ஆசிரியர் பதில்கள்

நவம்பர்16-30

கேள்வி : மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்துவது அணுகுண்டைவிட ஆபத்தானது என்று நூற்றுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகாஜிக்குக் கடிதம் எழுதியுள்ளது பற்றிய தங்கள் கருத்து என்ன?
-_சீ.இலட்சுமிபதி, தாம்பரம்

பதில் : 100க்கு 100 சரியான, மறுக்க முடியாத உண்மை. அவர்களைக் கொச்சைப்படுத்தவதுபோல் பொறுப்பில் உள்ளோர் பேசுவது, மிகவும் கேவலம் _ தரம் தாழ்ந்தது.

கேள்வி : சிவசேனாவிற்கும் பா.ஜ.க.விற்கும் கொள்கையளவில் பெரிய வித்தியாசம் இல்லாத நிலையில் அவைகளுக்கிடையே சண்டையும் சமரசமும் அடிக்கடி நிகழ்வது ஏன்?
-_நாத்திகன் சா.கோவிந்தசாமி, பெரம்பலூர்

பதில் : பதவிமேல் கண் வையடா தாண்டவக்கோனே! பதவி! பதவி! அதை அடைய இந்தத் தனித்தனி கடைகளும் வித்தைகளும் தேவைப்படும்போல் தெரிகிறது.

கேள்வி : அண்ணாவோடும், கலைஞரோடும் ஆச்சி மனோரமா நடித்த நினைவுகளாக ஏதாவது சொல்வீர்களா?
-_தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி

பதில் : எனக்கு அதிகம் தெரியாது. மணிமகுடம் நாடகத்தில் அவர்கள் நடித்துள்ளார்கள் லட்சிய நடிகர் ராஜேந்திரனோடு என்று தோழர்கள் கூறுவர். கலைஞருடன் ஒரு நாடகத்தில் நடித்துள்ளார் என்று தெரியவருகிறது.

கேள்வி : மத்திய அரசால் தரப்பட்ட விருதுகளை, விருதுக்குரியோர் திரும்ப அரசிடமே தருவது அரசுக்கு எவற்றை உணர்த்துகிறது?
-_நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

பதில் : நமது நாட்டின் அரசுக்கு அமைதி வழியில் தங்களது அதிருப்தியைச் சுட்டிக்காட்டும் அறவழிப் போர் இது! உலக நாடுகளில் இதன் தாக்கம் அதிகம் இருக்கும்!

கேள்வி : மக்கள் நலக் கூட்டாளிகளும், பாட்டாளி மக்கள் கட்சியினரும், தமிழ்த் தேசியவாதிகளும், தமிழகத்தை கெடுத்தொழித்த அ.தி.மு.க. அரசை விட்டுவிட்டு, தி.மு.க.வை குறிவைத்துக் குதறுவது ஏன்?
-_வ.க.கருப்பையா, பஞ்சம்பட்டி

பதில் : பொது எதிரி யார் என்பதை இவர்கள் புரிந்துகொள்ளாததுபோல நடப்பதுதான் _ விமர்சிப்பதுதான் _ புரியாத புதிர்! இது யாருக்குச் சாதகமாக அமையும் என்பது சாதாரண  வாக்காளருக்கும் புரியுமே! அந்தப் பேருண்மை இந்த நண்பர்களுக்கு ஏனோ இன்னமும் புரியவில்லை?

கேள்வி : உண்மை இதழ் கடைகளில் கிடைக்க ஏற்பாடு செய்வீர்களா?
-_த.கந்தசாமி, திண்டிவனம்

பதில் : நிச்சயமாக ஏற்பாடு 2016இல் வெகுவாகச் செய்யப்படும்; செய்யப்படல் வேண்டும். நன்றி!

கேள்வி : அ.தி.மு.க.விற்கும் எங்களுக்கும் கொள்கை வேறுபாடு இல்லை என்று பி.ஜே.பி தலைவர்களே சொல்வதுபற்றி தங்கள் கருத்து என்ன?
-_ப.திருமுருகன், சேலம்

பதில் : பா.ஜ.க.வின் கருத்துக்கு தக்க பதில் சொல்லவேண்டிய பொறுப்பு அ.தி.மு.க.வுக்கு உண்டு. அவர்கள் சொல்லாவிட்டால் அண்ணா நாமம் வாழ்க!

கேள்வி : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.எஸ்.தாக்குர் நியமிக்கப்பட்டது ஜெயலலிதா ஊழல் வழக்கில் உண்மை ஒளிர உதவும் என்ற கருத்து சரியா?-
_வே.தமிழழகன், தஞ்சை

பதில் : இப்போது அதுபற்றி எந்தக் கருத்தும் கூறுவது சரியானது அல்ல. தீர்ப்புக்கு முன் இப்படிப்பட்ட வாதம் தேவையா?

கேள்வி : கார்ப்பரேட் கம்பெனிகள் இளைஞர்களின் உழைப்பை 30 வயதுவரை சுரண்டிவிட்டு, அவர்களைப் பணி நீக்கம் செய்யும் கொடுமைக்குத் தீர்வு என்ன?
-_கோ.காண்டீபன், மதுரை

பதில் : என்ன செய்வது? அவர்களில் பலரும் விளக்கை நோக்கிய விட்டில்களாகப் பறக்கிறார்களே! அவர்கள் பணி பாதுகாப்பு மற்ற பணிகளில் உள்ளதுபோன்று கொண்டுவர அரசினை வற்புறுத்திட வேண்டும்!

கேள்வி : ஒரு விழுக்காடு பயன்தரும் இடஒதுக்கீட்டுக்காக 99 விழுக்காடு இழிவுதரும்  ஜாதியைச் சுமக்க வேண்டுமா? என்று தாழ்த்தப்பட்டோரே கூறுவதற்கு தங்கள் விளக்கம் என்ன?
-_பூ.மங்கையர்க்கரசி, திருச்சி-_1

பதில் : சிறிய கேப்சூல் தான் (குளிகைதான்) பெரிய உயிர்க்கொல்லி நோயைப் போக்கும் மருந்து என்று அறியாத அறியாமை இருட்டில் தடுமாறுவோர். தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்குத் தெரியாதது இவர்களுக்குப் புரிந்துவிட்டதா? பொறுப்பற்ற பேச்சு இது! ஜாதி இழிவை ஒழிக்க இப்படிப்பட்டவர்கள் இதுநாள்வரை செய்தது என்ன? கேளுங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *