– கி.வீரமணி
சுயமரியாதை இயக்கத்தினை அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் தொடங்கிய பின், அவரிடம் சிறந்த ஆய்வு அறிஞர்கள் _ சுவாமி கைவல்யம் போன்றோர், பொதுவுடைமைச் சிற்பி சிங்காரவேலு போன்றவர்களும், மேடைகளில் ஏறி கொள்கை முழக்கங்களைச் செய்து, பட்டிதொட்டி, காடுகழனியெல்லாம் அறிவுக் கொள்கையை நீர்ப்பாய்ச்சி, உரம்போட்ட பேச்சாளர்களாக, போட்மெயில் பொன்னம்பலனார் (இவர் சொந்த ஊர் லால்குடியை அடுத்த பூவாளூர். எனவே பூவாளூர் அ.பொன்னம்பலனார் என்று அழைக்கப்பட்டாலும்) பேச்சை வைத்து பலரால் அறியப்பட்டவர். அந்நாளில் அவ்வளவு வேகமாகப் பேசுவார்! போட் மெயில் என்பது இண்டோ_சிலோன் எக்ஸ்பிரஸ். அந்நாளில் தனுஷ்கோடி சென்று இலங்கை செல்லுவோர் பயணித்ததால், இதன் தொடர்பு கப்பலைப் பிடிக்க உதவியதால் வெகுமக்கள் சொல்லில் போட் மெயில் (Boat Mail) என்று கூறினால் வெகுவேகமாகச் செல்லும் விரைவு வண்டி அது. அதனைப் போலவே பொன்னம்பலனார் பேச்சு இருக்கும், அஞ்சா நெஞ்சன் தளபதி பட்டுக்கோட்டை அழகிரிசாமி, கி.ஆ.பெ.-விசுவநாதம் _ இந்த வரிசையில். முதுகுளத்தூரில் பிறந்தவராயினும் பெரிதும் தங்கியிருந்தது குடந்தையில் என்பதால் பாவலர் பாலசுந்தரம் அவர்களை குடந்தைப் பாவலர் பாலசுந்தரம் என்றே அழைப்பர்.
1938இல் ஹிந்தி எதிர்ப்பு இயக்கம், தமிழர் பெரும்படை, பிரச்சாரப் புயல் வீசியபோது, மேடைகளில் ஒலித்த ஓடிவந்த இந்திப் பெண்ணே கேள்
நீ தேடிவந்த நாடிதில்லையே! என்ற பாட்டு பிரபலம் என்பார்கள்.
நமது கலைஞர்கூட தனது இளமைக்கால நினைவுகளில் மலரும் நினைவாக இதனைக் கூறுவார்.
அப்பாட்டினை எழுதியவரும், பின்னாளில் பராசக்தி நாடகம், கதை வசனத்தை எழுதி, தேவி நாடக சபை _ இரத்தினம் அவர்களை நடத்த வைத்த சீரிய படைப்பாளி பாவலர் பாலசுந்தரம் அவர்கள் ஆவார்.
கம்பீரமான குரல், மிடுக்கான தோற்றம் _ கடைசி வரை பெரியார் தொண்டராக சபலமற்று வாழ்ந்த சுயமரியாதைச் சுடரொளி நம் பாவலர். அவரது துணைவியராக _ வாழ்விணையராக ஆனார் தோழர் பட்டம்மாள்.
1938இல் ஹிந்தி எதிர்ப்புப் போரில் கருவுற்ற நிலையிலும் களம் கண்ட வீராங்கனை. அவருக்கு சிறையில் பிறந்த ஆண் மகவுக்கு தமிழரசன் என்று பெயர் சூட்டினார்கள். ஏற்கனவே ஒரு பெண். அவர் சற்று ஊனமுற்ற உடல்நலக் குறைவுள்ளவர். பாவலர் அவர்கள் மறைந்த பிறகு, அவரது குடும்பத்தவர்கள் குறிப்பாக பட்டம்மாள் பாலசுந்தரம் அவர்கள் தொடர்ந்து, எல்லாப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு, முன்னாளில், இறுதிவரை கழகத்திற்கு உழைத்த வீராங்கனை ஆவார்கள்!
மகளிர் அணித் தோழியர்களுக்கு ஓர் வழிகாட்டியாகவே திகழ்ந்தவர். பெரும் வசதியில்லாமல் இருந்த நிலையில்கூட எப்போதும் கொள்கை வயப்பட்ட வாழ்க்கையையே வாழ்ந்துகாட்டினார்.
அவரது தொண்டறத்தைப் பாராட்டி ஊக்கப்படுத்தும் நோக்கத்தோடு, அவர் வாழ்ந்தபோதே, பட்டம்மாள் _ பாலசுந்தரம் பூங்கா என்ற ஒன்றை, தஞ்சை வல்லத்தில் நடைபெறும் பெரியார் நூற்றாண்டு (மகளிர்) பாலிடெக்னிக் காலேஜில் ஒரு தோட்டத்திற்கு அப்போதே பெயரிடப்பட்டு, அவ்வம்மையாரின் தொண்டினைப் போற்றினோம்!
இத்தகைய வீராங்கனைகள் கட்டிய மேடைதான் இன்றைய கழகம்.
பாவலர் குடும்பம் ஒரு கொள்கைக் குடும்பமாகவே திகழ்ந்தது இறுதிவரை என்பது பாராட்டத்தக்கது மட்டுமல்ல. மற்றவர்களால் பின்பற்றத் தக்கதும் ஆகும்.