ஆதிக்க வேரறுக்கும் ஆவேசம்தான் சேகுவேரா!

நவம்பர் 01-15

யார் இந்த சேகுவேரா? பனியனில் அலங்காரமாகப் போட்டுக்கொள்ளும் பல இளைஞர்களுக்கே தெரியாது!

எனவே, இளைஞர்களே அவரைப்பற்றிச் சுருக்கமாக அறியுங்கள்.

சேகுவேரா யார்? அவரே சுருக்கமாகச் சொல்கிறார்.

நான் அர்ஜெண்டினாவில் பிறந்தேன். அது ஒன்றும் ரகசியமல்ல. நான் ஓர் அர்ஜண்டினன். ஒரு கியூபன். தேவைப்பட்டால் எந்தவொரு நாட்டின் விடுதலைக்காகவும் நான் உயிரைத் தர சித்தமாகவுள்ளேன்.

 

உலகில் எங்கு அநீதி நடைபெற்றாலும் அதை நோக்கிப் பயணித்தலே எனது கொள்கை, நோக்கம், வேலை எல்லாம். அதனால் உலகிலுள்ள அனைவருமே எனது தோழர்களே!

ஆம். அர்ஜெண்டினாவில் பிறந்தவர்தான் கியூபாவின் விடுதலைக்குப் போரிட்டு விடுதலை பெற்றார். பெரியார் கன்னடர் என்ற கபோதி-களும், கயவர்களும் இதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஆதிக்கம் ஒழிக்கும் பணியை முதன்மையாகக் கொண்டவர்களுக்கு எல்லா நாடும் அவர்கள் நாடே! அதைத்தான் பெரியாரும் சொன்னார்; சேகுவேராவும் சொன்னார்.

ஒரு நாட்டின் விடுதலை பெறப்பட்டவுடன் அடுத்த நாட்டின் விடுதலைக்குப் புறப்பட்டவர் சேகுவேரா.

கியூபா விடுதலைப் போராட்டத்தில் பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து போராடிய சேகுவேரா, போராடும் நிலையிலேயே இப்படிக் கூறினார்.

கியூபாவிற்கு விடுதலை கிடைக்கும் வரைதான் நான் உங்களுடன் இருப்பேன். அதன் பின் எங்கு என் பணி தேவையோ, எங்கு ஆதிக்கம் ஓங்கி நிற்கிறதோ எங்கு மக்கள் ஒடுக்கப்படுகிறார்களோ, உரிமை பறிக்கப்-படுகிறதோ அங்கு சென்று விடுவேன். என்று உறுதியாகக் கூறியவர். கூறியபடியே சென்றவர்.

ஆக, போராடி விடுதலை பெற்றுத் தருவதே என் பணி. மாறாக, அதன்பின் பதவியில் அமர்ந்து அதை அனுபவிப்பதல்ல என்றார். பெரியாரும் அப்படித்தான் மக்களுக்கு போராடினாரே தவிர, அவரைத் தேடிவந்த தமிழக முதல்வர் பதவியை 3 முறை உதறித் தள்ளினார். ஆங்கில ஆட்சியாளர்கள் வற்புறுத்திய போதும் மறுத்தார்.

உண்மையான மக்கள் தொண்டர்கள் இப்படித்தான் இருப்பார்கள். ஆனால், இன்றைக்கு நான்தான் முதல்மந்திரி என்று சொல்லிக் கொண்டுதான் மக்களுக்கு பணி செய்யவே வருகிறார்கள். இவர்கள் போராளிகள் அல்ல வணிகர்கள்.

கியூபா மக்களுக்குத் தொண்டாற்றி முடித்ததும், காங்கோ, பொலிவியா நாடுகளில் நிலவிய அடக்குமுறைகளுக்கு எதிராக, போராளிகளை உருவாக்க, பயிற்சியளிக்கச் சென்றார். காங்கோவில் வெற்றி பெற்றபின், பொலிவியாவிற்குச் சென்று, போராடி தொடக்கத்தில் வெற்றி பெற்றாலும் இறுதியில் ஏகாதிபத்திய கூலிப்படையிடம் சிக்கிக் கொண்டார். குண்டடிப்பட்டு கைது செய்யப்-பட்ட அவரைக் கொல்ல அமெரிக்க சி.அய்.ஏ. முடிவெடுத்து, சுட்டுக்கொல்ல முயன்றபோது, நண்பகல் 1 மணிக்கு கைகள் கட்டப்பட்ட நிலையில் தனியிடத்துக்கு அழைத்துச் செல்லப்-பட்டார். பின் முட்டி போடச் சொன்னார்கள். அதற்கு சேகுவேரா, முட்டிப்போட்டு உயிர்வாழ்வதைவிட நின்றுகொண்டே சாவதே மேல் என்று கர்ஜித்-தார். தன்னை நிற்க வைத்தே சுடு என்றார் எதிரியிடம். ஆனால், எதிரிகள் அதை ஏற்காத நிலையில்,

கோழையே சுடு! துணிவாய்ச் சுடு! உன் கைகள் நடுங்காமல் துப்பாக்கியை உயர்த்தி, எனது நெஞ்சைப் பார்த்துச் சுடு! என்று சாகும் நிலையிலும் தன்மான வகுப்பு நடத்திவிட்டு செத்தார் சேகுவேரா!

ஆம். சாகும் நிலையிலும் இறுதிப் பேருரை ஆற்றிவிட்டு மடிந்த தந்தை பெரியார் போலவே தான் அவரும் மாண்டார். பகத்சிங் போலவே-தான் மானத்தோடு சாக எண்ணினார்!

இளைஞர்களே! எங்கு ஆதிக்கம் தலை காட்டினாலும், எங்கு மக்கள் ஒடுக்கப்-பட்டாலும், உரிமை பறிக்கப்பட்டாலும், அவர்களுக்காய்ப் போராடுங்கள்! வெல்லும்வரை போராடுங்கள்! அதுவே, சேகுவேரா, பெரியார், பகத்சிங்  போன்றோர்களின் விருப்பம்! ஆம். ஆதிக்கம் அழிப்பதே இளைஞர்களுக்கு அழகு! இலக்கணம்!

– நேயன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *