கருவுற்ற பெண் கட்டாயம் சாப்பிட வேண்டியவை :

ஜனவரி 01-15

– நேயன்

கரு உருவாகி அது படிப்படியாக வளரும் காலகட்டத்தில் ஒரு தாய் ஆரோக்கியமாக இருந்து, ஆரோக்கியமான நல்ல உணவுகள் சாப்பிட்டால்தான் குழந்தை ஆரோக்கியமாக அழகாக அறிவாக வளரும். எனவே, கருவுற்ற பெண்கள் எதையெதை உண்ண வேண்டும் என்பதை அறிந்து உண்ண வேண்டும்.

கருவுற்றதில் இருந்து 3 மாதங்கள் வரை வாந்தி, மசக்கை, உணவில் விருப்பமின்மை, அதிக உமிழ்நீர்ச் சுரப்பு இருக்கும்.

இதற்கு, மாதுளம் பழச்சாறு அடிக்கடி பருகலாம். புதினா இலைச்சாறு, அல்லது கொத்துமல்லிச் சாற்றோடு எலுமிச்சைச் சாறு கலந்து பருகலாம்.

கறிவேப்பிலைச் சாறு அல்லது துவையல் தினமும் எடுக்கலாம்.

கறிவேப்பிலை + புதினா + மல்லி இலைச் சாறு சமஅளவு எடுத்து, அதோடு எலுமிச்சைச் சாறு கலந்து பருகலாம். அல்பகோடா பழத்தை வாயில் அடக்கிக் கொள்ளலாம். முதல் 3 மாதத்தில் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு உண்டு.

கருச்சிதைவை தடுக்கும் ஆற்றல் கீழே உள்ள பழங்களுக்கும் கீரைகளுக்கும் உண்டு.

பேரீச்சம் பழம் சாப்பிடலாம். அத்திப்பழம் ஜூஸ் நல்லது. அத்திக்காய் கூட்டு செய்தும் சாப்பிடலாம்.

பச்சைக் காய்கள், கீரைகள் அவசியம் உணவில் இருக்க வேண்டும். கீரைகளில் முருங்கைக்கீரை, முடக்கத்தான், கரிசலாங்-கண்ணி, சிறுகீரை, கறிவேப்பிலை, கொத்து-மல்லி, புதினா, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி போன்றவற்றில் அதிக இரும்புச்சத்து இருப்பதால் தினம் ஒன்று சாப்பிட வேண்டும்.

சிவப்பரிசியில் செய்த அவல் அல்லது புட்டு அல்லது சாதம் சாப்பிட சத்து கூடும்.

முளைவிட்ட தானியங்களைச் சுண்டலாக அல்லது பச்சையாக சாலட் செய்து சாப்பிடலாம். பிடிக்கவில்லையா? அந்த தானியங்களைத் தேங்காய் கலந்து பொரியல் செய்து சாப்பிடுங்கள். பாயசம் செய்து சாப்பிடுங்கள். லேசாக அவித்து அதை தோசை வார்க்கும்போது மாவின் மேலே தூவி சாப்பிடலாம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம், தானியங்கள் சிறிது முளைவிட்டால் போதும். அதிகமா முளைவிட்ட தானியங்கள் நல்லதல்ல.

முதல் 3 மாதங்களில் சாப்பிடக்கூடாதவை!

பப்பாளி, மாம்பழம், அன்னாசி, எள், செயற்கை உணவுகள், குளிர்ப்பானம், பன்றிக்கறி, பழைய சாதம் கண்டிப்பா தவிர்க்கணும். பன்றிக்கறியும் பழைய சாதமும் இந்த நேரத்தில் மந்தத்தை உருவாக்கும்.

அதிகக் குளிர்ச்சியைத் தரும் உணவுப் பொருட்களும் இப்போது நல்லதல்ல. குளிர்ச்சியால் சிலருக்குச் சுவாசச் சிக்கல் வர வாய்ப்புண்டு.

3 முதல் 6 மாதங்கள் வரை வரும் பிரச்சினைகள்:-

குடல் பகுதியை ஒட்டி கருப்பை இருப்பதாலும், உடலில் ஏற்படும் புதிய சில மாறுதல் காரணமாகவும் இந்தக் காலகட்டத்தில் மலச்சிக்கல் வருவது இயற்கை.

இதற்கு, ரோஜா இதழை குல்கந்து போல் செய்து சாப்பிடலாம். செவ்வாழை, மட்டிவாழை போன்றவை அதிகம் எடுக்கலாம். உலர்ந்த கறுப்பு திராட்சையை வெந்நீரீல் ஊறவைத்து, தேன் கலந்து உண்ண வேண்டும்.

மேலும் இந்த மாதங்களில், கருப்பை வளர்வதால் இரைப்பையின் மீது அழுத்தத்தை அது கொடுக்கும். இரைப்பையில் அமிலச்சுரப்பும் அதிகரிக்கும். இதனால் நெஞ்செரிச்சல், சாப்பிட்ட உணவு அப்படியே வயிற்றில் இருப்பது போன்ற உணர்வு, வயிறு உப்புசம் இதெல்லாம் வரும்.

இதற்கு, காலையில் சுக்குகாபி, இரவில் படுக்கும்போது கதகதப்பான வெந்நீரில் தேன் கலந்து சாப்பிடுங்கள். சீரகத்தை தண்ணீரிலிட்டுக் கொதிக்க வைத்துத் தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்துச் சாப்பிடுங்கள்.

இருவாட்சி இலைத் துவையல், பிரண்டைத் துவையல், கறிவேப்பிலைத் துவையல், புதினாத் துவையல், பீர்க்கன் தோல் துவையல் போன்றவற்றை உணவில் சேர்க்கலாம்.

மேற்கண்டவற்றைத் தொடர்ந்து செய்யும்போது இந்தக் காலகட்டத்தில் வரும் சிக்கல்கள் தீர்வதோடு தேவையான சத்துக்களும் கிடைக்கும்.

சாப்பிடக் கூடாதவை:

குளிர்ப்பானங்களும் எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகளும் பசியை மந்தப்படுத்தும் அதிகக் காரமும் _ மசாலாவும் செரிமானச் சிக்கலைத் தரும்.

7ஆம் மாதம் முதல் பிரசவம் வரையுள்ள காலத்தில், முதுகுப்புறத்தைத் தாங்கும் தசைகளின் மீதும் தசைநார்களின் மீதும் அதிக அழுத்தம் ஏற்படுவதால் இடுப்புவலி ஏற்படும். தசைப்பிடிப்பும் ஏற்படலாம். தசைகளுக்கும் எலும்புகளுக்கும் வன்மை கொடுத்து, உடலில் உள்ள அதிக வாயுவை நீக்கி, இடுப்பு எலும்பு மற்றும் மூட்டுகளுக்கும் வன்மை கொடுக்க வேண்டிய நேரம் இது.

இந்த மாதங்களில், முடக்கத்தான் துவையல் அல்லது தோசை சாப்பிடுங்கள். வேளா-வேளைக்கு சுக்கு காபி அவசியம்.

ஆவாரம்பூ, சிறுபயிறுக் கூட்டு, ஆவாரம் பூ காபி சாப்பிடவும். இஞ்சி, பூண்டுக் குழம்பு அல்லது துவையல் உணவில் அடிக்கடி இடம் பெறட்டும்.

உளுந்தங்களி, உளுந்துவடை, உளுந்தங்கஞ்சி… இப்படி உளுந்து சேர்ந்த பண்டங்கள் உண்பது அவசியம்.

இந்த உணவுகளால் இடுப்பு, முதுகு வலுப்பெறும். வலி, தசைப்பிடிப்பு இருக்காது.

மேலும் இம்மாதங்களில், அந்தப் பெண்ணுக்கு கால்வீக்கம், மலச்சிக்கல் அதிகம் இருக்கும்.

இதற்கு, சிறுகீரை வேரை நசுக்கி மிளகு, பூண்டு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து அரை டம்ளர் பருகலாம். பார்லி அரிசிக் கஞ்சி ஒரு வேளை வைத்து சாப்பிடலாம்.

சாரணைக் கீரையைக் கொதிக்க வைத்துப் பருகலாம். கலவைக் கீரையும் வாரம் ஒருமுறை விளக்கெண்ணெயில் (தரமான எண்ணெய்) தாளித்துச் சாப்பிட வேண்டும். அதிகத் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டாம்.

சாப்பிடக் கூடாதவை:

சிப்ஸ் போன்ற உப்பு நிறைந்த நொறுக்குத் தீனிகள், உருளை, வாழைக்காய், பட்டாணி மாதிரியான வாயுவை உண்டுபண்ணும் பொருட்கள், மீந்த பழைய உணவுப் பொருட்கள் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *