புரட்சியை வரைந்த தூரிகை

நவம்பர் 01-15

“ஒப்பற்ற ஓவியர் புகழேந்தியின் சேகுவரா ஓவியக் கண்காட்சி கண்டேன் _ – உண்டேன். சேகுவரா _- புரட்சியின் பூபாளம். செயற்கரிய செய்த சரித்திரச் சாதனையாளர். அவரை நூல்களில் பல பக்கங்களில் தருவதற்குப் பதிலாக, ஓவியம் வரைந்து பேச வைத்துள்ளார் நம் ஓவியர் புகழேந்தி அவர்கள். இதை விரிவாக்கி, விளக்கக் குறிப்புகளுடன், ஒரு புத்தக வடிவில் கொண்டு வந்தால், அதைவிட இளைஞர்களுக்குப் புரட்சிப் பாடநூல் வேறு இருக்க முடியாது. அறவழியைப் புரியாதவர்கள்,

அவர் வழியைப் புரிந்துகொள்வார்களாக!

என்று ஓவியக் கண்காட்சியைப் பார்த்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார் என்றால் ஓவியர் புகழேந்தியின் “சேகுவேரா: புரட்சியின் நிறம்” என்ற தலைப்பிலான ஓவியங்களின் வீச்சு எப்படியிருந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

கோடுகளோ, வண்ணங்களோ, முகங்களோ, முகமற்றவர்களோ, மனிதகுல அழிவோ, கொடுங்கோல் இழிவோ, தூரிகையோ, தூவலோ… எதை வரைந்தாலும், எப்படி வரைந்தாலும், எதைக் கொண்டு வரைந்தாலும் அத்தனையிலும் கருத்துத் தெளிவும், ஓவிய நுணுக்கங்களும், சமூக அக்கறையும் நிறைந்-திருக்கும். அது தான் ஓவியர் புகழேந்தியின் தனித்துவமான பாணி. அவரின் பணியும் கூட.

எழுத்துக்களால் வடிப்பதற்கு நாம் சிரமப்படும் கருத்துக்களையும், காட்சிகளையும் வெகு எளிதில் உறைக்கும்படி புரியவைப்பன அவரது ஓவியங்கள். கடந்த 30க்கும் மேற்பட்ட ஆண்டுகளில் அவர் மக்களின் பார்வைக்கு வைத்துள்ள ஓவியங்கள் தமிழர்களின் இன்னலை, மனிதகுலத்தின் சிக்கலை, புரட்சியை, புரட்சியாளர்களைத் தான் காட்சிப்-படுத்தியிருக்கின்றன. ஈழத்தமிழர்களின் துயரை, இனப்படு-கொலையின் வலியை, குஜராத் பூகம்பத்தின் அழிவை, அதனினும் கொடூரமான மோடி கும்பலின் வன்முறையை நேரில் பார்த்தது போல் உணரும் வலியைத் தந்தவை அவரது முந்தைய ஓவியத் தொகுப்புகள். ஏழை எளிய மக்களுக்காக, பெண்களுக்காக, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பட்டம், பதவிகளை மட்டுமல்ல தன்னையும் மறுத்துப் போராடிய தலைவர் தந்தை பெரியாரைப் போல, அர்ஜெண்டீனாவில் பிறந்து, கியூபாவுக்காகப் போராடி, வெற்றிகண்டு, பதவி பெற்றாலும், அதைத் தூக்கி ஓரத்தில் வைத்துவிட்டு, காங்கோ, பொலிவியா எனத் தன் விடுதலைக் கிரணங்களால் காடுகளைத் துளைத்துப் பரப்பிய புரட்சிக் கதிரொளி தான் சேகுவேரா. தந்தை பெரியாரை கோட்டுத் துண்டுகளின் குவியலாக்கி, திசை முகமாகத் தமிழகமெங்கும் தவழவிட்ட புகழேந்தி, இந்த முறை சேகுவேராவின் நீள முடிகளைப் போன்ற நீளக் கோடுகளால் புரட்சியின் நிறத்தை வரைந்து காட்டியிருக்கிறார்.

குறும்புத்தனமும், குதூகலமும் கூடிய ஒரு புரட்சிக்காரனை கறுப்புக் கோடுகளால் மட்டுமல்லாமல், கொலாஜ் எனப்படும் ஒட்டுவடிவ ஓவியமாக, பல்வேறு கால-கட்டங்களில், பல்வேறு பணிகளில், பல்வேறு மனநிலையில் அமைந்த சேவின் படங்களைக் கோர்த்து, புரட்சியைக் குறிக்கும் சிவப்பு நிறமும், அந்தப் புரட்சிக்காக அவன் பயணித்த இயற்கைவெளியைக் குறிக்கும் நீல நிறமும் ஊடுபாவாகிப் பரவி, அதனின்றும் தனித்து நிற்கும் கறுப்புக் கோட்டோவியமாக ‘சே’வைப் பார்ப்பதில் நாம் உணர்ச்சிக் குவியலாகி விடுகிறோம்.

48 ஆண்டுகளுக்கு முன் மறைந்து போன ஒரு புரட்சியாளனை, பாப் பாடகர் என கருதும் அளவிற்கு அவரது படங்களை வணிகப் பண்டமாக்கி அவன் தடத்தை மறைக்க ஏகாதிபத்தியம் இன்றைக்கும் முயல்கிற-தென்றால், அந்தப் புரட்சியின் நிறத்தை அதே வீரியத்தோடு எடுத்துச் செல்ல வேண்டியதும், அவர் தம் கருத்தையும், அவரின் போராட்டத்தையும் பல்வேறு ஊடகங்களின் வாயிலாகவும் மீண்டும் மீண்டும் நினைவூட்டுதலும், நினைவூட்டுதலின் வாயிலாக உணர்வு பெறுதலும், உணர்வூட்டுதலும் மக்களை நேசிக்கும் ஒவ்வொரு படைப்பாளனின் கடமை என்பது புரியும்.

தன் கடமையை நேர்த்தியாகவும், சிறப்பாகவும் செய்திருக்கிறார் ஓவியர் புகழேந்தி. அவர் படைப்பினை ஏந்திச் செல்ல வேண்டியது இனி மனித குலத்தின் கடமை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *