அம்மன் இருக்க போலீஸ் எதற்கு?
குடிநீரில் பெட்ரோல் கலந்து வந்ததால் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அடுத்த அரசம்பாளையும் ஊராட்சி ஒன்றிய மக்கள் ஊராட்சித் தலைவரிடம் முறையிட்டுள்ளனர். அவசரக் கூட்டம் கூட்டிய தலைவர், குடிநீரில் பெட்ரோல் கலந்தவர்கள் தானாக முன்வந்து 2 நாளில் ஒத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில், ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலில் குடியிருக்கும் அம்மனிடம் நடவடிக்கை எடுக்கக் கோரி உரலில் மிளகாய் அரைத்து முறையிடப்படும் என்று அறிவித்துள்ளார்.
2 நாள் முடிந்தும் பெட்ரோல் கலந்ததாக யாரும் ஒத்துக் கொள்ளாததால் காவல் நிலையத்தில் சென்று முறையிட்டுள்ளனர். புகாரினை காவல்துறையினர் ஏற்க மறுத்ததோடு, அருகில் குமாரபாளையத்தில் குடிநீரில் விஷம் கலந்தவரைக் கண்டுபிடித்துக் கூறும்படி, பதிவு செய்த வழக்கில் குற்றவாளியை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஊர்க்கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, அம்மனுக்கு மிளகாய் அரைத்துப் பூசுங்கள், அம்மன் குற்றவாளியைக் காட்டியபின் மனு எழுதிக் கொடுங்கள், வழக்குப் பதிவு செய்கிறோம். இப்போது புகாரை வாங்கினால் தெய்வக் குற்றமாகிவிடும் என்று கூறியுள்ளனர்.
எல்லாவற்றையும் அம்மன் பார்த்துக் கொள்ளுமானால் போலீஸ் எதற்கு? அவர்களுக்குச் சம்பளம் எதற்கு?அப்படி ஒரு துறைதான் எதற்கு? கலைத்துவிடலாமா? இதைத்தான் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மூடத்தனத்தின் முடைநாற்றம் என்றாரோ?
பக்தி முற்றினால் இப்படித்தான்…
கடவுள் பக்தியின் அடுத்த கட்டமாக தலைவி பக்தி கொஞ்ச நாளாக தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடுகிறது.அ.தி.மு.க.பெண் தொண்டர்கள் இருவர் தங்கள் கட்சி வெற்றி பெற்றதற்காக நாக்கையும்,கை விரலையும் வெட்டிக் கொண்டுள்ளார்கள்.இவர்களில் ஒருவருக்கு இப்போது புதிய அரசு வேலையும் கொடுத்து இந்தச் செயல்களை ஊக்குவித்துள்ளது.
இன்னொரு தொண்டரான அ.தி.மு.க. அமைச்சர் உதயகுமார் என்பவர் அவர்களின் தலைவி உள்ள எந்த இடத்திலும் தன் காலில் செருப்பு அணியமாட்டாராம். தலைமைச் செயலகம், அ.தி.மு.க. தலைமை அலுவலகம், சட்டமன்றம், போயஸ்தோட்டம் ஆகிய இடங்களில் செருப்பணியாமல்தான் நடப்பாராம், இப்படி அறிவித்து தனது பக்தியைக் காட்டியுள்ளார்.இன்னொரு தொண்டரான சட்டமன்ற உறுப்பினர் புதுப் புகாரைக் கிளப்பியுள்ளார். பழநியில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தில் வாஸ்து குறைபாடு உள்ளதாக அத்தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வேணுகோபால் கூறியுள்ளார்.
அக்னி மூலையில் நுழைவுவாயில் உள்ளது, மேலும் பல குறைபாடுகள் உள்ளன. வாஸ்து குறைபாடுள்ள அலுவலகத்தைப் பயன்படுத் தினால் மக்கள் பிரச்சினைகளில் முழுமையாக கவனம் செலுத்த முடியாதாம். எனவே, கட்டடம் வாஸ்து முறைப்படி மாற்றியமைக்கப்பட்டு, ஹோமங்கள் நடத்திய பிறகே அலுவலகம் வருவாராம்.