மிதிவண்டிப் போட்டியில் மிகப்பெரும் சாதனை!

நவம்பர்16-30

பெண்ணால் முடியும் …….

மிதிவண்டிப் போட்டியில் மிகப்பெரும் சாதனை!

சர்வதேச சைக்கிளிங் போட்டியில் இந்தியாவுக்கு அய்ந்து பதக்கங்களை வென்று தந்துள்ளார் அந்தமானைச் சேர்ந்த பெண்.

டெபோராவின் அம்மா சர்ச்சுக்குப் போயிருந்தாள். வீட்டில் அப்பாவை கட்டிக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்தாள் ஒன்பது வயது டெபோரா. திடீரென்று கட்டில் அதிரத்தொடங்க, அப்பாவின் கைகளை இறுகப்பற்றிக்கொண்டாள். நிலம் நடுங்கத் தொடங்கியது. அதிர்ந்துபோய் விழிக்க… வெளியே மக்கள் கூட்டம் கூட்டமாக அலறி அடித்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தனர். வாசலில் இறங்கினால் வீடுகள் இடிந்து கிடக்க, ஊரே அலங்கோலமாகக் கிடந்தது. அந்த நொடியில் டெபோராவுக்கு தன்னைச் சுற்றி நடக்கிற எதுவுமே புரியவில்லை.

அவளுடைய குடும்பமும் ஊர்க்காரர்களும் கடற்கரையை ஒட்டிருந்த தங்களுடைய குடியிருப்புகளை விட்டுவிட்டு அருகிலிருந்த காடுகளுக்குள் தஞ்சம் புகுந்தனர். உயிர் பிழைக்க விழையும் தீராத ஓட்டம். டெபோராவுக்கு அடுத்த அய்ந்து நாட்கள் பூச்சிகளும், புழுக்களும், பாம்புகளும், பூரான்களுமாக உணவின்றி உறக்கமின்றி அடர்ந்த காட்டுப்பகுதிகளில் கழிந்தது. கடல் நீர் காட்டுக்குள்ளும் புகுந்துகொள்ள… மரத்தின் மீதேறி அங்கேயே மூன்று நாட்கள் இருக்க வேண்டி இருந்தது.

அய்ந்தாவது நாள் கடல்நீர் வற்றிவிட, ஊருக்குள் திரும்பிவந்தால், ஆழிப்பேரலை ஆறாத ரணமாக ஒட்டுமொத்த ஊரையும் புரட்டிப்போட்டு வைத்திருந்தது. டெபோராவின் வீடும், பள்ளியும், அவளுடைய பாடப்புத்தகங்களும் மொத்தமாகக் காணாமல் போயிருந்தன. அவளுடைய பள்ளித் தோழிகள் சிலரை கடல் தின்றிருந்தது. கார்  நிகோபார் என்கிற அவளுடைய குட்டித்தீவிலிருந்து குடிபெயர வேண்டியதாயிற்று.

அந்தமானில் எல்லாவற்றையும் புதிதாகத் தொடங்க வேண்டியிருந்தது. புதிய இடம், புதிய மனிதர்கள் மிரட்சியாக இருந்தது. சுனாமிக்கு முன்புவரை நீளம் தாண்டுதலில் இந்தியாவுக்காக விளையாடி சாதிக்க வேண்டும் என்பதுதான் டெபோராவின் லட்சியமாக இருந்தது. ஆனால் சுனாமி உருவாக்கிய பாதிப்பு விளையாட்டிலும் வெளிப்பட்டது. பழையபடி விளையாட முடியவில்லை. உடல் அளவிலும் உள்ளத்தின் ஆழத்திலும் டெபோரா சோர்ந்திருந்தாள்.

சுனாமி மனதளவில் உருவாக்கிய பாதிப்பிலிருந்து மீளமுடியாமல் திண்டாடினாள் டெபோரா. இரவில் உறக்கம் வராமல் அச்சத்தில் விழித்துக் கொள்வாள், அப்பா ஆறுதல் சொல்வார் சுனாமியில் இழந்த நண்பர்களை, ஆசிரியர்களை நினைத்து கண்ணீர் வடிப்பாள். பள்ளிக்கு பல கிலோமீட்டர்கள் நடக்க வேண்டியிருந்தது. அப்பா வாங்கித் தந்த சைக்கிள்தான் உதவியாக இருந்தது. சுனாமி பாதிப்பிலிருந்து மீள அவளுக்கு ஏதாவது தேவையாயிருந்தது. மீண்டும் விளையாட்டை நோக்கியே ஓடினாள். பழையபடி தடகளப் பயிற்சியில் ஈடுபட்டாள். வீட்டிலிருந்து பள்ளிக்கு சைக்கிளில் செல்வதால் சைக்கிளிங் போட்டிகளிலும் கலந்துகொள்ளத் தொடங்கினாள்.

மாநில அளவிலான தடகளப் போட்டியில் கலந்துகொண்டாள். அதில் சைக்கிளிங் பிரிவிலும் கலந்து கொண்டவளுக்கு எதிர்பாராமல் பதக்கம் கிடைத்தது! அந்தப் போட்டிக்கு வந்திருந்த மூத்த விளையாட்டு வீரர்கள், நீ சைக்கிளிங்கை மட்டும் கான்செண்ட்ரேட் பண்ணு. பெரிய ஆளா வருவ என்று உற்சாகமூட்ட… இறுக்கிப்பிடித்துக் கொண்டாள் சைக்கிள் கைப்பிடியை. அதற்குப் பிறகு பத்தாண்டுகளாக கால்களால் நடக்கிற நேரம் போக மீதி நேரமெல்லாம் சைக்கிள் சவாரிதான்! மாநில அளவிலான போட்டிகளில் தொடங்கிய பதக்க வேட்டை இப்போது சர்வதேசப் போட்டிகள் வரை நீண்டிருக்கிறது!

பேட்மின்டனுக்கு சாய்னா நெஹ்வால் எப்படியோ, அப்படித்தான் டெபோரா சைக்கிளிங்கிற்கு! வருங்காலத்தில் இவ்விளையாட்டில் இந்தியாவின் முகமாக டெபோரா திகழ்வார் என்று வாயாரப் புகழ்கிறார், இந்திய சைக்கிளிங் சங்கத்தின் ஓம்கார்சிங். டெபோராவின் சாதனைகள் எதுவுமே அதிகமும் கவனம் பெறாதவை. அதைப் பற்றி டெபோராவும் அலட்டிக் கொள்வதில்லை!

அவருடைய கவனம் முழுக்க விளையாட்டில் மட்டும்தான் நிறைந்திருக்கிறது!

2012 இல் அமிர்தசரஸில் நடந்த தேசிய ஜுனியர் போட்டியில் இரண்டு தங்கங்களை வென்று இந்திய அணியில் இடம்பிடித்தவர், 2013 இல் ஆசிய சைக்கிளிங் சாம்பியன்ஷிப்பின் ஜுனியர் பிரிவில் ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம் வென்றபோது சர்வதேசக் கவனத்தை ஈர்த்தார்.

சென்ற வாரம் தைவானில் நடந்த சர்வதேசப் போட்டியில் இந்தியாவிற்காக முதன்முறையாக பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார். அதுவும் ஒரே ஒரு பதக்கமல்ல, அய்ந்து பதக்கங்கள். அதில் ஒன்று தங்கம். இன்னொரு தங்கத்தை மைக்ரோ செகன்டில் தவறவிட்டிருக்கிறார்!

தடகள வீரர்களே போதிய கவனம் பெறமுடியாத நம் நாட்டில், சைக்கிளிங் மாதிரியான விளையாட்டில் அந்தமான் நிகோபார் மாதிரியான பின்தங்கிய பகுதியிலிருந்து வந்து சாதிப்பதெல்லாம் தேவதைக் கதைகளில் வருகிற சாகசங்கள்தான்! டெபோராவின் இந்த சாகசம் அவரைப் போன்ற இளைஞர்களுக்கு எதிர்காலத்தில் நிச்சயம் நம்பிக்கை ஒளி பாய்ச்சும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *