வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

ஜனவரி 01-15

பூ

பூ என்பது பூமி. உலகத்தைக் குறிக்கும் போது அது வடசொல் அல்லவா என்றார் மேற்படி அன்பர். அன்று, அது தூய தமிழ்ச் சொல்லே.

பூமேவு புல்லைப் பொருந்து குமரேசர் என்பதற்கு மலர் மேவிய சோலையுள்ள புல்வயல் என்ற ஊர் என்று ஒரு புலவர் பொருள் கூறியிருந்ததும் நம் நினைவிற்கு வருகின்றது. அது பிழை, பூமேவு-உலகில் அமைந்த என்று தான் பொருள் கூறவேண்டும்.

பூ எனினும் மலர் எனினும் உலகையே குறிக்கும் என்பது எதனாற் பெறப்படும் என்று கூறுவோம்.

இவ்வுலகுக்குத் தமிழர் கொடுத்த எண்ணூல் என்ற தத்துவ நூலில் (கபிலம், கபிலா, சாங்கியம்) ஆதி ஆகிய அதாவது முதன்மை (மூல பிரகிருதி)யை அரும்பு என்றும், தன் மலர்ச்சியை _ –மலரை இந்த உலகம் என்றும் சொல்லி வைத்தார் திருவாரூர்க் கபிலர். அன்று தொடங்கியே பூ உலகுக்கு வழங்கலாயிற்று. வடவரும் அதையே எடுத்தாண்டனர். எண்ணூலையும் வடமொழியில் பெயர்த்தார்கள் அன்றோ! திருக்குறளில் வரும் மலர்மிசை ஏகினான் என்பதில் வரும் மலருக்கும், உலகு என்றே பொருள் கொள்ள வேண்டும். இவ்வாறு பொருள் கொள்ளத் தவறியதால் அதற்கு பலவாறு பொருள் கூறியிருக்கிறார்கள் பலர்.

எனவே, பூ உலகைக் குறிக்கையிலும் அது தூய தமிழ்ச் சொல்லே என்க!
(குயில்: குரல்: 1, இசை: 21, 21–_10_-1958)

வினயம்

இது தூய தமிழ்ச் சொல். வினையம் என்பது இவ்வாறு திரிந்தது என்பர் வடவர்.

வினை என்பது அதன் பயனுக்கு வினையம் ஈறு திரிந்து ஆகுபெயர் ஆயிற்று. வினை இரண்டு: நல்வினை, தீவினை, வினையம் இரண்டு: நல்வினையம், தீவினையம். ஆயினும் வினையம் என்பது, நல்வினையம் தீவினையம் என்று ஏற்றவாறு பொருள் கொள்ள வேண்டும்.

நல்வினையம் என்ற இடத்தில் வரும் வினையம் வணக்கம், அடக்கம், அறிவு என்ற பொருள்களைத் தந்து நிற்கும். தீவினையம் என்ற இடத்தில் வரும் வினையம் அவற்றிற்கு மாறான பொருளைத் தந்து நிற்கும்!

ஆயினும் புராணக்காலப் புயலில் சிக்குண்ட புலவர்கள் நல்ல பொருளில் எடுத்தாளும்போது இச் சொல்லை வினையம் என்ற தீய பொருளில் குறிக்கலாயினர். அதனால் அண்மைக் காலத்து அகரவரிசை நூற்களில், வினையம் _ -வணக்கம், அடக்கம், அறிவு என்று பொருள் காட்டினர். வினையம்-தீய வினைப்பயன் என்று கொண்டனர் புலவர்.

கம்பராமாயணச் செய்யுள்:

இளையநற் காதை முற்றும் எழுதினோர் வியந்தோர்கள்
அனையது தன்னைச் சொல்வோர்க்கு அரும்பொருள்
கொடுத்துக் கேட்டோர்
கனைகடற் புடவிமீதே காவலர்க்கு அரசாய் வாழ்ந்து
வினையம் அது அறுத்து மேலாம் விண்ணவன் பதத்திற் சேர்வார்.
என்பதில் வினையம் காண்க.
எனவே வினயம் வினையமே தூய தமிழ்ச் சொல்லே.
(குயில்: குரல்: 1, இசை: 23, 4-11-1958)

புருவம்

புரை, புரைவு, புரைவம் அனைத்தும் உயர்வின் பெயர். இஃது புருவம் என மருவிற்று. உயர் இடம், மேடு என்பன கொள்க. முகத்தில் குறிப்பிடத்தக்கதாகிய கண்ணுறுப்பினும் உயர்ந்திருப்பது என்ற காரணம் பற்றி வந்த பெயர்.

புணர்ப் புள்ளுறுத்த புரைபதம்        (பெருங்கதை இலாவணகாண்டம்)
இதில் புரை உயர்வு குறித்ததைக் காண்க!

விரைவிரியார் புரைவுறப் புணர்த்த
(பெருங்கதை உஞ்சை)
இதில் புரைவு, உயர்வு குறித்தது காண்க.

இனி, புரைவு அம் சாரியை பெற்றுவரும் மன்று மன்றம் என வந்தது போல். எனவே புரை, புரைவு, புருவம் இவை உயர்ந்த இடத்துக்கும் ஆம். போது ஆகுபெயர் எனப்படும்.

எனவே புருவம் தூய தமிழ்ச் சொல்லே எனக் கடைபிடிக்க.

(குயில்: குரல்: 1, இசை: 24, 11-11-1958) ஸீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *