ஆங்கில இலக்கிய உலகில் பரந்துபட்டு அறியப்பட்ட, உணரப்பட்ட கவிஞர், பெர்ஸி பைஷி ஷெல்லி (Percy Bysshe Shelley) ஆவார். நாத்திகக் கருத்தினை வலிந்து பேசி, தன் வாழ்நாளில் சமரசம் செய்துகொள்ளாமல் அதற்காகவே சமரம் செய்த கவிஞர் ஷெல்லி. காதல் இலக்கியத்தில் நிலைத்து நிற்கும் பங்களிப்பினை தனது கவிதைப் படைப்புகளால் அலங்கரித்தவர் ஷெல்லி. ஆனால், காதல் கவிஞர் என பலதரப்பினராலும் அறியப்பட்ட ஷெல்லி, ஒரு நாத்திகர் என்பது அவ்வளவாக அறியப்படவில்லை. தன்னளவில் மட்டும் நாத்திகக் கொள்கையைக் கடைப்பிடித்த கவிஞராக அவர் வாழவில்லை. நாத்திகத்தைப் பிரச்சாரம் செய்யும் கொள்கைப்பற்று, நடைமுறை ஆக்கம் கொண்ட கவிஞராக ஷெல்லி திகழ்ந்தார். நாத்திகம் என்பது ஒரு பாவச்செயல் என பழித்துரைக்கப்பட்ட காலத்தில் – 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஷெல்லி. நாத்திகம் பேசியதாலேயே தான் வாழ்ந்த காலத்தில் இழிவுபடுத்தப்பட்ட ஷெல்லி, தான் கைக்கொண்ட நாத்திகக் கொள்கை வெற்றிமுகம் கண்டதை, ஏற்படுத்திய தாக்கத்தினை, நடைமுறையாக்கம் பெற்றதை தன் வாழ்நாளில் பார்க்க இயலவில்லை. 40- வயதினை எட்டும் நிலையில் படகு விபத்து ஒன்றில் அகால மரணமடைந்துவிட்டார்.
18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அரசியல் செல்வாக்கு மிக்க அயர்லாந்து குடும்பத்தில் பிறந்தார் ஷெல்லி. (ஆகஸ்டு 4, 1792).
அவரது தந்தையார் பிரிட்டனில் விக் (Whig) கட்சியினைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர். பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகக் கல்லூரியில் சேர்ந்த ஷெல்லிக்கு வகுப்பறையில் ஆசிரியரிடம் பாடம் கேட்பதைவிட புத்தகம் வாசிப்பதில்தான் நாட்டம் வெகுவாக இருந்தது.
தனது முதல் படைப்பான ஜாஸ்ட் டேராஸி (Zastrozzi) எனும் ஜெர்மனி மக்கள் பற்றிய நாவலில் அக்கதையின் வில்லன் மூலமாக தனது நாத்திகக் கருத்தினைப் பரப்பினார். இரண்டாவது நாவலை வெளியிடும்போது நாத்திகத்தின் தேவை (The Necessity of Atheism) எனும் தலைப்பிலான ஒரு கட்டுரைப் பிரசுரத்தினை வெளியிட்டார் (1811). அந்தக் கட்டுரையினை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கல்லூரி வளாகத்தில் தனது நண்பர்கள் மற்றும் மாணவர்களுக்கும் வழங்கி மகிழ்ந்தார். நாத்திகக் கொள்கைப் பரவலுக்கு அந்த இளம் பருவத்திலேயே ஆக்கம் கூட்டினார். நாத்திகக் கட்டுரை வழங்கியதற்காக பல்கலைக்கழக நிருவாகத்தினரால் நேரில் அழைக்கப்பட்டு விசாரணைக்கு ஆளானார்.
தனது கட்டுரைக்காகப் பெருமைப்பட்டு, தான்தான் அந்தக் கட்டுரையைப் படைத்தவர் என்பதை வெளிப்படையாக எடுத்துக்கூறினார். நாத்திகத்தைப் பரப்பியதற்கு ஷெல்லி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டார் (மார்ச் 25, 1811).
தனது மகன் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டதை அறிந்து தலையிட்ட ஷெல்லியின் தந்தையார், மீண்டும் கல்லூரியில் தனது மகனைச் சேர்த்துக் கொள்ள வேண்டுகோள் விடுத்தார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நிருவாகமோ கட்டுரை பற்றிய கருத்தினை மாற்றிக்கொண்டால், மன்னிப்புக் கோரினால் பல்கலைக்கழகத்தில் மீண்டும் சேரலாம் என நிர்ப்பந்தித்தது. நாத்திகக் கருத்தினை மாற்றிக்கொண்டு தனது கல்வியைத் தொடரவேண்டிய அவசியமில்லை என்று பகிரங்கமாகச் சொல்லிவிட்டு பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறுகிறார் ஷெல்லி.
19 வயதில் எப்படிப்பட்ட கொள்கைப்பற்று கொண்டவராக வாழ்ந்தார் ஷெல்லி! கல்வி மறுக்கப்பட்டாலும் கவலை இல்லையென கருத்துக் கனலாக விளங்கிய ஷெல்லி நாத்திகக் கொள்கை வரலாற்றில் ஒரு ஒளி விளக்காவார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலிருந்து ஷெல்லி வெளியேற்றப்பட்டு தற்பொழுது இருநூறு ஆண்டுகள் நிறைவு பெறுகிறது(2-011).
எந்தப் பல்கலைக்கழகம் ஷெல்லிக்கு கல்வி அளிக்க மறுத்ததோ அதே ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஷெல்லியின் கவிதை வரிகளை, பயிலும் மாணவர்களுக்குப் பாடமாகப் பின்பு போதித்தது; இன்றும் போதித்து வருகிறது. கல்வி மறுக்கப்பட்ட ஷெல்லியின் படைப்புகள் கல்விக்கான கருவிகளாக மாற்றம் பெற்ற செயல், கருத்துச் சுதந்திர மறுப்பு, அடக்குமுறை ஆகியன காலஓட்டத்தில் காணாமல் போய்விடும் என்பதற்கு வரலாற்று எடுத்துக்காட்டாய் விளங்குகிறது.
பேரறிஞர்கள், சமுதாயப் புரட்சியாளர்கள், பொதுநலம் பேணுவோர்தம் பிறந்த நாள் கொண்டாடப்படும் வேளையில் அவர்தம் லட்சியங்கள் பரப்பப்படுதல், முற்போக்கான நடைமுறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அதற்கு அடுத்த கட்டமாக, தனிமனிதர் பிறந்தநாள் முக்கியத்துவத்தைவிட, அவர்தம் வாழ்நாளில் _ லட்சியப் பாதையில் திருப்புமுனையாக அமைந்த நிகழ்வுகள் விமரிசையாகக் கொண்டாடப்பட வேண்டும்.
பொதுவுடைமைப் போராளி, இலக்கியவாதி மாக்ஸிம் கார்க்கியின் தாய் நாவல் படைக்கப்பட்ட நூற்றாண்டு விழாவானது கொள்கைப் பரப்பு நிகழ்வாக அனைவரது கவனத்தையும் கவரும் வகையில்- அக்கொள்கையின்பால் ஈடுபாடு கொள்ளும் வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு கொண்டாடப்பட்டது.
பரிணாமக் கொள்கையினைப் படைத்திட்ட இயற்கை விஞ்ஞானி சார்லஸ் டார்வினின் இருநூறாவது பிறந்தநாளோடு அவர் எழுதிய உயிர்களின் தோற்றம் (Origin of Species) எனும் புத்தகம் வெளியிடப்பட்டு 150 – ஆண்டு நிறைவு ஆன நிகழ்வும் சில ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. புராண நிகழ்வுகள், புனைகதை நிகழ்வுகள் பண்டிகைகளாகக் கொண்டாடப்படுவதால் மனிதச் சிந்தனை மழுங்கடிக்கப்பட்டு வருகிறது. ஆக்க ரீதியில் மானிடம் மேம்படும் வகையில் மனித வாழ்வில் விழாக்கள், கொண்டாட்டங்கள் அமைதல் வேண்டும். இதுபோலவே நாத்திகக் கவிஞன் ஷெல்லி நாத்திகத்தின் தேவை எனும் தனது கட்டுரைப் படைப்பிற்கு – நாத்திகப் பரப்பலுக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டதன் இருநூறு ஆண்டு விழா கொண்டாடப்பட வேண்டும். நாத்திக அமைப்புகள், மனிதநேய அமைப்புகள் இதற்கு முன்வர வேண்டும். இளைய தலைமுறையினரிடம், பொதுநலச் சிந்தனை கலந்த மானிட மேம்பாட்டில் அக்கறை உருவாகிட அத்தகைய நிகழ்வுகள் வழிவகுக்கும்.
வாழ்க நாத்திகக் கவிஞர் ஷெல்லி!
வளர்க ஷெல்லி வலியுறுத்திய நாத்திகம்!!
வாழ்வியல் மேம்பாட்டிற்கான உயிர்ச்சத்து நாத்திகம்தான்!!!
– வீ. குமரேசன்