ஆகமம் என்றால் என்ன?
ஓர் ஊர், நகர கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும், அங்கு கோயில், சிலைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதுவரை அனைத்து வாழ்வியலையும் சொல்லும் கோட்பாடுதான் ஆகமம் என்கிறோம். ஒரு பார்முலா என்று சொல்லலாம்.
ஆகம விதிப்படி அனைத்து சாதியினருமே அர்ச்சகராகலாமா?
ஆகமத்தில் எங்கேயுமே சாதியைப் பற்றி சொல்லவே இல்லை. ஏனெனில் தமிழர்களிடத்தில் சாதியே இல்லை.
உண்மையான தமிழரின் ஆகமப்படி ஆதி சைவனாக இருக்க வேண்டும். ஒரு குருவால் தீட்சை பெற்றவனாக இருக்க வேண்டும். ஆகம சூலம் எனும் ஒழுக்கமும், பயிற்சியும் கொண்டவனாக இருந்தால் கோயில்பணிகள் செய்யலாம் என்று ஆகமம் சொல்கிறது. மேலும் முக்கியமாக ஆகமப்படி பூணூல் வலியுறுத்தப்படவில்லை. எனவே அதை அணிய வேண்டியத் தேவையில்லை. ஆகம அறிவு பெற ஆகமப் பயிற்சி பள்ளி நியமித்த அரசு, அதன்பின் அவர் அர்ச்சகராகத் தகுதி பெற தீட்சைக் கொடுக்கப்படுவதையும் ஒரு வழிகாட்டுதலாக ஆணையில் சேர்த்தால் எதிர்காலத்தில் எப்போதும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமைக்கு இடர்கள் ஏற்படாது.
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற உரிமையை உறுதிப்படுத்துகிறதா உச்சநீதிமன்றம்?
இந்த வழக்கில் நான் வக்காலத்து போட்டுள்ளேன். அவ்வகையில் இத்தீர்ப்பு குறித்து நெருக்கமான அறிமுகம் உண்டு என்ற அடிப்படையில் சொல்கிறேன். எந்தெந்தக் கோயில்கள் எந்தெந்த ஆகமப்படி அமைந்ததோ அந்த ஆகம அறிவு பெற்ற, தகுதி பெற்றவரை அர்ச்சகராக நியமிக்கலாம்.
அதேசமயம் குறிப்பிட்ட கோயில் ஆகமம் சமத்துவத்தை உறுதி செய்கிற சட்டப்பிரிவு 14_க்கு எதிராக இருக்குமானால் அந்தப் பகுதியை விலக்கிவிட்டு, ஆகமத்து வழிபாட்டு முறைகள் மட்டும் கொண்டு அதன் அடிப்படையில் தகுதியை வைத்தே அர்ச்சகர் நியமிக்கணும். அதாவது பிறப்பின் அடிப்படையில் உரிமை என்றபடியான ஆகமம் இடைச்செருகலாக இருந்தால் அதைப் புறக்கணிக்கணும் என்பதுதான் இந்தத் தீர்ப்பின் பொருள். மேலும் தீர்ப்பில் சாதி அடிப்படையில் ஆகமம் இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை என்று தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற உரிமையை உறுதிப்படுத்துகிறது. ஆக ஆகமப் பயிற்சிப் பள்ளிகளில் பயின்று முழுத் தகுதியோடு காத்திருக்கும் அனைத்துச் சாதிகளையும் சார்ந்த 207 மாணவர்களையும் அர்ச்கராக்கலாம். தமிழக அரசு அதற்காக முயற்சிக்க வேண்டும்.
சமஸ்கிருதம் படித்த பிராமணர்களுக்கு மட்டுமே உரியதுதான் ஆகமங்களா? அவர்களுக்கு மட்டுமேயான சொத்தா அது?
இல்லவே இல்லை. உண்மையில் ஆகமங்களை உருவாக்கியதே தமிழர்கள்தான். தமிழர்களுடைய சிந்து சமவெளி நாகரிகத்தின் நகரங்கள் ஆகம விதிப்படிதான் கட்டமைக்கப்பட்டன. அங்கே நடராஜர் உருவம் இருந்துள்ளது. பிற்பாடு படையெடுத்த ஆரியர் நம்மிடம் இருந்த சிறப்புகளை கொள்ளையடிக்கத் தொடங்கினர். அவர்களின் நான்கு வேதங்களில் எங்குமே கோயில்களே இல்லை. கோயில் இருந்தால்தானே அங்கே ஆகமம் இருக்கும்? இப்போதுள்ள காசி கோயில்கூட ஆகமப்படி இல்லை.
ஆகம விதிப்படி உள்ள கோயில்களில் இப்போது சமஸ்கிருதம் பயின்ற பிராமணர்கள்தானே பூஜை செய்கின்றனர்?
கி.பி.5ஆம் நூற்றாண்டில் பல்லவர்கள் இங்கே வந்த காலத்தில் பரத்வாஜ கோத்திர ஆரியர்கள்தான் வடமொழியோடு வந்தார்கள். அதிகாரத்தைப் பிடித்தபின் தமிழ் கோயில்களில் வடமொழியைக் கலந்தார்கள். தமிழ் ஆகமப்படி நடந்த அனைத்தையும் வடமொழியில் மாற்றினார்கள். அதுவரை எழுத்து வடிவமே இல்லாத வடமொழிக்கு பல்லவர் கிரந்தம் என எழுத்து வடிவம் கிடைத்தது. இதன் போக்குகள் 8ஆம் நூற்றாண்டில் இறுகி முதல்முதலாக வடமொழி ஆகமம் உருவாகி உறுதியானது. தொல்காப்பியம் போதித்த தொழில்முறை பிரிவுகளை பிறப்பின் அடிப்படையிலான பிரிவாக மாற்றி, அந்தணர் என்றால் பிராமணர் என்று மாற்றி வர்ணாஸ்ரமத்தை நுழைத்தனர். உண்மையில் சிவாச்சாரியார்கள் பிராமணர்கள் அல்ல. அவர்கள் நமது தமிழர்களே. இவை எல்லாம் விட ஆகமம் என்றால் ‘உயிரின் இயற்கை’ என்று தமிழில் பொருள். அதையே வடமொழியில் ‘வந்தது’ என்று மொழியாக்கம் செய்துள்ளனர். ஆக அவர்களே இதை வந்த ஒன்றுதான் என்கின்றனர்.
ஆகமங்கள் என்பது பார்ப்பனர்களுக்கு மட்டுமானது அல்ல, அனைத்துப் பிரிவு மக்களுக்கானது, ஆனால் பார்ப்பனர்கள் இந்த ஆகமத்தை தங்களுக்கு ஏற்றாற்போல் மாற்றிவிட்டனர். ஆகமவிதிகளை சாஸ்திரங்களை யாரும் கற்கலாம் அதில் அதிக புலமை பெறலாம். அப்படி அதிக புலமை பெற்றவர்கள் அந்த ஆகமவிதிகளை முறையாகக் கையாள்பவர்கள் என்றே பொருள் ஆகும். தற்போது தமிழக அரசு செய்ய வேண்டியது உடனடியாக ஆகமவிதிப்படி பயிற்சி பெற்ற அனைவரையும் இந்து அறநிலையத்துறையின் கீழ் வரும் கோவில்களில் அர்ச்சகராக பணிநியமனம் செய்யவேண்டும். 2006ஆம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற நல்லவாய்ப்பு கிடைத்துள்ளது.
நீதிமன்றம் பார்ப்பனர்கள் மட்டுமே என்று கூறவில்லை
நீதிமன்றத்தீர்ப்பில் ஆகம விதிகள் என்ற பதம் தான் பயன்படுத்தப்பட் டுள்ளது. அதனடிப்படையில் ஆகமவிதிகளைக் கற்றவர்கள் அனைவருமே தீர்ப்பின் கீழ் வருவார்கள். நீதிமன்றம் குறிப்பிட்ட ஜாதியினரையோ அல்லது பார்ப்பனர்களையோ குறிப்பிடவில்லை என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.
தற்போது கோவில் களில் ஆகமவிதிகள் ஒரே மாதிரியாக உள்ளனவா?
இது சைவமதத்தில் ஆரம்பத்தில் கடைப்பிடிக்கப் பட்டு வந்தது. ஆரம்பத்தில் உள்ள விதிகள் அனைத்தையும் பார்ப்பனர்கள் தங்களுக்கு ஏற்றாற்போல் மாற்றிவிட்டனர். பிறகு இது வைணவ ஆகமங்கள் என்று புதிதாக வகுக்கப்பட்டது.
இந்த ஆகமங்கள் அனைத்துமே வேறு வேறு விதிமுறைகளைக் கொண்டவை, மேலும் கோவிலுக்கு ஏற்றாற் போல் அர்ச்சகர்கள் தாங்களாகவே பலவிதிகளை சேர்த்துக் கொண்டனர். சைவ ஆகமங்கள் 28 ஆகும், ஆனால் இந்த 28 ஆகமங்களும் இன்று கடைப்பிடிக்கப்படுவதில்லை, இன்று 6 வகையான ஆகமங்கள் மட்டுமே நடை முறையில் உள்ளன.
கர்னகாமா மற்றும் காமிககாமா என்ற இரண்டு வகை உட்பிரிவுகள் சைவ கோவில்களில் உள்ளன. காமிககாமா மிகவும் குறைந்த அளவே தற்போது கடைப்பிடிக்கப் பட்டுவருகிறது. பெரும் பாலான கோவில்களில் கர்னகாமா ஆகமவிதிகள் தான் பின்பற்றப்பட்டு வருகின்றன.
ஊரையே நம்ப வைத்த பார்ப்பனர்கள்
எந்த ஒரு ஆகமமும் பார்ப்பனர்கள் தான் அர்ச்சகராக வேண்டும் என்று கூறவில்லை, ஆனால் ஏன் பார்ப் பனர்கள் மட்டுமே அர்ச் சகர்களாக உள்ளனர்?
புதனன்று வெளிவந்த தீர்ப்பின் படி பார்ப் பனர்கள் அல்லாதோர் கோவில்களில் அர்ச்ச கர்கள் ஆகமுடியுமா?
ஆமாம் இந்தத் தீர்ப்பு அனைவருக்கும் கிடைத்த வரப்பிரசாதமே, இந்தத் தீர்ப்பில் எந்த இடத்திலும் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் என்று சுருக்கிவிடவில்லை, மேலும் அன்றைய தமிழக அரசின் அரசாணையை ரத்துசெய்யவும் இல்லை, ஆகவே இது அனைத்துப் பிரிவு பயிற்சி பெற்ற அர்ச்சக மாணவர்களுக்கும், இதற்காகப் போராடிய அனைவருக்கும் கிடைத்த வெற்றியே, ஆகவே தமிழக அரசு உடனடியாகப் பயிற்சி பெற்ற அனைவருக்கும் கோவில்களில் பணி நியமனம் வழங்கவேண்டும், அனைவருக்கும் ஒரே மாதி ரியான வாய்ப்புக்¢ கிடைக்க வேண்டும்.
அரசு தலையிட முடியுமா?
கோவில் தினசரி நடவடிக்கையில் அரசு எப்படி தலையிட முடியும்?
இது தலையீடு என்று கூறமுடியாது அரசு அனைவருக்கும் சமமான வாய்ப்பை அளிக்க வேண்டும். அது மத வழிபாட்டுத் தலங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். இது கோவில்களின் புனிதத்தைக் கெடுப்பதாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிரானதாகவோ கருத வேண்டாம். எங்கு சமூகநீதிக்குப் பங்கம் ஏற்பட்டாலும் அங்கு அரசு தலையிடவேண்டும்.
கோவில்கள் அவர் களுக்கு என்று சில விதி களை வகுத்துக் கொண்டு தீர்ப்பை நடைமுறைப்படுத்தவிடாமல் தடுக்கலாமே?
எந்த கோவிலுக்கும் தனிப்பட்ட விதிகள் கிடையாது, அவர்களாகவே இது சரி, இது தவறு என்று கூறவும் முடியாது, ஆகமம் என்பது அனைவருக்கும் பொதுவானதே, ஆகமம் தெரிந்தவர்கள் யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் வேலையைச் செய்யலாம். தீர்ப்பை நடைமுறைப்படுத்தியே ஆகவேண்டும்.
தொகுப்பு: ஊழியன்