எதிர்க்கட்சிக்குப் புது இலக்கணம் படைக்கிறாரோ?
தமிழக சட்டமன்றத்தில் முதன்மையான எதிர்க்கட்சியாக நடிகர் விஜயகாந்தின் தே.மு.தி.க. 29 உறுப்பினர்களுடன் இடம்பெற்றுள்ளது. ஆனால்,எதிர்க்கட்சியாகச் செயல்பட்டதற்கான எந்த அறிகுறியையும் அவர்களிடம் காணோம்.பொதுவாக புதிய ஆட்சி வந்தவுடன் 6 மாதங்களுக்கு யாரும் விமர்சிக்க வேண்டாம் என்றுதான் இருப்பது வழக்கம். ஆனால், அ.தி.மு.க.ஆட்சியோ மறுநாளே தனது புத்தியைக் காட்டிவிட்டது. புதிய தலைமைச் செயலகம் முடக்கம்,சமச்சீர் கல்விக்கு மூடுவிழா என உடனடித் தடைகள் போடப்பட்டுவிட்டன.இதனை அவர்களின் கூட்டணியில் உள்ள இடதுசாரிகளே கண்டித்துவிட்டனர். ஆனால்,முதன்மையான எதிர்க்கட்சி இன்னும் வாயைத் திறக்கவில்லை. சமச்சீர் கல்வி குறித்து இன்னும் நாங்கள் எந்தமுடிவும் எடுக்கவில்லை என்கிறார் தே.மு.தி.க.வின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்.கலைஞர் அரசு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போடும்போது அதனை கேவலமாக விஜயகாந்த் விமர்சித்தார். இந்த ஒரு ரூபாய் அரிசியை மனுசன் தின்பானா? ஆடு, மாடுக்குத்தான் போடுறாங்க. புழுத்த அரிசியைக் கலைஞர் போடுறாரு என்று வசை பாடினார். ஆனால், இன்று அ.தி.மு.க. அரசு இலவசமாகப் போடும் அரிசியை இவரே ரேசன் கடையில் போட்டு திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார். ஒரு ரூபாய்க்குப் போட்ட அரிசியே புழுத்த அரிசி என்றால், இலவச அரிசி என்ன பாசுமதி அரிசியா? அதுமட்டுமல்ல இலவசத் திட்டங்களால் கலைஞர் நாட்டைக் கெடுக்கிறார் என்று பேசிய விஜயகாந்த் இப்போது இலவசங்கள் நிரம்பி வழியும் அ.தி.மு.க.வின் பட்ஜெட்டைப் புகழ்கிறார்.
மெட்ரோ ரயில் நிறுத்தம்,கலைஞர் காப்பீட்டுத் திட்டம் ரத்து, கலைஞர் வீடு கட்டும் திட்டம் ரத்து என மக்கள் நலத் திட்டங்களை நிறுத்தியுள்ள அ.தி.மு.க.வுக்கு லாலி பாடி எதிர்க்கட்சிக்குப் புது இலக்கணம் படைக்கிறாரோ என்னவோ?கடந்த 5 ஆண்டுகளில் சட்டமன்றத்திற்கு மிகக் குறைந்த நாட்களே வந்த உறுப்பினரை எதிர்க்கட்சித் தலைவர் ஆக்கினால் இந்த லட்சணத்தில்தான் இருக்கும் என்பதற்கு விஜயகாந்தே உதாரணம்.
-அன்பன்