 1863-இல் இந்து மத ஸ்தாபனங்களை ஒப்புவித்ததாகக் கொள்ளப்பட வேண்டும். நீதி நியாயக் கோர்ட்டுகளும், ஸர்க்காரின் இத்தகைய குறிப்பான அல்லது வெளிப்படையான உறுதி மொழியினின்றும் பிறழுவதில்லையென்று வெளிப்படுத்தி-யிருக்கின்றன. சட்டப்படி கவர்ன்-மெண்ட்டாருடைய கருத்துக்கு விபரீதமாகப் போகக் கோர்ட்டுகளுக்கு அதிகாரமுமில்லை.
பல நூற்றாண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப்-பட்ட திட்டத்தின்படி நிர்வாக அதிகாரம் பெற்ற ஒரு டிரஸ்டியல்ல இந்த மகந்து. ஏற்கெனவே சுட்டிக் காட்டியுள்ளபடி இந்த திருப்பதி 1843-ஆம் ஆண்டு வரையிலும் (Public Authorities) அரசாங்க அதிகாரிகளுடைய பூரண ஆதிக்கத்திலேயே இருந்து வந்தது. 1843-ஆம் ஆண்டில் இந்தக் கோவில் நிர்வாகம் மகந்துவிடம் ஒப்புவிக்கப்பட்டது. இவ்வாறு செய்தது 1817-ஆம் ஆண்டுச் சட்டப்படி மத ஸ்தாபனங்களை நிர்வகித்து வந்த ரிவன்யூ போர்டாரின் ஏற்பாடேயாகும். இது கோர்ட்டில் முடிவு செய்யப்படும் ஒரு திட்டம் (Scheme) போன்றதாகும். எனவே, இதை அதே கோர்ட்டாரோ அல்லது வேறு கோர்ட்டாரோ அல்லது கவர்ன்மெண்ட்டோ மாற்ற முடியும்; அவ்வாறு மாற்றவோ திருத்தவோ ஸர்க்காருக்கு அதிகாரமுண்டு என திருப்பதி மகந்து வழக்கில் சென்னை ஹைக்கோர்ட்டார் கூறியிருக்கிறார்கள்.
நிர்வாகம் மாற்றப்பட்ட பிறகுங்கூட கடைசியாகப் பூரண அதிகாரம் பெற்றவர் கவர்ன்மெண்ட்டார்தாமென்றும், இந்த தேவஸ்தானக் கமிட்டிகளுக்கும், டிரஸ்டி-களுக்கும் கொடுக்கப்பட்ட அதிகாரம் காரியங்களை சரிவர நடத்தவேயன்றி, முற்றும் மத சம்பந்தமான விஷயங்களில் தலையிடு-வதற்கல்லவென்றும் இதிலிருந்து தெளிவாகிறது.
பிரிவி கவுன்ஸிலாரும் சமீபத்தில் இவ்வாறே குறிப்பிட்டிருக்கிறார்கள். 1863-ஆம் ஆண்டுச் சட்டம் நிறைவேறிய பிறகு, மத ஸ்தாபனங்களின் பரிபாலனம் கமிட்டிகள் வசம் ஒப்புவிக்கப்பட்டது; மானேஜர், சூப்பிரண்டு அல்லது டிரஸ்டிகளை நியமிக்கும் விஷயத்தில் ஸர்க்காருக்கு இதற்கு முன்னிருந்த அதிகாரங்களே இந்தக் கமிட்டிகளுக்கும் கொடுக்கப் பட்டனவென்று பொதுவாகச் சொல்லலாம். இதிலிருந்து நாம் முன் சொன்ன முடிவே உறுதிப்படுகின்றது; அதாவது, இந்துப் பொதுக் கோவிலுக்குள் பிரவேசிக்கவும், வணங்கவும் செல்லும் எந்த இந்துவையும் தடை செய்ய இந்த தேவஸ்தானக் கமிட்டிகளுக்கும், டிரஸ்டிகளுக்கும் அதிகாரமொன்றுமில்லை-யென்பதாகும்.
அவ்வாறு செய்ய கவர்ன்மெண்ட்டாருக்கு மட்டுமே, சட்டப்படி அதிகாரமுண்டு. ஆனால், இந்த கவர்ன்மெண்ட்டார் 1863-ஆம் வருஷத்துக்கு முன்னதாக இந்துக் கோவில்க-ளெல்லாம் அவர் களுடைய பூரண ஆதீனத்தி-லிருந்த போது, ஒவ்வொரு இந்துவுக்கும் இந்துவென்ற ஹோதாவில் , ஒவ்வொரு இந்து பொதுக் கோவிலுக்குள்ளும் நுழைந்து, தரிசிப்பதற்கு உரிமையுண்டு என்பதை, நாம் மேலே குறிப்பிட்டபடி, தங்களது நடத்தையால் குறிப்பாக அங்கீகரித்திருக்கின்றார்கள்.
முதன்முதலாக ஏற்பட்ட சென்னைக் கேஸ் ஒன்றில், விதவையை மணந்து கொண்ட பிராமணன் கர்ப்பக் கிரகத்துக்குள் போகலாமா என்ற பிரச்சினையெழுந்தபோது, ஜஸ்டிஸ் முத்துசுவாமி அய்யரவர்கள் ஆலயப் பிரவேச அனுமதி யளிப்பது சம்பந்தமாக மானேஜர் அல்லது டிரஸ்டியின் அதிகாரங்களைப் பற்றி அடியிற் கண்டவாறு அபிப்பிராயம் வெளியிட்டார்:-
எங்களுக்கு சாதி முறைப்படியுள்ள பொது ஆசாரங்களை அனுஷ்டித்து வரும் பிராமணர்-களை மட்டிலுமே கர்ப்பக் கிரகத்துக்குள் தொழவிட முடியும்; கல்யாண சம்பந்தமாக, நீர் சாதி ஆசாரத்தை மீறி விட்டீர்; ஆகையினால், சாதி முறைப்படி நடக்கக் கூடிய பிராமணர்களை மட்டும் அனுமதிக்கக் கூடிய பாகத்திற்கு உம்மை விட சட்டமில்லை யென்று சொல்வதற்கு மட்டுமே கோவில் மானேஜர்களுக்கு அதிகாரமுண்டு.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கோவில் ஒரு சாதியைச் சேர்ந்த கோவிலென்பதையும், பொதுக் கோவிலல்ல வென்பதையும் முதலாவதாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். மத சம்பந்தமானதும், ஒரு சாதியைச் சேர்ந்ததுமான கோவிலென்ற முறையில் அதன் தன்மையையும், குண விசேடத்தையும் கவனித்து என்று மேற்படி வழக்கு சம்பந்தமான (Remand)) உத்தரவில் கூறியிருப்பதிலிருந்து அது ஒரு பொதுக் கோவிலல்லவென்று வெளிப்படுகின்றது.
ஒரு சாதிக்கோ, கிராமத்துக்கோ சொந்தமான கோவிலைப் பொறுத்த வரையிலும் அடைக்கலம் (Trust) என்ற பிரச்சனையே அதிலில்லையென்பது பின்னர் விளக்கப்படும். இத்தகைய ஒரு வகுப்புக்குச் சொந்தமான கோவில் சம்பந்தப்பட்ட மட்டிலும் ஜஸ்டிஸ் முத்துசுவாமி அய்யரவர்களுடைய முடிவு ஒப்புக் கொள்ளக்கூடியதாக இருக்கலாம். ஆனால், ஒரு பொதுக் கோவிலைப் பொறுத்து வாதப் பிரதிவாதம் எழும்பொழுது, வர்ணாசிரமதர்மிகள் ஜஸ்டிஸ் முத்துசுவாமி அய்யரவர்களுடைய மேற்குறித்த தீர்ப்பையெடுத்துக் காட்டுவார்களானால் நாம் எச்சரிக்கையாக ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இங்கிலீஷ் சட்டத்தில் டிரஸ்ட் என்ற பதம் என்ன பொருளில் உபயோகிக்கப்படுகின்றதோ அந்தப் பொருளை யுணர்த்தும் அடைக்கலப் பொருள் பரிபாலனமானது இந்து சமூக வாழ்வுக்கே புதிதானதாகும்; இதை உணராமலே இக்காலத்தைப் போல அக்காலத்திலும் டிரஸ்டு என்ற பதத்தை உபயோகித்தார்கள். டிரஸ்ட் என்பதற்கும், டிரஸ்டி என்பதற்கும் இந்தியர்கள் கொள்ளும் பொருள் ஆங்கிலேயர்களுக்கு அதிசயத்தைக் கொடுக்கக் கூடும். இங்கிலீஷ் சட்டம் கொண்டுள்ள டிரஸ்டு அந்தச் சட்டத்திற்கே உரித்தானதாகும். இந்த டிரஸ்டு தத்துவமானது இங்கிலீஷ் வழக்கறிஞர்கள் இயற்றிய விசேஷச் செயலாகும். நாகரிகத்துக்கு இது மிகவும் இன்றியமையாததென நமக்குத் தோன்றின போதிலும், அயல்நாட்டுச் சட்டங்களில் இதைப்போன்றது எதுவு மில்லை.
உதாரணமாக ஜெர்மன் ஸிவில் சட்டத்தைப் பார்த்தால் அதில் டிரஸ்டு இல்லை. வேறெங்கு மில்லை. இது மற்ற நாட்டுச் சட்டங்களுக்குள்ள குறையாகுமென ஆங்கில வக்கீல்கள் கருதுகிறார்கள். ஆனால், அன்னியர்கள் அவ்வாறு குறை காணவில்லையென்று மெயிட்லண்ட் என்ற பேராசிரியர் (Professor Maitland) கூறுகிறார். இந்தியாவில், இங்கிலீஷ் சட்டம் நம்மை டிரஸ்ட் தத்துவங்களுடன் பிரிக்க முடியாதபடி பிணைத்து விட்டது என ஒரு பிரபல இந்திய ஜட்ஜி கூறுகிறார்.
டிரஸ்டு என்றால் என்ன? ஒரு வேலையைச் செய்யும் பொறுப்பை ஒருவர் மற்றொருவர் மீது சுமத்துவதாகும். சரி பங்கிடக் கூடியதும், சட்ட ரீதியானவையுமான பூஸ்திதிகளைப் பற்றிய செயற்கைத் திட்டம் சம்பந்தப்பட்டசிக்கலான விஷயங் களையெல்லாம் பரிபாஷையில் இங்கிலீஷ் வழக்கறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். இவற்றை இந்தியர்கள் உணர்வது கஷ்டமாகும். டிரஸ்ட் என்பதற்கு லெவின் (Lewin) என்பவர் குறிப்பிடும் விளக்கவுரை சரியான உரையாயினும், இங்கிலீஷ் முறையறியாத யொருவருக்கு அதை உணர்ந்து கொள்ள முடியாது. இண்டியன் டிரஸ்ட் சட்டத்தை அமைத்த இங்கிலீஷ் சட்ட நிபுணரும், டிரஸ்ட் என்பதை விளக்கப் புகும்போது ஆங்கில விளக்கவுரையைப் பின்பற்றிய போதிலும், அதை முற்றும் உணர்ந்தாரில்லை. குறிப்பிட்ட செயற்கையான சட்ட திட்டங்களின் பரிபாஷை லட்சணங்-களைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. சட்ட சாஸ்திரத்தின் பொதுத் தத்துவங்களைப் பின்பற்றினால் போது மானது என இந்து மத தர்மபரிபாலனங்கள், டிரஸ்ட்கள் சம்பந்தப் பட்ட சட்டங்களில் மேதாவியெனக் கொள்ளப்படும் திரு.ஜே.ஸி. கோஷ் கூறுகிறார்.
இந்த டிரஸ்டிகள், தேவஸ்தானக் கமிட்டிகள், பிரிட்டிஷ் ஸர்க்கார் இவர்கள் தவிர, வேறு யாருக்கு, இந்துப் பொதுக் கோவிலில் உயர்ந்த சாதி அல்லது தாழ்ந்த சாதி இந்துவைப் போகக் கூடாதெனத் தடுக்க உரிமையுண்டு?