வலிப்பு வந்தவரின் வாயில் கட்டை வைக்கக் கூடாது:
வலிப்பு நோய் உள்ளவர்கள் வாகனம் ஓட்டக் கூடாது; நீச்சல் அடிக்கக் கூடாது; உயரமான இடத்தில் நிற்கக் கூடாது; மரம் ஏறக் கூடாது; அதிகம் கவலைப்படக் கூடாது; பதற்றம் அடையக்கூடாது. வலிப்பு நோய் வந்தவர்கள் கையில் இரும்புச் சாவியைக் கொடுக்கக்கூடாது. அதனால் எப்பயனும் இல்லை.
வலிப்பு நோய் வந்தவர்களை இடப்பக்கம் திருப்பிப் படுக்க வைத்துப் பற்கள் கிட்டிக் கொள்ளாமாலிருக்க இரப்பர் பந்து, அல்லது ரப்பர் பொருளை வைக்க வேண்டும். கட்டையைப் பற்களுக்கு இடையில் வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்தால் பல் சேதமடையும். மருத்துவர் தரும் மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும். தொடர்ந்து சாப்பிட்டால் வலிப்பு நோய் முற்றிலும் குணமாகும்.
அப்படியே உண்பவற்றை அலசாமல் உண்ணக்கூடாது:
தோலோடு உண்ணும் பழங்களை நீரில் அரை மணி நேரம் ஊற வைத்து, பின் மூன்று முறை அலசி, பிறகே உண்ண வேண்டும். இவ்வாறு கழுவாமல் உண்ணக்கூடாது.
தற்போது அனைத்துப் பழங்களும் மரம் அல்லது செடியில் இருக்கும்போது, பூச்சி மருந்தில் மூழ்கடிக்கப்படுகிறது. அல்லது பூச்சி மருந்து அடிக்கப்படுகிறது. கழுவாமல் சாப்பிட்டால், அவை வயிற்றுக்குள் சென்று உடல் நலத்தைக் கெடுக்கும். குறிப்பாக, திராட்சையை நன்றாகக் கழுவிய பின்பே உண்ண வேண்டும். கீரை, காய்கறிகளை நறுக்கும் முன் நன்றாக மூன்று முறை அலசி அதன் பின் நறுக்க வேண்டும். இல்லையென்றால் அவற்றிலுள்ள பூச்சிமருந்து உடலைப் பாதிக்கும்.
நம்பிக்கையின்றி முயற்சியில் இறங்கக்கூடாது:
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு என்றார் வள்ளுவர்.
ஒரு செயலைச் செய்யும் முன் அது நிறைவேறும் வாய்ப்புகள், விளைவுகள், கேடுகள், நன்மைகள் என்று பலவற்றையும் ஆராய்ந்து அதில் இறங்க வேண்டும். இறங்கிய பின் நம்பிக்கை குலையாது ஊக்கத்துடன் முயல வேண்டும். மாறாக நம்பிக்கையின்றி செயலில் இறங்குவது, இறங்கியபின் நம்பிக்கை இழந்து பின்வாங்குதலும் கூடாது. அது அதிக கேடு தரும். நம்பிக்கையுடன் திட்டமிட்டு, முறைப்படி சரியாக முயற்சித்தால் எதையும் சாதிக்கலாம்.
எண்ணியர் எண்ணியாங் கெய்துவர் எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின் என்கிறார் வள்ளுவர்.
தோல்வியில் துவளக்கூடாது:
எந்தவொரு முயற்சியிலும் தோல்வியும் உண்டு; வெற்றியும் உண்டு. வெற்றி பெற்றவுடன் தலைகால் புரியாமல் குதிப்பதும், தோல்வி வந்தால் துவண்டு அல்லது மனம் தளர்ந்து சோர்வதும் சரியன்று. இரண்டும் வரும் என்பதை எதிர்பார்த்தே எதிலும் இறங்க வேண்டும். தோல்வி கண்டவுடன் துவளுவதாலோ, கவலுவதாலோ உடலுக்குக் கேடே ஒழிய ஆகப் போவது ஒன்றும் இல்லை. எனவே, கவலைப்படாது ஊக்கத்துடன் திட்டமிட்டு முயன்றால் வெற்றி பெறவும், சாதிக்கவும் நிறைய வாய்ப்புகள் உண்டு. முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்!
தண்ணீரை மீண்டும் மீண்டும் காய்ச்சக் கூடாது:
ஒருமுறை நன்றாகக் காய்ச்சிய நீரை, அது குளிர்ந்துவிட்டது என்பதற்காக மீண்டும் மீண்டும் காய்ச்சக் கூடாது. அவ்வாறு மீண்டும் மீண்டும் காய்ச்சினால் அந்த நீர் நஞ்சாக மாறும். அது உடல் நலத்தைக் கெடுக்கும்.
கொதித்து ஆறிய நீரை எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம். அதை மீண்டும் காய்ச்ச வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் அந்நீரை நன்றாக மூடி வைக்க வேண்டும். சூடு குறையாமல் வேண்டுமானால் பிளாஸ்க்கில் வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் சூடாக வேண்டும் என்றால் தேவையான அளவு அவ்வப்போது தண்ணீரைக் கொதிக்க வைத்துக் குடிப்பதே சிறந்தது. சுட வைத்து ஆறிய நீரை மீண்டும் சுட வைக்கக் கூடாது.