18.3.1979இல் கோவை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் ஈரோட்டில் தந்தை பெரியார் நூற்றாண்டு விழா, பெரியார் மன்றத்தில் வர்ணனைக்கு வார்த்தை வறுமை வழங்கும் வகையில் எழுச்சியுடன் நடைபெற்றது. விழாவில் நான் கலந்துகொண்டு உரையாற்றினேன்.
தந்தை பிறந்த மண்ணிலே இன்றைய தினம் மாபெரும் விழா நடைபெற்று இருக்கிறது. சரித்திரச் சிறப்பு வாய்ந்த விழாவாகவும் அமைந்திருக்கிறது. அதேநேரத்தில், சிறப்பான கொள்கை விழாவாக நடைபெற்று இருக்கிறது. மாபெரும் இனமானத்திருவிழாவாக அமைந்திருக்கிறது என்று குறிப்பிட்டேன்.
தந்தை பெரியார் அவர்கள் போராடிப் பெற்ற வகுப்புவாரி பிரதிநிதித்துவ உரிமையை (ரூ 9000 வருவாய் வரம்பு அரசு ஆணை மூலம்) இந்த அரசு முடமாக்கிட முனையுமானால், திராவிடர் கழகம் எந்த விலையையும் கொடுத்து அதனைத் தடுத்து நிறுத்தும். இங்கு நடைபெறும் விழா வெறும் வெளிச்சம் போடும் விழா அல்ல _ தந்தை பெரியார் அவர்களின் கொள்கையைக் காக்கும் விழா என்று எடுத்துரைத்தேன்.
விழாவில் கலந்துகொண்ட தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் குறிப்பிடுகையில்,
“வயதில் அறிவில் முதியோர் _ வாய்மைப் போருக்கு என்றும் இளையார் _ உயர் எண்ணங்கள் மலரும் சோலை’’ என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களால் புகழப்பெற்ற தன்மானத் தந்தை _ பகுத்தறிவு இயக்கத்தின் பகலவன் பெரியார் அவர்களுடைய நூற்றாண்டு விழாவை ஈரோடு திருநகரம் சீரோடும் சிறப்போடும் எழுச்சியோடும் உணர்ச்சியோடும் நேற்று, இன்று, நாளையும் கொண்டாடி அதற்குச் சிகரம் அமைத்தாற்போல இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் உங்களையெல்லாம் சந்திக்கின்ற வாய்ப்பினை நான் பெற்றிருக்கின்றேன் என்று குறிப்பிட்டார்.
இந்த ஈரோட்டுக் குருகுலத்தில் ஏறத்தாழ 34 ஆண்டுகளுக்கு முன்பு 1945ஆம் ஆண்டில் நான் பயின்றவன். தந்தை பொயாருடைய ‘குடிஅரசு’ வாரப் பத்திரிகையில் துணையாசிரியனாகப் பொறுப்பேற்று ஓராண்டுக் காலத்திற்கு மேலாக பெரியாரிடத்திலே பாடம் பெறுகின்ற வாய்ப்பினையும் பேற்றினையும் பெற்று, அன்னை மணியம்மையாருடைய கையினால் உணவு பரிமாறப் பெறும் பாக்கியத்தையும் பெற்று தந்தை பெரியாரின் கொள்கைகளை நாட்டு மக்களிடையே பரப்புகின்ற எழுத்துப் பணி _ பேச்சுப் பணி _ செயல்இவைகளிலே என்னை நான் ஒப்படைத்துக் கொண்டிருந்தவன் என்பதை இப்போதும் நான் உணர்ச்சியோடு எண்ணிப் பார்க்கிறேன்.
இந்த நகரத்திற்கு நான் அதற்குப் பிறகு எத்தனையோ முறை வந்திருக்கிறேன். எத்தனையோ அரசியல் கூட்டங்களிலே பேசி இருக்கிறேன். இன்றைக்கு நான் உங்களையெல்லாம் சந்திக்கிறேன் என்றால் _ தந்தை பெரியார் அவர்கள் இல்லாத நேரத்தில் _ பெரியார் என்பவர் ஒரு தனி மனிதரல்ல; அவர் ஒரு சகாப்தம்!
தமிழர்களுடைய வரலாறு!
அவர் ஒரு கொள்கை!
ஒரு இலட்சியம்! என்ற அந்த எண்ணத்தோடு இந்த விழாவினை நாம் இங்கே கொண்டாடுகின்றோம். அதிலேபெருமையோடு கலந்து கொள்கின்றோம்.
பெரியாருக்கு எல்லோரும் விழா எடுக்கிறார்களென்றால் அது வரவேற்கத்தக்க ஒன்றுதான்.
ஆனால், பெரியாருடைய பெயரைப் பயன்படுத்திக் கொண்டு அவருடைய விழா என்ற பெயரால் மக்களுடைய வரிப்பணத்தில் அரசாங்கத்தால் நடத்தப்படுகின்ற எந்த விழாவானாலும், அந்த விழாவுக்குரிய நாயகர் யாரோ அவரைப் பற்றிய சிறப்புகள் _ பெருமைகள் _ தனித்தன்மைகள் _ அவருடைய வரலாறு போதிக்கின்ற பாடம் _ அவர் வாழ்க்கையில் செய்த தியாகம் நாட்டுக்கு; மொழிக்கு; மக்களுக்கு ஆற்றிய தொண்டு இவைகளை எடுத்துச் சொல்வதுதான் பொருத்தமுடையதாக இருக்கும்.
பெரியார் அவர்கள் எந்ததெந்தக் கொள்கைகளுக்காகப் போரிட்டார்கள் _ எத்தகைய வெற்றிகளைப் பெற்றார்கள் _ இவற்றையெல்லாம் ஈரோட்டிலே இருக்கிற உங்களுக்கு நான் விளக்கமாக எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று கருதுகிறேன்.
இந்திய நாட்டுக்கான விடுதலைப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த-போது அந்தப் போராட்டத் தளபதிகளில் ஒருவராகத் திகழ்ந்தவர் பெரியார் என்பதை விடுதலை போராட்ட வரலாறு மறைத்துவிட முடியாது.
நான் இரண்டு திங்களுக்கு முன்பு மகமதலி நூற்றாண்டு விழாக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு பேசும்போது கூடக் குறிப்பிட்டேன்:
ஈரோட்டில் நடைபெற்ற ஒரு காங்கிரஸ் மாநாட்டிற்கு அலிசகோதரர்கள் வந்திருந்தார்கள் என்பதையும், அவர்கள் தந்தை பெரியார் இல்லத்திலேதான் தங்கியிருந்தார்கள் என்பதையும், பெரியார் தம் இல்லத்திலுள்ள பெண்டிரை அலி சகோதரர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் என்பதையும் _ அப்போது பக்கத்திலிருந்தவர்கள் அலி சகோதரர்களிடத்திலே தந்தை பெரியாருடைய அலுவல்களைப் பற்றி எவ்வாறெல்லாம் புகழ்ந்து பேசினார்கள் என்பதையும், அலி சகோதரர்கள் எழுந்து நின்று பெரியாருக்கும் _ இல்லத்தில் உள்ளவர்களுக்கும் எத்தகைய மரியாதையைச் செலுத்தினார்கள் என்பதையும், பெரியாருடைய அன்னையாரைப் பார்த்து அலி சகோதரர்கள் ‘இப்படிப்பட்ட வீரத் திருமகனைப் பெறுவதற்கு உங்களுடைய வயிறு என்ன பாக்கியம் செய்திருக்கிறதோ!’ என்று கேட்டார்கள் என்பதையும் எடுத்துக் காட்டினேன்.
உத்தமர் காந்தி அடிகள் காங்கிரஸ் இயக்கத்தை வேகமாக வளர்த்த நேரத்தில், விடுதலை இயக்கம் புயலென சீறிக் கிளம்பிய காலத்தில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை யாருக்காவது, ஏதாவது சந்தேகங்கள் எழுமானால் காந்தி அடிகள் அப்படிச் சந்தேகப்படுகின்றவர்களுக்கு விடை தரும்போது ‘ஈரோடு சென்று ஈ.வெ.ராவைக் கலந்து அவரது முடிவுப்படி காரியங்களை ஆற்றுங்கள்’ என்று சொல்லும் நிலையில்தான் இருந்தது!
எனவே, பெரியார் அவர்கள் சில கொள்கைகளை ஏற்றுக்கொள்வார். அவரே அதுபற்றிச் சிந்திப்பார் _ ஆராய்வார். அது சரியில்லை என்றால் நாம் ஏற்றுக்கொண்ட கொள்கையில் விடாப்பிடியாக இருக்க வேண்டும் என்றில்லாமல் நாட்டுக்கு நடைமுறைக்கு ஏற்ற வகையில் அந்தக் கொள்கைகளில் மாற்றங்கள் செய்வதாக-யிருந்தால் _ அவர் மதுவிலக்குச் சட்டம் தேவையில்லை என்று கூறினாலும் கூட மதுப்பழக்கம் அவர் பக்கத்திலேகூட தீண்டியது கிடையாது. மது குடித்தவர்களை அவர் அருகாமையில்கூடச் சேர்த்தது கிடையாது!
அந்த அளவுக்கு ஒழுக்கசீலராக _ உத்தமராக தந்தை பெரியார் அவர்கள் தனி வாழ்க்கையிலும் பொது வாழ்க்கையிலும் திகழ்ந்தார்கள்.
அவர்கள் மறைந்த நேரத்தில் அவரை எப்படி அடக்கம் செய்வது என்ற சர்ச்சை எழுந்தது.
நான் முதல்வர் பொறுப்பில் இருந்தேன். அதிகாரிகளையெல்லாம் கூப்பிட்டு உட்கார வைத்து நான் என்னுடைய இல்லத்திலே கலந்துரையாடினேன்.
வேலூர் மருத்துவமனையிலே பெரியார் மறைந்துவிட்டார் என்ற செய்தியை வீரமணி எனக்குத் தெரிவித்தார். அவர் தெரிவித்து ஒருமணி நேரம் ஆன பிறகுகூட சென்னை வானொலியில் அந்தச் செய்தி அறிவிக்கப்படவில்லை.
அதற்குப் பிறகு ஏன் சொல்லவில்லை என்று நானே தொடர்புகொண்டு கேட்ட பிறகு ‘ஈ.வெ.ராமசாமி நாயக்கர் வேலூர் மருத்துவமனையில் காலமாகிவிட்டார்’ என்று சொன்னார்கள்!
தொடர்ந்து சோகக் கீதம் ஒலிபரப்பப்பட்டதா என்றால் இல்லை! ஏதோ ஒரு செய்தியைப் போலச் சொன்னார்கள்.
அதற்குப் பிறகு நான் தமிழக அரசு அதிகாரிகளோடு பேசும்போது சொன்னேன்:
‘தந்தை பெரியாரின் உடல் அடக்கம் அரசு மரியாதையோடு நடைபெற வேண்டும். ராஜாஜி மண்டபத்தில் அவரது உடல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்’ என்று கூறினேன்.
உடனே அதிகாரிகளெல்லாம் கையைப் பிசைந்தார்கள் _ ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
‘என்ன திகைக்கிறீர்கள்? என்று கேட்டேன்.
‘சட்டமன்றத்திலோ அல்லது மேலவையிலோ எந்தப் பதவியிலும் பெரியார் இல்லை. ஆகவே அப்படிப்பட்டவருக்கு அரசாங்க மரியாதை நடத்துவது என்பது யாரும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. மத்திய அரசு நிச்சயமாக ஏற்றுக்கொள்ளாது’ என்று குறிப்பிட்டார்கள்.
நான் உடனே கேட்டேன் _ “சரி பெரியார் ஆட்சி மன்றத்தில் சட்டப் பேரவையிலோ மேலவையிலோ _ உறுப்பினராகவோ அமைச்சராகவோ இல்லை, ஒப்புக்கொள்கிறேன். காந்தியடிகளுக்கு அரசு மரியாதைகளோடு அடக்கம் செய்தார்களே அவர் எந்தச் சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தார்?’’ என்று நான் அதிகாரிகளைப் பார்த்துக் கேட்டேன்.
அவர்கள் ‘காந்தி விவகாரம் வேறு’ என்றார்கள்.
நான் சொன்னேன் _
‘அதே விவகாரம்தான் இதற்கும்’ என்றேன்.
‘இல்லை மத்திய சர்க்காருக்காவாவது பார்க்க வேண்டும்; அவர்கள் மறுப்பார்கள்’ என்றார்கள்.
நான் அதிகாரிகளிடம் சொன்ன வார்த்தை என் உள்ளத்திலே அதே உறுதியோடு இருக்கிறது.
“அரச மரியாதையோடு பெரியாரை அடக்கம் செய்தோம் என்ற காரணத்திற்காக இந்த ஆட்சியை பதவி இறக்கம் செய்வார்களானால் _ நான் அதற்குத் தயாராக இருக்கிறேன் _ செய்யவேண்டிய காரியங்களைப் பாருங்கள்’’ என்று நான் அறிவித்தேன்.
உடனடியாக அவர்கள் என்னுடைய ஆணையை ஏற்றுக்கொண்டு அரசாங்க மரியாதையோடு பெரியார் உடல் அடக்கம் செய்யப்படும் என்று கூறி தமிழ்நாடு அரசு கெசட்டில் அது வெளியிடப்பட்டு அடுத்த கணம் மத்திய அரசிலிருந்து தாக்கீது பிறப்பிக்கப்பட்டு பெரியார் உடல் அரசு மரியாதையோடு அடக்கம் செய்யப்பட்டது.
அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்ட மறுநாள் நான் செய்தியாளர்களிடம் பேசும்போது சொன்னேன்: ‘தந்தை பெரியாருடைய உடல் அரசு மரியாதையோடு அடக்கம் செய்யப்பட்டிருந்தாலும் அவருடைய இருதயத்தில் ஒரு முள் தைத்திருக்கிறது. அந்த முள்ளை எடுக்க முடியாத பாவியாக நான் இருந்துவிட்டேன். அந்த முள்ளை அகற்ற முடியவில்லை என்றால் ‘அந்த முள்ளைச்’ சேர்த்து வைத்துத்தான் அவரை புதைத்திருக்கிறோம் என்று நான் சொன்னேன்.
என்ன முள் அது?
பெரியாரின் விருப்பப்படி தி.மு.க. அரசு ஒரு சட்டத்தை நிறைவேற்றியது.
என்ன சட்டம் தெரியுமா?
ஆலயங்களில் அர்ச்சகர்களாக இருந்து ஆண்டவனைப் பூசிப்பவர்கள் ஒரு குலத்தைச் சார்ந்தவர்கள் உயர்குலத்தைச் சார்ந்தவர்கள்தான் என்ற முறை மாற்றப்பட்டு அவர்கள் எக்குலத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் தாழ்த்தப்பட்டவனாகவோ, செட்டியாராகவோ, பிள்ளையாகவோ ‘பிராமணனா’கவோ இருந்தாலும் _ அல்லது வேறு யாராக இருந்தாலும் அவர்கள் ஆண்டவனை அர்ச்சனை செய்கின்ற அந்தத் தேர்வில் வெற்றி பெற்றுவிடுவார்களானால்அவர்களை அந்த ஆலயத்தில் வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்பதுதான் அந்தச் சட்டம்.
தாழ்த்தப்பட்டவர்கள் ஆலயங்களிலே பூசை செய்வதற்காக ஒரு சட்டமா?- அவர்களுக்கு உத்தியோக உயர்வு வேண்டும். அவர்களுடைய வாழ்க்கையில் ஏராளமான வசதிகள் வேண்டும் என்றெல்லாம் திட்டமில்லாமல் இப்படி ஒரு சட்டமா? என்றெல்லாம் கேட்டார்கள்.
நான் அப்போதும் சொன்னேன் இப்போதும் சொல்லுகிறேன்.
அம்பேத்கருடைய போராட்டத்திற்குப் பிறகு காந்தியடிகள், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஆற்றிய தொண்டுக்குப் பிறகு தந்தை பெரியார் தாழ்த்தப்பட்ட மக்களை தன்மானத்தோடு நடமாடவிட வேண்டும் என்று ஆற்றிய கடமைகளுக்குப் பிறகு ஒரு ஆதிதிராவிடத் தோழன் ஒரு தாழ்த்தப்பட்ட நண்பன் _ ஒரு அய்.ஏ.எஸ். அதிகாரியாக ஆகலாம், கலெக்டராக ஆகலாம், கவர்னராகக் கூட ஆகிவிடலாம். ஆனால், இவைகளெல்லாம் ஆகலாம். ஆலயத்தில் ஒரு அர்ச்சகனாக ஆகமுடியாது என்றால் இதுபெரும் சமுதாயக் கொடுமை!
அய்.ஏ.எஸ். ஆக முடிகிறது, அர்ச்சகராக முடியவில்லை என்றால் இதைவிட சமுதாய ஏற்றத்தாழ்வு வேறு இருக்க முடியாது. எனவே, அதைக் களைய வேண்டுமென்றுதான் பெரியார் ஆசைப்பட்டார். அதன் விளைவுதான் இந்தச் சட்டம். அது சட்டமன்றத்திலே நிறைவேற்றப்பட்டது.
பிறகு மத்திய அரசின் ஒப்புதல் கூட அதற்குக் கிடைத்தது.
பிறகு, சிலபேர் உச்சநீதிமன்றத்திற்குச் சென்றார்கள் _ சனாதனிகள் அந்தச் சட்டத்தை நிறுத்து என்றார்கள்.
உச்சநீதிமன்றம் சில சாக்குப் போக்குகளைக் காட்டி அந்தச் சட்டம் எழுந்து நடக்க முடியாமல் முடமாக்கும் சூழ்நிலையை உருவாக்குகிறது.
அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியிடமும் பலமுறை இதுபற்றி எடுத்துச் சொன்னேன். தாழ்த்தப்பட்ட மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் என்று போற்றப்படுகிற பாபு ஜெகஜீவன்ராமிடத்திலும் பலமுறை எடுத்துச் சொன்னேன். எழுத்து மூலமாகவும் சில விவரங்களைத் தந்தேன்.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மாற்றப்பட வேண்டுமேயானால் அரசியல் சட்டத்திலே இதற்கு அடிப்படையான ஒரு மாற்றம் தேவை. அந்த மாற்றத்தைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன் _ ஆனால் செய்யவில்லை!
எனவேதான் பெரியார் ஆசைப்பட்ட அந்தச் சட்டத்தை நிறைவேற்ற முடியாமல், நிறைவேற்றி நடைமுறைக்குக் கொண்டுவர முடியாமல், அதற்காக ஒரு போராட்டமே நடத்தப் போகிறேன் என்று பெரியார் அறிவித்து _ அதை அறிவித்த சில நாட்களிலே மறைந்துவிட்ட காரணத்தால் அந்த முள்ளை அவரது இதயத்திலே வைத்துப் புதைக்கிறோம் என்று நான் குறிப்பிட்டேன்.
அதற்குப் பிறகு பெரியாருடைய சிலை திறப்பு விழா, _ அப்போதைய தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் ஆட்சியின் சார்பாக சென்னை அண்ணா மேம்பாலத்திற்குஅருகாமையில் நடைபெற்றது.
அந்த விழாவுக்கு அன்னை மணியம்மையார், வீரமணி போன்றோர் அழைக்கப்பட்டிருந்தார்கள்.
மணியம்மையார் பேசும்போது ‘தந்தை பெரியார் அவர்கள் அர்ச்சகர் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் _ நிறைவேற்றப்பட்ட சட்டம் உச்சநீதிமன்றத்தால் மறுக்கப்பட்டு விட்டது. அது நடைமுறைப்படுத்தப் பட்டாக வேண்டும் என்று கனவு கண்டார். அதை நிறைவேற்றாமலே மறைந்துவிட்டார். அன்றைய முதலமைச்சர் கருணாநிதிகூட பெரியார் இதயத்தில் இருந்த அந்த முள்ளோடு புதைத்துவிட்டதாகச் சொன்னார். இன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அந்த முள்ளை எடுப்பதற்கு முயற்சிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.
அடுத்துப் பேசிய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் “பெரியாரா அப்படிச் சொன்னார்? நம்ப முடியவில்லை, தாழ்த்தப்பட்டவர்களை அர்ச்சகர்களாக்க வேண்டும் என்றா பெரியார் விரும்பினார்? ஆலயங்களே பிடிக்காத பெரியார் இப்படி ஒரு அர்ச்சகர் சட்டத்தைப் பற்றி சொல்லி இருப்பாரா? எனக்குச் சந்தேகமாக இருக்கிறது’’ என்று அவருக்கே உரிய அய்யப்பாட்டோடு பேசினார்.
ஆலயங்களே வேண்டாம் என்று சொல்வது பெரியாரின் கொள்கை. தாழ்த்தப்பட்டவர்கள் அர்ச்சகராக வேண்டும் என்பது ஆலயங்கள் இருக்கிறவரை தாழ்த்தப்பட்டவர்களுக்கு தேவைப்படுகிற உரிமை. கொள்கைக்கும் உரிமைக்கும் உள்ள வேறுபாடுகளைப் பெரியாரைப் புரிந்து கொண்டவர்களால்தான் உணரமுடியும்.
பெரியாரைப் புரிந்து கொள்ளாதவர்களால் இதை உணர முடியாது.
ஆலயங்கள் தேவையில்லை. ஆண்டவர்கள் தேவையில்லை என்பது பெரியாருடைய கொள்கைதான்.
ஆனால், அந்த ஆலயத்தில் ஆண்டவன் இருக்கிறான், பூசிக்கப்பட வேண்டும் என்கின்ற நேரத்தில் அங்கே எல்லாச் சலுகைகளும் தந்து எல்லோரும் அனுமதிக்கப்பட வேண்டும் என்பது பெரியாரின் உரிமைப்போர் முழக்கம்!
அதற்குப் பிறகாவது முதலமைச்சர் நான் சொன்ன விவரங்களைப் புரிந்துகொண்டு அதற்கான நடவடிக்கைகளை எடுப்பார் என நம்பினோம் _ இதுவரை எடுக்கப்படவில்லை.
இனி மேலாவது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்தப் பெரியார் நூற்றாண்டு விழாவிலே தமிழக அரசுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். கண்டனமல்ல, வேண்டுகோள்தான்!
அவர்கள் நடத்துகின்ற விழாக்களைப்போல் தாக்குதல்கள் கிடையாது வேண்டுகோள்தான்!
பெரியாருடைய கனவுகளும் லட்சியங்களும் நிறைவேற சில சட்டங்கள் தேவைப்படுகின்றன.
1967இல் முதல்வர் பொறுப்பேற்ற அண்ணா அவர்கள் முதன்முதலாகக் கொண்டுவந்த சட்டமென்ன?
சுயமரியாதைத் திருமணங்கள் _ இதுவரை நடந்தவைகளோ, இனி நடப்பவைகளோ அனைத்தும் சட்டப்படி செல்லுபடியாகும் என்கிற மசோதாவைக் கொண்டுவந்து நிறைவேற்றினார்.
எதிர்க்கட்சியிலே இருந்த சில பேர் கேலியாகக் கூட கேட்டார்கள் _ இந்தத் தீர்மானம் உங்கள் தலைவர் பெரியாருக்கு அளிக்கப்படுகின்ற பரிசா? என்று கேட்டபோது அண்ணா அவர்கள் திட்டவட்டமாகச் சொன்னார், “இந்தத் தீர்மானம் மட்டுமல்ல; இந்த அமைச்சரவையே பெரியாருக்கு அளிக்கப்பட்ட பரிசுதான்’’ என்றார்.
எனவே பெரியாருடைய கொள்கைகளை இயன்றவரை சட்டமாக்க _ அவரது கொள்கைகளை நடைமுறைப்படுத்த, ஆட்சியிலே இருப்பவர்கள் முன்வர வேண்டும்! அந்த வேண்டுகோளை இந்த விழாவின் மூலம் வைப்பது பெரியார் கொள்கைக்கு நான் ஆற்ற வேண்டிய கடமையுணர்ச்சிக்கு அடையாளமாகும்.
தந்தை பெரியார் நூறாண்டுக்காலம் வாழ்ந்திருக்கலாம். 95ஆம் ஆண்டில் மறைந்தார். பழுத்த பழமாக முதிர்ந்த வயதினராக மறைந்தார் என்றாலும் இன்னும் பல்லாண்டு காலம் வாழ்ந்திருக்கக் கூடாதா என்று எண்ணுகின்ற அளவுக்கு நாமெல்லாம் கவலையின் உருவங்களானோம்! என்று குறிப்பிட்டார்கள்.
விழாவிற்கு இலங்கை தமிழர் தலைவர் அமிர்தலிங்கம் மற்றும் திருமதி மங்கையர்க்கரசி _ அமிர்தலிங்கம், மலேசியா முத்துச் சின்னையா (மலேசிய திராவிடர் கழகத் துணைத் தலைவர்), எம்.கல்யாணசுந்தரம் எம்.பி., மு.கண்ணப்பன் (மாவட்ட தி.மு.க. செயலாளர்), எஸ்.ஆர். சந்தானம், வழக்கறிஞர் கோ.சாமிதுரை, குடந்தை ஏ.எம்.ஜோசப், வழக்கறிஞர் மா.சுப்பிரமணியன், வள்ளல் இராமசாமி உள்ளிட்ட தோழர்கள் பலரும் கலந்து-கொண்டார்கள், திருமதி சக்குபாய் நெடுஞ்செழியன் எம்-.ஏ., செல்வி அ.அருள்மொழி, திராவிடர் கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமி, ஈரோடு நகரத் தலைவர் சி.நடராசன் உள்ளிட்ட ஏராளமான தோழர்களும் கலந்துகொண்டார்கள். கழக கொள்கைக்காக உயிர் தரவும் தயாராக இருக்கிற பட்டாளத்து வீரர்கள் தந்தை பிறந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்கள், தங்கள் மண்ணின் மைந்தருக்கு மகனிடம் காட்டும் மரியாதையின் சிகரத்தைக் கண்டு மெய்சிலிர்த்துப் போகுமளவிற்கு அன்று கொள்கை விழாவாகத் திகழ்ந்தது.
(நினைவுகள் நீளும்)