ஜோதிடம்
அந்த இரட்டைத் தெருவில் காலை எட்டு மணி முதலே ஜோதிட சிகாமணி பண்டிட் பரந்தாமன் வீட்டில் மக்கள் கூட்டம் கூடத் தொடங்கிவிடும். நபர் ஒருவருக்கு வெற்றிலை பாக்கு , ஊதுவத்தி, பழம், ரூபாய் – 101. முன்னே வந்தவர்களுக்கு முன் உரிமையாக முன் வரிசையிட்டு ஜாதக நோட்டுடன் அந்த அறை முழுவதும் தினம் நிரம்பிவிடும்.
நடந்தது, நடக்கப்போவது, நடந்து கொண்டிருப்பது என மூன்று காலங்களையும் புட்டுப்புட்டு வைப்பாராம். அவரை ஜோதிடத்தில் புலி என்பவர் பலர். எட்டு மணி முதல் ஒரு மணி வரைதான் பார்ப்பார். முப்பது ஜாதகத்திற்கு மேல் பார்க்கமாட்டார் என்ற பெயர் வேறு. 30+101=3030 ரூபாய். கல்லா நிரம்பிடுத்து.
மேலும், பெரும்புள்ளிகளின் வீடு தேடிச்சென்று ஜாதகம் சொல்லி கணிசமான தொகையைக் கண்டிப்புடன் வசூலித்துவிடுவார்.
இன்று குறைவான ஜாதகம் மட்டுமே எடுத்துக்கொண்டார். மீதமுள்ளவர்களை நாளை மறுநாள் வரச்சொல்லி அனைவரையும் வெளியேற்றிக் கொண்டிருந்தார்.
தஞ்சாவூரில் 5 மணிக்கு பெரும்புள்ளி ஒருவருக்கு இன்று வருவதாகத் தேதி கொடுத்து அவசர அவசரமாகப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்.
ஆத்தை நன்னா பூட்டியாச்சோ எனக் கேட்டுக்கொண்டே மனைவி இரண்டு குழந்தைகளுடன் டாட்டோ சுமோ காரில் ஏறி தஞ்சாவூர் புறப்பட்டுச் சென்றனர்.
தங்கம் 120 பவுன், வெள்ளி 8 கிலோ, பட்டுச்சேலை 26, பட்டு வேட்டி 36, ரொக்கப்பணம் _ 2,60,000, வாசிங் மெசின், பிரிட்ஜ், ஏசி, எட்டு சீலிங் பேன், ஏர் கூலர்கள் என தன் வீட்டில் திருடு போன தனது வீட்டு சொத்துக் கணக்குகளைப் பதட்டத்துடன் காவல் நிலையத்தில் சொல்லிக்கொண்டிருந்தார் ஜோதிட சிகாமணி பண்டிட் பரந்தாமன்.
அந்த இரட்டைத் தெருவில் வெற்றிலை பாக்கு, பழம், தட்சணை 101 ரூபாயுடன் ஜாதக நோட்டுகளைச் சுமந்து மக்கள் கூட்டம் இன்னும் கழுவப்படாத முகங்களுடன் காத்து நின்றனர்.
– அணு கலைமகள்