தீபாவளி “இந்துப் பண்டிகை” அல்ல!
தீபாவளி கொண்டாடுவோரே இவற்றைச் சிந்தியுங்கள்
– குடந்தய் வய்.மு.கும்பலிங்கம்
பூமியைப் பாயாகச் சுருட்டினான் என்கிற கதையை ஒத்துக் கொண்டு நம்பிக் கடைப்பிடிக்கின்ற தமிழா! நீ உலகம் தட்டை என்கிற காட்டுமிராண்டிக் காலக் கற்பனைக் கதைகளோடு தொடர்பு கொண்டு ஏன் உன்னை இழிவுபடுத்திக் கேவலம் செய்து கொள்கிறாய்?
அச்சமும், அறியாமையும் சேர்ந்து பெற்றெடுத்த பிள்ளைகளே மதமும், கடவுளும் என்கிற நமது அறிவுப்பூர்வமான நாத்திக வாதத்தை தீபாவளி பற்றிய மூடக்கதை மெய்ப்பித்து விட்டதே!
பள்ளியில் பாடம் பயின்ற காலத்தில் உலகம் உருண்டை என்ற கருத்தை ஒப்பியும் படித்தும் தேர்வு எழுதி வெற்றி பெற்ற நீ பூமி தட்டை என்ற புராணக் கதையை நம்பி தீபாவளி கொண்டாடலாமா?
உலகின் அனைத்துக் கண்டங்களையும் தன்னுள் அடக்கிய பூமியை ஒட்டு மொத்தமாக இரண்யாட்சதன் பாயாகச் சுருட்டினான் என்றால், இக்கதைக்கு ஆதாரமான விழா மட்டும் இந்தியாவுக்கும், இந்து மதத்திற்கும் மட்டும் சொந்தம் ஆவானேன்? உலகம் முழுவதும் அல்லவா கொண்டாடப்பட வேண்டும்.
பூமி வேறு கடல் வேறா?
இரண்யாட்சதன் பாயாகச் சுருட்டிய பூமியுடன் கடலுக்குள் புகுந்தான் என்று சொல்லுகிற ப(க்)தர் தமிழா! அந்தக் கடலும் பூமியில் தானே உள்ளது?
கடல், ஆறு, ஏரி, குளம், குட்டை, காடு, மேடு, பள்ளம், குன்று, மலை, சமவெளி ஆகிய அனைத்தும் ஒரு சேர அமைந்த முழுப் பகுதியே பூமி. அது முழுமையும் பாயாக சுருட்டப்பட்ட பின் கடலில் எப்படிப் புகமுடியும்? கடலும் சேர்ந்து சுருட்டப்பட்டு விட்டதே!
தீபாவளி பற்றித் தமிழறிஞர்கள் கருத்து தீபாவளி தமிழர்க்கு உரியதன்று!
தீபாவளிப் பண்டிகை தமிழருக்கு உரியதாகத் தோன்றவில்லை. நரகாசுரன் என்ற ஓர் அசுரனைக் கொன்றதற்காக மகிழ்ச்சி அடைதலைக் குறிப்பதற்காக அப்பண்டிகை வழக்கத்தில் கொண்டாடப்படுகிறது. அது புராண நம்பிக்கையைச் சார்ந்தது. அசுரர் சரித்திர ஆராய்ச்சியாளர், ஆரியர் பகைவரே அசுரர் எனப்பட்டார் என்பர். ஆரியர் பகைவருள் ஆதியில் திராவிடர்களும் அடங்குவர், ஆதலின் அசுரர் கொலைக்காகத் தமிழர் மகிழ்ச்சி அடைதல் ஏற்றதன்று. (தமிழறிஞர் கா. சுப்பிரமணியன் பிள்ளை அவர்கள் எழுதிய தமிழர் சமயம் என்ற நூல், பக்கம் 62)
வடநாட்டுப் பண்டிகையே தீபாவளி!
தீபாவளி குறித்து வெவ்வேறு கதைகள் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வழங்குகின்றன. தமிழகத்தில் தீபாவளிக்கு நரகாசுரன் கதை கூறப்படுகிறது. இக்கதைக்கும், தீபாவளிக்கும் தொடர்பே இல்லை.
(பேராசிரியர். அ.கி.பரந்தாமனார் அவர்கள் எழுதிய நாயக்கர் வரலாறு என்னும் நூலில், பக்கம் 433 – 434)
பார்ப்பனர் சூழ்ச்சியே தீபாவளி
தீபாவளி என்னும் சொற்றொடர் பொருளை ஆராயுங்கள். அத்திருநாளுக்கும், கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நிகழ்ச்சிக்கும் ஏதொரு தொடர்பும் இல்லை என்பது தெளியப்படும். தீபாவலி என்பது தீப ஆவலி எனப் பிரிந்து விளக்கு வரிசை என்றே பொருள் தரும்… ஆதலால் தீபாவளி நரகாசுரன் கதைக்குச் சிறிதும் இசைவது அன்று.
(சைவப் பெரியார் மறைமலை அடிகள் எழுதிய தமிழர் மதம் என்ற நூலில், பக்கம் 200 – 201)
சமண சமயப் பண்டிகையே தீபாவளி
தீபாவளி சமணரிடமிருந்து இந்துக்கள் பெற்றுக் கொண்ட பண்டிகை. கடைசித் தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் பாவாபுரி நகரிலே அவ்வூர் அரசனுடைய அரண்-மனையிலே தங்கி இருந்தபோது அங்குக் குழுமி இருந்த மக்களுக்கு அறிவுரை செய்தருளினார். இரவு முழுவதும் நடைபெற்ற இந்தச் சொற்-பொழிவு விடியற்காலையில் முடிவடைந்தது. வைகறைப் பொழுது ஆனபடியினாலே சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் அனைவரும் தத்தம் இல்லம் செல்லாமல் அவரவர் இருந்த இடத்திலேயே உறங்கி விட்டனர். வர்த்தமான மகாவீரரும் அமர்ந்திருந்த ஆசனத்தில் இருந்தபடியே இயற்கை எய்தினார். உலகத்திற்கு அறிவொளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக்கள் நினைவு கூர்ந்து வழிபடும் பொருட்டு அவர் இயற்கை எய்திய நாளில் வீடு தோறும் விளக்குகளை ஏற்றி வைத்து விழாக் கொண்டாடும்-படி ஏற்பாடு செய்தனர். அது முதல் இந்த விழா (தீபம் = விளக்கு, ஆவலி = வரிசை; தீபாவளி) மகாவீரர் விடியற்காலையில் இயற்கை எய்தியபடியால் தீபாவளி என்ற பெயரில் விடியற்காலையில் கொண்டாடப்-படுகிறது. விடியற்காலையில் நீராடிய பின்னர் திருவிளக்கு ஏற்றி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கமாக இருக்கிறதன்றோ!
சமண சமயம் வீழ்ச்சி அடைந்த பிறகு சமணர்கள் பெருவாரியாக இந்து மதத்தில் சேர்ந்தனர். சேர்ந்த பிறகும் அவர்கள் வழக்கமாக இந்தப் பண்டிகையைக் கொண்டாடி வந்தனர். இந்த வழக்கத்தை நீக்க முடியாத ஆரியர்கள் இதைத் தாமும் ஏற்றுக் கொள்ள வேண்டியதா-யிற்று. ஆனால் பொருத்தமற்ற புராணக்கதை-களைக் கற்பித்துக் கொண்டார்கள், திருமால் நரகாசுரனைக் கொன்றார் என்றும், அவன் இறந்த நாளைக் கொண்டாடுவதுதான் தீபாவளி என்றும் கூறப்படும் புராணக்கதை பொருத்த-மானது அன்று.
(கல்வெட்டராய்ச்சி அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் எழுதிய சமணமும் தமிழும் என்ற நூலில், பக்கம் 79 – 80)
அசுரர் கொலைக்கு விழாவா?
தீபாவளியின் உண்மையறிந்தவர்கள் ஒரு சிலரே ஆவார்கள். பெரும்பாலோர் நரகாசுரனைக் கண்ணபிரான் சம்கரித்தார். அந்த அரக்கனை அவர் அழித்த நாளே தீபாவளி என்று கூறிக் கொண்டு இருக்கிறார்கள். நரகாசுரனை கொன்ற காரணத்தினால் கொண்டாடப்படுவது தீபாவளி என்பது பிழை. ஓர் அசுரனைக் கொன்றதற்காக ஒரு கொண்டாட்டம் இருக்கமுடியாது. அப்படி-யானால் இராவணன், இரணியன், இடும்பன் மகன் சலந்தரன், அந்தகன் முதலிய அரக்கர்களைக் கொன்றதற்கும் கொண்டாட்டம் இருக்க வேண்டும். (ஆனால் அவ்வாறு இல்லையே) நரகாசுரனைக் கொன்றதற்கும், தீபாவளிக்கும் தொடர்பு இல்லை என உணர்க. நரகாசுரனைக் கொன்றதற்காகத் தீபாவளி ஏற்பட்டதன்று.
(திருமுருக கிருபானாந்த வாரியார் சுவாமிகள் எழுதிய வாரியார் விரிவுரை விருந்து என்ற நூலில், பக்கம் 95)