வெள்ளைத் தோல் ஹீரோயின் இல்லை. முக்கியப் பாத்திரத்தில் பல்தூக்கலாக கண்ணாடி போட்டிருக்கும் அடித்தட்டு சிறுவன்.
யதார்த்தத்தில் பார்க்கும் முகங்கள் தான் படத்தில். ‘sex education’ அய் ஆதரித்துப் பேசும் ஆசிரியை, பிறப்புறுப்பை கரும்பலகையில் வரைந்து வகுப்பெடுக்கிறார். ஷர்ட் போட்டுக்கொண்டு ஆட்டோ ஓட்டும் பெண்.
காதல் மணம் செய்தாலும், தன் மதத்தைத் துறக்கமுடியாமல், கணவன் மதத்தையும் ஏற்க முடியாமல் (எதற்கு துறக்க, ஏற்க என்பது ஒருபுறம் இருந்தாலும்) தவிக்கும் பெண்ணின் மன உணர்வு. `சீக்கிரம் போய் பிள்ளையாருக்கு நெய்வேத்தியம் செஞ்சு மோட்சத்துக்கு சீட் போடப்போறியா?’ `ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தைக் காட்டமாட்டோம், திருப்பி அடிப்போம்’ என்ற தோழரின் கூர்மையான வசனங்கள். பள்ளிக் குழந்தைகளைப் பற்றி மீடியாப் பெண் நண்பனிடம் பேசுவதில் இருக்கும் உண்மை. பாடலின் இடையில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணை ஆதரித்து நடக்கும் கூட்டக் காட்சி… `குற்றம் கடிதல்’ திரைப்படம் அருமை!
வகுப்பறையில் ஆசிரியை மாணவனை அடித்து விடுகிறார், அதற்கப்புறம் நடப்பது என்ன? இந்த சிறிய இழையில் இயக்குனர் பின்னியிருக்கும் செய்திகள் ஏராளம். யாரையும் குற்றம் சொல்லாமல், எதையும் நியாய, குற்றப்படுத்தாமல் அந்தந்த கதாபாத்திரங்களை காண்பித்திருப்பது நம்மை சுற்றியிருக்கும் நிஜ மனிதர்களை நினைவுபடுத்துகிறது. `சின்னஞ்சிறு கிளியே’ பாடல் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அபாரம். திரையில் வரும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப அப்பாடல் வரிகளை பொருத்தமாக கோர்த்திருக்கிறார்.
24 மணி நேரத்தில் நடக்கும் கதை, ஏகப்பட்ட கதாபாத்திரங்கள், அவர்களின் உண்மையான உணர்வுகள், நுணுக்கமான காட்சிகள், சமூக சாடல்கள் என்று ஒவ்வொரு ப்ரேமிலும் கச்சிதமான திட்டமிடலும், உழைப்பும் தெரிகிறது. இயக்குனர் பிரம்மாவுக்கும், மொத்தக் குழுவுக்கும் வாழ்த்துக்கள் !
திரைக்கு வரும் முன்பே தேசிய விருதை வென்ற இந்தப் படம், திரைக்கு வருவதற்கும், திரையரங்கம் கிடைப்பதற்கும் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. அதிலும் போராடி, மக்களைச் சென்று சேர்ந்திருக்கிறது குற்றம் கடிதல்.