– குடந்தை கருணா
மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவி ஏற்றதில் இருந்து நாடு முழுவதும் ஓர் பதற்றமான சூழல் உருவாகி உள்ளது. ஆர்.எஸ்.எஸ். எனும் பாசிசக் கூட்டம் நேரடியாகவே ஆட்சி அதிகாரத்தில் தலையிட்டு தனது ஆட்களை அனைத்துத் துறைகளில் நியமித்து. தங்களுக்கு எதிரான கருத்துகளை முடக்கி, கருத்தாளர்களை அழித்து ஒடுக்கி ஆதிக்கம் செய்யும் அபாயப் போக்கு நிலவியும் வருகிறது.
சமூகப்புரட்சியாளர் தந்தை பெரியார் காலமெல்லாம் ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, சமூக நீதி என பிரச்சாரம் செய்து மக்களை நல்வழிப்படுத்தினார். ஆனாலும் மதவெறிச் சக்திகள், ஆட்சி தங்கள் கையில் இருக்கும் திமிருடன், மீண்டும் அந்த விஷச் செடியை நாடு முழுவதும் மேலும் வளர்க்கவும், தழைக்கவும் தமிழகத்தில் துளிர்க்கச் செய்யவும் பல்வேறு முகமூடிகள் அணிந்து முயற்சி மேற்கொள்கின்றன. இத்தகைய சூழலில் தான், சமூகப் புரட்சி இயக்கமாம் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் பாசிச சக்திகளின் முயற்சிகளை கருவறுக்கும் விதமாக பல்வேறு களங்களை அமைத்து செயல்படுத்தி வருகிறார். ஜாதிவெறி, மதவெறிகளை எதிர்த்தும், மனித நேயம், சமூக நீதி ஆகியவற்றை வலியுறுத்தியும் டிசம்பர் 2014-இல் துவங்கி, செப்டம்பர் 2015க்குள் தமிழகத்தில் ஏறத்தாழ 350 வட்டாரங்களில் திராவிடர் எழுச்சி மாநாடுகளை நடத்திக் காட்டியுள்ளார்.
காவிரி, முல்லைப் பெரியாறு குறுக்கே தடுப்பணைகள் கட்ட முயலும் கர்நாடக, கேரள அரசுகளைக் கண்டித்து மத்திய _ மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை 19.11.2014 அன்று தஞ்சையிலும், 20.11.2014 அன்று திருவாரூரிலும் நடத்தச் செய்தார்.
அனைத்துப் பள்ளிகளிலும் செத்த மொழியாம் சமஸ்கிருதத்தைத் திணிக்கும் வகையில் சமஸ்கிருத வாரம் கடைப்பிடிக்க மத்திய அரசு கல்வி நிலையங்களுக்கு அறிவுறுத்தியதைக் கண்டித்து, 20.11.2014 அன்று ஆர்ப்பாட்டமும்.
கொலை நூலான பகவத் கீதையை, புனித நூல் என அரசு அறிவிக்கும் என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் கூறியதைக் கண்டித்து 12.12.2014 அன்று கண்டனக் கூட்டமும்
குஜராத் மாநிலத்தில் பாடப் புத்தகத்திலிருந்து அண்ணல் அம்பேத்கர் ஹிந்து மதத்திலிருந்து புத்த மார்க்கம் தழுவியபோது எடுத்துக் கொண்ட உறுதி மொழிகளை நீக்கிய மோசடியை கண்டித்து 2.9.2015 அன்று போராட்டமும். எங்கோ ஒரு மாநிலத்தில் நடக்கிறதே என கருதவில்லை தமிழர் தலைவர். வரலாற்றை திரிபுவாதம் செய்யும் எவரும் எங்கிருந்தாலும், பெரியார் இயக்கம் எதிர்ப்புக் குரல் கொடுக்கும், போராடும் என்பதை எடுத்துக் காட்டிடவே செய்தார்.
நுழைவுத் தேர்வு, பாலியல் வன்முறை, மாட்டுக்கறிக்கு தடை, பகுத்தறிவு – முற்போக்கு சிந்தனையாளர்கள் படுகொலை, மதவெறி, ஜாதிவெறிகொடுமைகளை எதிர்த்து தமிழக முழுவதும் திராவிடர் கழகத்தின் சார்பில் 22.10.2015 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டமும்.
எழுத்தாளர் பெருமாள் முருகனின் நூலை தடை செய்து, அவர் மீது அரசு எடுத்த நிலைப்பாட்டைக் கண்டித்து 20.01.2015 அன்று சென்னையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டமும் நடத்தினார். புதிய தலைமுறை தொலைக்காட்சி நிலையம் மீதான இந்துத்துவாவாதிகளின் வன்முறைகளைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழர் தலைவர், அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல்-14 அன்று தாலி அகற்றும் விழா, மாட்டிறைச்சி விருந்துடன் 14.04.2015 அன்று சென்னை பெரியார் திடலில் சட்டப்படி நடத்தி மூலபலத்தை முறியடித்துக் காட்டினார். உணர்ச்சியையும் எழுச்சியையும் ஊட்டினார்.
உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி கடைபிடிக்க போராட்டம் நடத்தியதோடு உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றங்களிலும், நீதிபதிகள் நியமனம் சமூக நீதிக்கு வந்த சரியான முறையைச் சுட்டியும், சட்டத் திருத்தம் வேண்டியும், உச்ச நீதிமன்றத்திற்கும், மத்திய அரசின் சட்ட அமைச்சகத்திற்கும் 11.11.2015 அன்று கடிதம் எழுதி வலியுறித்தினார்.
பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்கு வருமான வரம்பை (கிரீமிலேயர் அளவை) உயர்த்தக் கோரி, 13.05.2015 அன்று சென்னையில் ஆர்ப்பாட்டமும்.
இந்தியா முழுவதிலும் பஞ்சாயத்து என்ற பெயரில் நடைபெறும் ஜாதிக்கொடுமைகள், பெண்ணடிமைத்-தனங்களை ஒழிக்க தனிச்சட்டம் கோரி திராவிடர் கழக மகளிரணி சார்பில் 01.06.2015 அன்று போராட்டமும் நட்த்தினார்.
இவ்வாறு, தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுமைக்கும் உள்ள சமூக, பொருளாதார, அரசியல் நிலைமைகளுக்குரிய சரியான கருத்துகளை வலியுறுத்தி, களம் கண்டு சாதிக்கும், இயக்கத்தை வழிநடத்தும் ஓய்வறியா இளைஞர் தமிழர் தலைவர் நலமாக பல்லாண்டுகள் வாழ்க! வாழ்க!