விளம்பரமில்லா வியக்கத்தக்க பெரியார் தொண்டர்… கொள்கை வேங்கை பிரான்சிஸ்

நவம்பர்16-30

திருச்சி மாவட்ட திராவிடர் கழகத்தின்  செயலளாளராக பல ஆண்டுகள் பணியாற்றியவர் முதுபெரும் பெரியார் தொண்டர் பிரான்சிஸ் அவர்கள். முழுநேரத் தொண்டராகவே பணிபுரிந்தார்.

இவர் திருச்சி வரகனேரியில் 25—05-1910 இல் பிறந்தவர்.

தந்தை பெரியார் அவர்களின் பேரன்புக்குப் பாத்திரமான தோழர். எப்பணி அய்யாவால் அளிக்கப்பட்டாலும் அதனை முடியாது; இயலாது என்று மனம் சுளிக்காமல், அதற்கென்ன அய்யா முடித்துவிடுகிறோம் என்று துணிந்து சொல்வதோடு செய்து முடிப்பவராகவே அவர் இறுதி மூச்சடங்கும் வரை செயலாற்றியவர்.

திருச்சியில் வக்கீல் அய்யா என்று பலராலும் அழைக்கப்பட்ட முன்னாள் மத்திய நிர்வாகக் குழுத்தலைவர் பொ.வேதாச்சலம் அவர்களது உற்ற செயலாளராக நெருக்கமாக பிரான்சிஸ் எப்போதும் இருந்தார். மாவட்டத் தலைவர் அப்போது டி.டி.வீரப்பா அவர்கள். அவருக்கும் பிரான்சிஸ் அவர்களுக்கும் இயக்கப் பணி செய்வதில் அவ்வப்போது உரசல்களும் ஊடல்களும் வந்தாலும், நொடிப்பொழுதில் கரைந்துவிடும்.

அன்னை மணியம்மையார் அவர்கள் பிரான்சிஸ் போன்றவர்களை அண்ணன் என்று மிகுந்த மரியாதையுடன் அழைப்பார்கள். அவரது வாசம் பெரிதும் பெரியார் மாளிகையில்தான்! நமது தோழர்கள், பிரமுகர்கள் அவருக்கு பெரிதும் உதவுவார்கள்.

புலிப்பாலைக் கொண்டு வா என்றாலும், அய்யா சொல்லிவிட்டார்! உடனே அது நடத்திக் காட்டப்பட்டாக வேண்டும் என்று உடனடியாக கிளம்பிடும் மனவேகம் கொண்ட கட்டுப்பாடு மிகுந்த தொண்டர் _ தோழர் இவர்!

பெரியாரை எதிர்த்துப் பேசினால் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் பிரான்சிஸ் அவர்கள் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்! சீறிப் பாய்ந்துவிடுவார்!

கழகப் பணிகளின் வெற்றிக்காக சிற்சில நேரங்களில் அதீதமாக நடந்துகொண்டு அய்யா அவர்களால் கண்டிக்கப்பட்டதும் உண்டு. ஆனால், அதனால் மனந்தளரவே மாட்டார்!

இவரைப்போலவே திருச்சி மாவட்டத்தில் சுலைமான் என்ற ஒரு முக்கிய செயலாளரும் உண்டு. அவரும் அமைப்பாளர் போன்ற பணிகளைச் செய்தவர். இவர்களிருவரும் இரு சிறுபான்மைச் சமூகத்தவர் என்ற பேதமோ, உணர்வோ இன்றி அனைவரிடமும் மிகுந்த பாசத்துடன், சகோதரத்துவத்துடன் நடந்து கொள்வார்கள்.

தோழர் பிரான்சிஸ் அவர்கள் பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறைக்குப் போனவர். அரசியல் சட்டத்தாளை எரித்து சிறையில் சுமார் ஓராண்டு கடுங்காவல் தண்டனை பெற்றவர்.

எந்தச் செயலையும் துணிச்சலுடன் செய்து முடிப்பார். ஒருமுறை வக்கீல் அய்யா தி.பொ.வே. அவர்களுக்கு மணிவிழா (அறுபதாம் ஆண்டு விழா) என்று அறிவித்து அழைப்பிதழ் விளம்பரம் செய்து திருச்சி தேவர் ஹாலில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து விட்டார்; தந்தை பெரியாரையும் அழைத்துவிட்டார். திருச்சி பிரமுகர்கள், கழக முக்கியப் பொறுப்பாளர்கள் பலரும் குழுமிவிட்டனர்!

அவ்விழாவில் எல்லோரும் பாராட்டிப் பேசிய பிறகு, தி.பொ.வே. ஏற்புரை _ நன்றி உரை கூறத் துவங்கியபோது,

என்னய்யா அக்கிரமம், இந்த பிரான்சிஸ் செய்த வேலை, எனக்கு 60 வயதே இன்னமும் ஆகவில்லை, எனக்கு இப்படி மணிவிழா என்று கூறி பெருங்கூட்டத்தைக் கூட்டி, விருந்து தடபுடல் அது இது என்று இந்த மனுஷன் செய்துவிட்டார்; உம், நீங்களும் வந்து விட்டீர்கள், நானும் வேறு வழி இல்லாமல் ஏற்றுக்கொண்டேன் என்று நகைச்சுவை பொங்கக் கூறியவுடன், வந்திருந்த அனைவரும் சிரித்து சிரித்து மகிழ்ந்தனர்.

பொய்மையும் வாய்மை உடைத்து என்பதை பல நேரங்களில் செய்யத் தவறாத தொண்டர், தோழர் பிரான்சிஸ் அவர்கள்.

05_08_-1966 அன்று மறைந்த ஃபிரான்சிஸ் அவர்களுக்கு தந்தை பெரியார் நேரில் சென்று மரியாதை செலுத்தி, அவரது ஊர்வலத்திலும் பங்கேற்றதுடன் பிரான்ஸிஸ் கல்லறை எனும் நினைவிடத்தையும் அமைத்தார்.

திருச்சியில் கலைவாணர் என்.எஸ்.கே. ஜட்கா வண்டிக்காரர்களுக்காக, கலை நிகழ்ச்சி நடத்தி, ஒரு தனி ஜட்கா ஸ்டேண்ட் ஏற்பாடு செய்து அது பலகாலம் (புத்தூரில்) இருந்தது. அதற்குச் சற்றுத்தள்ளி, உறையூர் ரோட்டில் பல ஆண்டுகாலம் பிரான்சிஸ் பெயரால் திருச்சி திராவிடர் கழகத் தோழர்கள் ஒரு அருமையான படிப்பகத்தை பிரான்சிஸ் படிப்பகம் என்று நிறுவி நடத்தினர்.

நெடுங்காலம் பாதுகாப்புடன் நடந்தது. அதனைத் தொடர நாம் எடுத்த முயற்சிகள் ஏனோ பலன் அளிக்கவில்லை; விரைவில் திருச்சி மாநகரத் தோழர்கள் அதில் வெற்றி பெறுவார்கள் என்று நம்புகிறோம்!

இவர் ஒரு எடுத்துக்காட்டான லட்சியத் தொண்டர் _ தோழர் ஆவார்!

எப்போதும் சிரித்த முகத்துடன் இருந்தவர் எவரிடமும் வாஞ்சையுடன் பழகுவார்!

பொதுவாழ்வில் எதனையும் சம்பாதிக்காது, புகழைச் சம்பாதித்த கொள்கை வேங்கை திருச்சி பிரான்சிஸ் புகழ் வாழ்க!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *