– டாக்டர் வி.மோகன் (சர்க்கரை நோய் வல்லுநர்)
எங்கள் மையத்தில் நூற்றுக்கும் அதிகமான பச்சிளங் குழந்தைகள் சர்க்கரை நோய் சிகிச்சை பெறுகிறார்கள். இவர்களுக்குத் தினமும் இன்சுலின் ஊசி போடுவதற்குப் பதிலாக மரபணுப் பரிசோதனை செய்து, வாய் வழியாக மருந்து தருகிறோம். ஒரு குறிப்பிட்ட மரபணுவில் ஏற்படும் மாற்றம் (வீஸீரீறீமீ ரீமீஸீமீ னீணீவீஷீஸீ) ஆறு மாதங்களுக்குட்பட்ட குழந்தைக்குச் சர்க்கரை நோய் வருவதற்கான காரணம்.
பிறந்த குழந்தைக்கு ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதை டைப் 1 சர்க்கரை நோய் என்று தவறாகப் புரிந்துகொண்டு, வாழ்க்கை முழுவதும் இன்சுலின் ஊசிபோட வேண்டும் என்று சொல்கிறார்கள். நோய் பற்றிய சரியான புரிதல் டாக்டர்களுக்கே இல்லாததால் பல பச்சிளங்குழந்தைகள் இன்சுலின் கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள்.
பச்சிளங் குழந்தைகளுக்குச் சர்க்கரை இருப்பது தெரிந்தால் மரபணுப் பரிசோதனை செய்ய வேண்டும். ஒரு குறிப்பிட்ட மரபணுவில் மாற்றம் இருப்பது உறுதியானால் இன்சுலின் போடுவதை நிறுத்திவிட்டு வாய் வழியாக மருந்து தரலாம். இதுவும் வாழ்நாள் முழுவதும் தர வேண்டியதுதான்.
ஆனாலும், இன்சுலின் ஊசியைக் காட்டிலும் வாய் வழியாகத் தரப்படும் மருந்துகள் பச்சிளங் குழந்தையின் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாகச் செயல்படுவது உறுதி செய்யப்-பட்டுள்ளது. பச்சிளங் குழந்தை என்பதால் தினமும் ஊசி குத்துவதில் இருந்து நிவாரணமும் இதில் கிடைக்கிறது.
பச்சிளங் குழந்தைகளுக்குச் சர்க்கரை நோய் பிரச்சினை வருவதும் அதற்கான மரபணுப் பரிசோதனை இருப்பதும் பெரும்பாலும் டாக்டர்களுக்கே தெரிவதில்லை என்பதுதான் இதில் வருத்தமான விஷயம். இதனாலேயே பிறந்த குழந்தைகளில் எத்தனை பேர் இதுபோன்ற பிரச்சினையால் பாதிக்கப்-படுகிறார்கள் என்பது பற்றிய சரியான விவரங்கள் தெரிவதில்லை.
கொல்கததாவைச் சேர்ந்த பிறந்து 3 மாதங்களே ஆன இவானா என்ற குழந்தையை இங்கு எடுத்து வந்தார்கள். தினமும் 4 முறை இன்சுலின் ஊசி போட்டுக் கொண்டிருந்த குழந்தைக்கு மரபணுப் பரிசோதனைக்குப் பின் இன்சுலின் போடுவதை நிறுத்திவிட்டு வாய் வழியாகச் சர்க்கரை நோய்க்கான மருந்தைக் கொடுத்தோம். 362 மி.கி.டிஎல் என்ற சர்க்கரை அளவு 3 நாளில் 84 மி.கி.டிஎல் ஆகக் குறைந்துவிட்டது. எப்போதும் தூங்கிக்கொண்டே இருந்த குழந்தை தற்போது இயல்பாக இருக்கிறது.
இத்தனைக்கும் அவர்களின் குடும்பத்தில் யாருக்கும் சர்க்கரை நோய் இல்லை என்று கூடுதல் விவரத்தையும் சொல்லி தெளிவு படுத்தினார் சர்க்கரை நோய் வல்லுநர் மருத்துவர் வி.மோகன் அவர்கள்.