வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

நவம்பர்16-30

பரதர், பாரதர், பாரதம், பரதன்

இந் நான்கு சொற்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இவை தூய தமிழ்ச் சொற்களே யாதலால் இங்கு விரித்துரைக்கப்படும். தொல்காப்பியம் அகத்திணை இயல் 20ஆம் நூற்பாவின் உரையின் பகுதி வருமாறு;– நால்வகை நிலத்துக்கும் மருவிய குலப் பெயர் ஆவன. முல்லைக்குக் கோவலர், இடையர், ஆயர், பொதுவர், இடைத்தியர், கோவித்தியர், ஆயத்தியர், பொதுவியர்.

நெய்தற்கு நுளையர், திமிலர், பரதவர், நுளைத்தியர், பரத்தியர்.

இதனால் நாம் அறிய ண்டுவது என்னவெனில் பரதவர் அஃதாவது பரதர் என்ற பெயர் தொல்காப்பிய காலத்திலேயே, தமிழில் வழங்கியது என்பதாகும்.

மீனெறி பரதவர் மடமகள்
மானேர் நோக்கம் காணா ஊங்கே
என்ற நற்றிணையிலும் காண்க.
இதில் வரும் பரதவர்தானா பரதவர் எனின் ஆம் என்க. பரதவர் என்பதன் பெண்பால் பரத்தியர் என வருதலை நோக்குக.

இனி, பரதர் என்று தமிழ் நூலில் வரும் பெயர்தான் பரதர்—பரதன், பாரதர், பாரதம் என வந்ததா எனின் ஆம் ஆம் என்று கூறி, மறைமலையடிகளார் சொல்லியருளிய விளக்கத்தையும் இங்கு சுருக்கி எழுதுவோம்.

தமிழ் மண்டலம் ஐந்தும் தாவிய ஞானம் என்ற திருமந்திரச் செய்யுள்–பஞ்ச திராவிடராகிய தமிழரின் மேம்பாட்டைக் குறிக்கின்றது. இத் தமிழர் தாம், முதன்முதலில் கடவுளைத் தீ வடிவில் வைத்து வழிபடலாயினர்.

இவ் வைவகைத் தமிழ் மரபினர்க்கு தலைவராயிருந்து அந்நாளில், அரசு புரிந்த பரதன் என்னும் தமிழ் வேந்தன் வழியில் வந்தவர் பரதர்கள் என்று சொல்லப்பட்டனர்.

பாரத மரபினரான தேவசிரவர், தேவபரதர் என்னும் இருவரும் பயன்மிகுந்த தீயை மிக்க வலிமையோடும் தேய்த்து உயிர்ப்பித்தனர். (இருக்கு 3–23–2)

ஓ நெருப்பே, வலிய படைவீரர்களுடைய பழைய பரதர்கள் தமக்குப் பேரின்பம் வேண்டி நின்னையே இரந்தனர். (இருக்கு 16-6-4)

இவ்வாறு இருக்கு மறையில் பல இடத்தில் காணப்படுகின்றன. இதனால் தமிழ் மக்கட்குத் தலைவரான பரதர்களே முதன் முதலில் தீ யெழுப்பினர், தீயின் பயன் கண்டனர். தீயே கடவுள் என்று வழிபட்டனர் என்று அறிய வேண்டும். தீயைப் பரதன் என்று சொல்லுகிறது இருக்கு மறை இரண்டாம் மண்டிலத்து ஏழாம் பதிகம்!

அன்றியும் செந்நிறக் கடவுள் எனக் காரணப் பெயரான உருத்திரன் என்ற தமிழ் பெயருடைய கடவுளுக்கும், பரதன் என்று பெயரிட்டழைக்கிறது, மேற்படி இரண்டாம் மண்டிலத்து முப்பத்தாறாம் பதிகம். தென்னாட்டவர் கண்டறிந்தது தீக்கடவுள் என்பதுனாலன்றோ வடநூல்களில் நெருப்புக்குத் தென்றிசையங்கி தக்ஷிணாக்கிளி என்று சொல்லப்படுகிறது. இங்ஙனமாக இறைவனை நெருப்பொளியில் வைத்து வழிபடும் முறையை உணர்ந்த பரதர், பண்டை நாளில், இந்த நாவலந்தீவு முழுதும் ஒருங்கு செங்கோல் ஓச்சினராதலின், அவர் பெயரால் அது (இந்தியா) பரத கண்டம் எனப் பெயர் பெறுவதாயிற்று. இப் பரதர்கள் முதன் முதல் கடல் சார்ந்த நெய்தல் நிலத்தின் கண் இருந்து, அதன் கண் பட்டினங்கள் அமைத்து நாகரிகத்திற் சிறந்து வாழ்ந்தாராதலின் அந் நெய்தல் நிலத்து மக்கள் பரதர், பரத்தியர் எனப் பெயர் பெறலாயினர்.

வடக்கிருந்து வந்து இந்திய நாட்டின் வடமேற்கு எல்லையில் குடியேறிய ஆரியர், நாகரிகம் இல்லாதவராய் உயிர்க்கொலை புரிந்த வரைதுறையின்றி ஊனுண்டும் கட்குடித்தும் மகளிர்ப் புணர்ந்தும் தமிழர் அருவருக்குமாறு ஒழுகினமையால் அவர்களை இந்நாட்டில் நுழையாதபடி அக்காலத்தில், எதிர்த்து நிறுத்தினர் என்று இருக்கு மூன்றாம் மண்டிலத்து 33ம் பதிகம்    கூறுகிறது.

இன்னும் இதை விவரிக்க வேண்டாம். இங்கு கூறியவற்றால் அறியலானவை எவை?

ஆரியர் வருமுன்னரே தமிழர் நல்ல நாகரிகத்துடன் இந் நாவலந் தீவில் எங்கணும் பரவி இருந்தனர். அக்கால், தமிழே இருந்தது. அக்கால தமிழ்ப் பெயர்களே எப்பொருட்கும் அமைந்திருந்தன. இன்றும் பண்டைய நூல்களில் காணப்படும் பரதர், என்பதே அக்காலத்தில் பரதன், பாரதன், பாரதம், பரதகண்டம் என விரிந்தது. பரதன், பரதவர் முதலிய அனைத்தும் தூய தமிழ்ச் சொற்களே என்பனவாம்.

பாரதகண்டம் என்பதில் கண்டம் தமிழா என ஐயுற வேண்டாம். கண்டம் தூய தமிழ்ச் சொல்லே. அஃதேயுமன்றி காண்டம் என்பதும் தூய தமிழ்ச் சொல்லே. கண்டம், காண்டம் என்பன பிரிவு என்பது. கண்டம் நிலப்பிரிவு, காண்டம் நூற்பிரிவு என்க.

(குயில்: குரல்: 1, இசை: 18, 30—-09-19–58)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *