உற்சாக சுற்றுலாத் தொடர் – 19

நவம்பர்16-30

– மருத்துவர்கள் சோம&சரோ இளங்கோவன்

உல்லாசக் கப்பல் – 9

தங்கம் கொழிக்கும் தங்கவாயில் பாலம்!

அமெரிக்கா வந்து நாற்பது ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் இந்த ஆண்டுதான் அமெரிக்காவின் 50 மாநிலங்களையும் பார்த்து முடித்தோம்! அமெரிக்காவின் ஆரம்பம் முதலில் 13 மாநிலங்களுடன் தான்,  கிழக்கிந்திய கம்பெனி மாதிரி ஆங்கிலேயர்கள் வர்ஜீனியா கம்பெனி தான் முதன் முதலில் வர்ஜீனியா மாநிலத்தை ஆரம்பித்தது. பின்னர் கிழக்கே இருந்த டெலவேர், பென்சில்வேனியா, நியுயார்க் போன்றவை சேர்ந்தன. நியுயார்க் நகரத்தின் மேன்ஹாட்டன் தீவை அமெரிக்க பழங்குடியினரிடமிருந்து 60 பொற்காசுகளுக்கு (அன்றைய விலை 24 டாலர்) வாங்கினார்களாம்! விடுதலை அடைந்த பின்னர் பிரான்சிடமிருந்து அமெரிக்காவின் பெரும்பகுதியான தென் மாநிலங்களும், மெக்சிகோவிடம் போரிட்டுக் கலி போர்னியாவும், கடைசியாக ருசியாவிடமிருந்து அலாஸ்காவும் வாங்கி 50 மாநிலங்களாக்கினர்!

அமெரிக்கா வாழ் தமிழர்களுக்கு ஜூலை 4 ஆம் நாள் பெரும் விழா நாள். அமெரிக்காவில் மிகவும் அரிதாகக் கிடைப்பது விடுமுறை நாட்கள். சனி, ஞாயிறு தவிர வெள்ளி அல்லது திங்களுடன் சேர்ந்த மூன்று நாட்கள் விடுமுறை மிகக் குறைவு. அதிலே அமெரிக்கா விடுதலை அடைந்த நாள் ஜூலை 4. அந்த விடுமுறையில் அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் இணைந்த அமெரிக்கப் பேரவையின் விழா மிகவும் சிறப்பாக நடக்கும். இந்த ஆண்டு முதன் முதலாக அமெரிக்காவின் மேற்குக் கோடியான கலிபோர்னியாவில் சேன் ஹோசே நகரில் நடந்தது. அப்படியே அந்தப் பக்கமுள்ள வட மேற்கு மாநிலங்களையும், அலாஸ்காவையும் பார்த்திட முடிவு செய்து ஒரு மாதப் பயணத்தில் பறந்தோம்.

அமெரிக்காவில் பல நகரங்களில் தமிழ்ச் சங்கங்கள் பல ஆண்டுகளாக உள்ளன. பல பெரிய ஊர்களில் தமிழ்ப் பள்ளிகள் நூற்றுக் கணக்கான மாணவச் செல்வங்களுடன் சனி, ஞாயிறுகளில் நடக்கும். பல இளைய தலை முறையினர் பங்கேற்று திருக்குறள் போட்டி, புறநானூறு, இலக்கியங்கள் பாடுதல் என்று அமர்க்களப் படுத்தி விடுவார்கள். அதை நேரில் பார்த்த கவிஞர் அறிவுமதி, அய்யா நல்லக்கண்ணு போன்றவர்கள் மகிழ்ச்சிக் கடலில் மிதந்தனர். பேரவை விழாவிற்குப் பல துறைப்பட்டவர்களும், தமிழகம், மலேசியா, ஈழத்துத் தமிழறிஞர்கள், கவிஞர்களும் வந்துள்ளனர். திரைப்படக் கூத்துக்களும் இசை விழாக்களும் உண்டு. இன்றைய அளவில் பறை, சிலம்பம், பல வித ஆட்டங்கள் என்று தமிழ் மணம் வீசி அனைவரையும் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ப் பற்றும், பெருமையும் சீரும் சிறப்புமாக, அதிலும் இளைய தலை முறையின் வீச்சு மிக்க மகிழ்ச்சியுடையதாக இருக்கும். விழா மிகவும் நல்ல முறையில் நடந்தது. தந்தை பெரியாரின் தாக்கமும், புகழ்ச்சியும் எப்போதும் இருக்கும். நமது மானமிகு கருணாநிதி அவர்கள் மேடையில் பாராட்டப்பட்டார். சேன்ஹோசேயில் உள்ள பெரிய சீக்கியர்கள் குருத்துவார் நூலகத்தில் பெரியார் விழா கொண்டாட சீக்கிய, மற்ற நண்பர்களுடன் கூடினோம்.

அந்தப் பக்கம் சென்று விட்டப் பல நண்பர்களைப் பார்த்து ஆண்டுகள் பல ஆகிவிட்டதால் அவர்களையெல்லாம் பார்த்த மகிழ்ச்சி. மூன்று நாட்களும் மகிழ்ச்சியில் பறந்தது. சேன் ஹோசே மிகவும் அழகிய மலைச் சாரல் நகரம். மாநாடு நடந்த இடம் கடைகளும், விடுதிகளும், உணவுக் கூடங்களும் கலை அழகுடன் அமைக்கப் பட்டிருந்தன. அங்கு முடிந்ததும் அமெரிக்காவின் அழகு மிக்க நகரங்களில் ஒன்றான சேன் பிரான்சிஸ்கோவிற்குச் சென்றோம். மலை உச்சியில் அமைந்த அழகு நகரம். மலையின் மேலிருந்து கீழே உள்ள கடற்கரையின் அழகைப் பார்த்ததும் மயங்கி விடுவோம். அங்கு நாங்கள் பார்த்துக் கொண்டிருந்த போதே ஒரு அழகு மிகு விருந்து கண்களுக்கு! ஆம், ஒரு திமிங்கலம் நீந்திச் செல்வதைப் பார்த்தோம். அங்கே மிகப் பெரியத் திட்டமாகக் கட்டப்பட்டிருந்த நீண்ட பெரிய சிவப்பு நிறத் தொங்கு பாலம். அதன் பெயரே தங்க வாயில் பாலம்”. (Golden Gate Bridge) அதைக் கட்டும் போது பணம் வீணாகிறது  என்று குறை கூறினார்களாம். இன்று உண்மையிலேயே தங்கம் கொழிக்கின்றது அங்கே!

அங்கிருந்து பார்த்தால் ஒரு தீவு தெரியும். அந்தத்தீவு தான் அல்காட்ராசு (Alcatraz) என்ற உலகிலேயே மிகவும் பாதுகாப்பு நிறைந்த சிறைச்சாலை. அதற்குப் படகில் பயணிகள் செல்வார்கள். அதிலிருந்து தப்பித்தவர்களும் உண்டு. அங்கே கைதிகளுக்கு இழைக்கப்பட்டக் கொடுமைகள் வெளியே வந்ததால் அது மூடப்பட்டு விட்டது. இப்போது கைதிகள் அங்கே இல்லை.

அங்கே மிகப் பெரிய பூங்கா தங்க வாயில் பூங்கா (Golden Gate Park) என்று உள்ளது. காரில் சுற்றினாலே அரை மணிக்கு மேலே ஆகும். அதன் பல பகுதிகளில் மக்கள் உடற்பயிற்ச்சிக்காக நடப்பதும், ஓடுவதும், மிதி வண்டியில் செல்வதுமாக நிறைந்திருப்பார்கள். பல விளையாட்டுக் கூடங்களும், சறுக்குகளும் இளைய தலை முறை நன்கு அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.

அருகே அமெரிக்காவிலேயே மிகவும் கோணல் மாணலான தெரு என்று மேலிருந்து கீழே 200 மீட்டர் போல இறங்கும் தெரு உள்ளது. அதில் கார் ஓட்டிச் செல்வது ஒரு தனி மகிழ்ச்சி. இரண்டு புறமும் அழகிய பூக்கள் நிறைந்த அந்தத் தெருவிலே கார் ஓட்டினோம்! அங்கே பெரிய கும்பல் எப்போதும் இருக்கும்.   அமெரிக்காவின் மிகப்பெரிய சைனா டவுன் மிக்க எழில் பொங்கும் நகரமாக அங்கே உள்ளது. கடைகளும், மணக்கும் உணவுக் கூடங்களும் நிறைந்திருந்தன.

அன்றிரவு புதிய வாழ்விணையாளர்களான  மானமிகு பொதுச்செயலாளர் அன்புராஜ் அவர்களின் செல்வி கவின், ரோகித் அவர்களுடன் உணவுண்டோம்.

அடுத்த நாள் நீண்ட பயணம். ஓய்வெடுத்துத் தயாராகுவோம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *