பிறர் சொல்வதை அப்படியே ஏற்கக் கூடாது
எவ்வளவு உயர்ந்தோர் ஆயினும், நாம் மதிக்கும் தலைவராயினும், யாராயினும் அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்பதும் நம்புவதும் கூடாது. அவை சரியானவையா? என்பதை ஆய்வு செய்துதான் ஏற்க வேண்டும். குறிப்பாகக் கடவுள் சார்ந்த, மதம் சார்ந்த, மரபு சார்ந்தவற்றுள் நாம் கண்ணை மூடிக் கொண்டு ஏற்கிறோம். அது சரியல்ல, மூடச் செயல்கள் பரவ, வளர அதுவே முதன்மைக் காரணம். எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு
என்ற வள்ளுவர் வழிகாட்டுதலை இங்கு பின்பற்றி நடந்தால், கண்மூடிச் செயல்கள் மறையும் பகுத்தறிவுப் பாதை துலங்கும்.
பலர் கோள் சொல்லும்போது அது உண்மையா? என்று ஆராயாமல் செயல்பட்டால், பல தவறான முடிவுகளை எடுத்து நல்லவர்களின் எதிர்ப்பைப் பெறவும், நல்லவர்களுக்குக் கேடு செய்யும் நிலையும் நேரும். எனவே, எந்தவொரு செய்தியையும் நன்கு அறிந்து, விசாரித்து, வினவி, ஆய்வு செய்து ஏற்க வேண்டும். நாம் அப்படிச் செயல்படத் தொடங்கினாலே, நம்மிடம் பொய்யான, தவறான செய்திகளைச் சொல்ல மாட்டார்கள்.
பல குடும்பங்கள், நிறுவனங்கள், நிர்வாகங்கள், உறவு, நட்பு கெட, பிறர் சொல்வதைக் கண்ணை மூடிக் கொண்டு ஏற்பதே காரணம். எனவே, நன்கு ஆய்வு செய்து ஒன்றை ஏற்க வேண்டும்.
நம் கருத்தைப் பிறர்மீது திணிக்கக் கூடாது
மனிதர் ஒவ்வொருவருக்கும் தனக்கென விருப்பு, வெறுப்புகள், நோக்கங்கள், சரி தவறுகள், ஈர்ப்புகள், பற்றுகள் இருக்கும். அதுதான் இயல்பு. அப்படியிருக்க நம் முடிவை மற்றவர் ஒத்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்-படுத்துவம் சரியல்ல.
உணவு, உடை, இருப்பிடம், நிறம், சுவை, படிப்பு, கலை, விளையாட்டு, வாழ்க்கைத் துணை போன்றவற்றில் ஒருவர் விருப்பம் அறிந்து அதை நெறிப்படுத்த வேண்டும். மாறாக, நம் விருப்பப்படிதான் பிறர் ஏற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது. அவருக்கோ, பிறருக்கோ கேடு தரும் விருப்பம் எனின் அதைத் தடுக்க வேண்டும். அங்கு விரும்புவதெல்லாம் செய்ய முடியாது.
கூடுதல் உப்புச் சுவை சிலருக்குப் பிடிக்கும். அவர் விருப்பம் என்பதால் அனுமதிக்க முடியாது. அது கேடு என்பதை விளக்கி, தடுக்க வேண்டும்.
பொறித்த உணவை அதிகம் விரும்புகிறார் என்பதால் அதை ஏற்க முடியாது. அது உடலுக்குக் கேடு என்பதால், அளவுபடுத்தி உண்ணச் செய்ய வேண்டும். புகைபிடிப்பது, மது குடிப்பது விருப்பம் என்பதால் அனுமதிக்க முடியாது. உரிமையில்லாத பெண்ணுடன் உறவு கொள்ள விருப்பம் என்பதால் அது ஏற்புடையதல்ல.
ஆக, விருப்பம், நோக்கு என்பது பிறருக்கும் தனக்கும் கேடு பயவாதது என்றே வரையறுக்க வேண்டும்.
பிள்ளைகள் தம் பிரச்சினைகளைப் பெற்றோரிடம் மறைக்கக் கூடாது
பிள்ளைப் பருவம் என்பது தெளிவு மற்றும் விவரங்கள் தேவையான அளவு கிடைக்காத நிலை. இப்பருவத்தில் பல அய்யங்கள், வினாக்கள், தொல்லைகள், ஏமாற்றுகள் போன்றவை வரும். அப்பருவத்தில் அவர்களுக்கு அதற்குரிய தீர்வுகள், சரி, தவறு, நல்லது, கெட்டது, பாசம், மோசடி, இவற்றிற்கிடையே உள்ள வேறுபாடு விளங்காது. எனவே, தங்களுக்கு நேரும் அல்லது எழும் எதையும் தன்னுடைய பெற்றோர் அல்லது தாத்தா பாட்டியிடம் உடனுக்குடன் மறைக்காது சொல்லித் தெளிவு பெற வேண்டும். மாறாக, தன்னை ஒத்தப் பிள்ளைகளிடம் சொல்லி அவர்கள் சொல்வதை ஏற்கக் கூடாது.
குறிப்பாக, தன் உறுப்புகளைப் பிறர் தொடுதல், மறைவிடங்களுக்கு அழைத்தல் போன்றவற்றை உடனுக்குடன் பெற்றோரிடம் சொல்லிவிட வேண்டும். இல்லையென்றால் பிள்ளைகளுக்கு அதன் மூலம் கேடு நேர வாய்ப்பு உண்டு.
புரிந்து கொள்ளாது மனப்பாடம் செய்யக் கூடாது
கற்கின்ற எதையும் புரிந்து கற்க வேண்டும். புரிந்து கற்றால் எளிதில் மறக்காது. அது சார்ந்து நாம் சொந்த நடையில் கருத்துக் கூறவும், எழுதவும் முடியும். மாறாக, மனப்பாடம் செய்தால் இருப்பதை அப்படியே சொல்ல அல்லது எழுத மட்டுமே முடியும். விளக்கிச் சொல் என்றால் விழிப்பர். அறிவு வளரவே கற்கிறோம். புரியாமல் மனப்பாடம் செய்தால், அறிவு எங்ஙனம் வளரும்?
மனப்பாடம் செய்வது மதிப்பெண் பெற மட்டுமே உதவும். அறிவு வளரவும், ஆற்றல் பெருகவும், பணியாற்றும் இடத்தில் சாதிக்கவும் புரிந்து கற்றால் மட்டுமே முடியும்.