நூல்: மருத்துவ அகராதி (தொகுதி-1) ஆசிரியர்: த.வி.சாம்பசிவம் பிள்ளை பக்கங்கள்: 1040 விலை: ரூ.800/-_
வெளியீடு : தமிழ்ப்பேராயம், திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர் – 603203. தொலைப்பேசி : 044 – 2741 7375
இணையதளம் : www.srmuniv.ac.in
மின்னஞ்சல்: tamilperayam@srmuniv.ac.in
அயல் நாட்டு மருத்துவங்கள் அணிவகுத்து வந்து இங்கு ஆதிக்கம் செலுத்திய நிலையில், மரபுவழியான நம் தமிழ் மருத்துவமாம் சித்தமருத்துவம் வழக்கொழியும் நிலையில் கேட்பாராற்றுக் கிடந்தது. தமிழ்மருத்துவ அறிவைப் பயன்படுத்தி சமஸ்கிருத்தில் ஆயுர்வேதம் என்றாக்கி நடைமுறைப் படுத்தினர். இதனால், சமஸ்கிருதச் சொற்கள் தமிழ் மருத்துவத்தில் தடையின்றிப் புகுந்தன. இசை நாட்டியம் போன்ற கலைகளில் தமிழ்ச்சொற்கள் சமஸ்கிருத மயமாக்கப் பட்டது போலவே, தமிழ் மருத்துவமும் சமஸ்கிருத சொற்களாக மாற்றப்பட்டன. அதனால், இந்நூலிலும் அத்தாக்கம் அதிகம். என்றாலும் இணையான தமிழ்ச்சொற்கள் அடைப்புக்குள் தரப்பட்டுள்ளது ஆறுதல் அளிக்கிறது.
இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் பெருமுயற்ச்சியாலும் உதவியாலும் இந்நூல் தமிழர் மருத்துவம் தழைத்தோங்க உரமாக வெளிவந்துள்ளது. தங்களால் இயன்ற அளவு தமிழ்ப்பணீடுத்த முயன்ற பதிப்பகத்தாரைப் பாராட்டவேண்டும்.
தமிழ் மருத்துவத்திற்கான இந்த அகராதியின் முதல் பதிப்பு இந்நூல். ஒவ்வொரு சொல்லுக்கும் முதலில் தமிழும் அதையடுத்து ஆங்கிலத்திலும் பொருள் தரப்பட்டுள்ளது.
தலைச் சொற்களுக்கான பொருள் விளக்கங்களில் வரும் கூட்டுச் சொற்கள், சொல் பிரித்துத் தரப்பட்டுள்ளன. தலைச் சொற்கள் மூலநூலில் உள்ளவாறே குறிக்கப்பட்டுள்ளன.
மருத்துவத் துறையில் தமிழ் மருத்துவத்தைத் தலை நிமிரச் செய்ய வந்துள்ள இந்நூலில் முதற்பதிப்பைத் தொடர்ந்து அடுத்தடுத்தப் பதிப்புகளும் வந்து தமிழ் மருத்துவத்திற்கு வளம் சேர்க்க வேண்டும் என்று விழைகின்றோம்.
இச்சீரிய முயற்சியை தனித்துறையின் கீழ் செயற்படுத்தி தமிழ்மருத்துவ நூல்களை யெல்லாம் அரிதின் முயன்று திரட்டி தமிழ் மருத்துவம் சார்ந்த அனைத்தும் ஒருங்கிணைந்து கிடைக்க பல்கலைக்கழகம் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகின்றோம். அது அவர்களால் முடியும் அப்படிச் செய்தால் அப்பணி வரலாற்றில் நிலைத்து தமிழ் மருத்துவத்தை வாழ்விக்கும்.