அய்{யர்} அய்[யங்கர்) டெக்னாலஜியில் அடுத்தடுத்து தற்கொலை ஏன்?

நவம்பர் 01-15

உயர்கல்வி முழுக்க அவாள் ஆதிக்கம். பிற்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் உள்ளே நுழையமுடியாத அளவிற்கு தடைகள், தடுப்புகள். நீதிப்படியா? நேர்மைப்படியா? விதிப்படியா? என்றால் இல்லை அவாள் அகராதியில் நீதி, சட்டம், விதி எல்லாமே இரண்டு விதமாக இருப்பதுதானே வழக்கம். அப்படித்தான் இங்கும்.

 

1959ஆம் ஆண்டில் இந்தியத் தொழில்நுட்ப கழகங்கள் (Indian Institute of Technology)  பம்பாய், சென்னை, தில்லி, கான்பூர், கோரக்பூர், கவுகாத்தி ஆகிய இடங்களில் தொடங்கப்பட்டன. இந்த நிறுவனங்களின் வேந்தர் குடியரசுத் தலைவர். என்றாலும் இங்கு நீதியில்லை! நேர்மையில்லை! ஆரிய ஆதிக்கம்! ஆரிய மயம்!

1961ஆம் ஆண்டு நாடாளுமன்றச் சட்டத்தின் கீழ், இந்நிறுவனங்கள் கொண்டுவரப்-பட்டன. 1963இல் சட்டத்திருத்தம் கொண்டு-வரப்பட்டு, வெகுமக்களின் முன்னேற்றமே இதன் நோக்கம் என்று சட்டப்பூர்வமாக அறிவிக்கப்-பட்டது. மக்கள் வரிப் பணத்தில் பொதுமக்கள் மேம்பாட்டை இலக்காகக் கொண்ட நிறுவனங்கள் ஆரிய பார்ப்பனர்களின் ஆதிக்கக் கோட்டையாகச் செயல்படுவது முதல் விதி மீறல்.

நிறுவனம் தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் வரை அரசியல் சட்டம் உறுதி செய்திருந்த தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை பின்பற்ற இவர்கள் மறுத்து-விட்டனர். 1978ஆம் ஆண்டுதான் நீதிமன்றம் தலையிட்டபிறகு தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பின்பற்ற ஒப்புக்கொண்டனர். என்றாலும் அது பெயரளவிற்கே. நடை-முறையில் தாழ்த்தப்பட்டோருக்கான இடங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை.

2008 முதல் 2015 வரை பி.எச்.டி. படிப்பிற்கு அனுமதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை 142. பழங்குடியினர் எண்ணிக்கை 9. ஆனால், பொதுப்போட்டியில் உள்ளே நுழைந்த ஆரிய பார்ப்பனர் எண்ணிக்கை 1592.

எம்.எஸ்.படிப்பிற்கு பொதுப் போட்டி வழியாக நுழைந்த ஆரிய பார்ப்பனர் எண்ணிக்கை 1194 (இதில் மிகவும் குறைவான அளவு உயர் ஜாதியினர்) பிற்பட்டோர் 740. தாழ்த்தப்பட்டோர் 29. பழங்குடியினர் 3.

மற்ற படிப்புகளுக்கு பொதுப் போட்டியில் நுழைந்த ஆரிய பார்ப்பனர்கள் மற்றும் உயர் ஜாதியினர் 1,194; பிற்பட்டோர் 429.

பேராசிரியர்களில் 86.57% ஆரிய பார்ப்பனர்கள்; பிற்பட்டோர் 11.01%, தாழ்த்தப்பட்டோர் 2.05, பழங்குடியினர் 0.31. (ஒரு சதவீதம்கூட இல்லை)

சற்றேறக்குறைய 650 பேராசிரியர்கள், துணைப் பேராசிரியர்கள், 8,000 மாணவர்கள், 3,000 ஊழியர்கள் பணியாற்றும் இந்நிறு-வனத்தில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. (தகவல்: பிரன்ட் லைன் ஜூன் 26, 2015)

2008ஆம் ஆண்டு மனிதவளத் துறை அமைச்சகம், இடஒதுக்கீட்டை உறுதி செய்யக் கோரி குறிப்பாணை ஒன்றை அய்.அய்.டிக்கு  அனுப்பிய பின்பும் அந்நிறுவனம் அதை அமுல்படுத்த, மறுத்ததோடு அதை எதிர்த்தது. தனது செனட் கூட்டத்தைக் கூட்டி, இடஒதுக்கீட்டு ஆணையை நிறைவேற்ற முடியாது என்று தீர்மானமே நிறைவேற்றியது. மனிதவளத் துறை அனுப்பிய குறிப்பாணையைத் திரும்பப் பெற வேண்டும் என்று ஆட்சியாளர்-களுக்கு அறிவுறுத்தியது. தாழ்த்தப்பட்டோர், பிற்பட்டோருக்கு வாய்ப்புகளை மூடியது.
இந்திய மக்களின் வரிப்பணத்தில் படிக்கும் ஆரிய பார்ப்பன மாணவர்கள், பட்டம் பெற்றவுடனே அயல்நாட்டுப் பணிக்கு அதிகம் சம்பளம் பெற சென்றுவிடுகின்றனர். சில ஆண்டுகளாவது இந்தியாவில் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனையை இவர்கள் பின்பற்றுவதில்லை.

வசிஸ்டர் படிப்பு வட்டம், இராமாயண படிப்பு வட்டம், தூர்வாசர் படிப்பு வட்டம் என்று நடத்துவதற்கும், இடஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை வரைவந்து போராட்டம் நடத்துவதற்-கெல்லாம் அனுமதியளித்த ஆரிய பார்ப்பன அய்.அய்.டி. நிர்வாகம், பெரியார் அம்பேத்கார் வாசகர் வட்டம் வைக்க மட்டும் தடை விதித்தது. அம்பேத்கார் பெரியார் பற்றி பேசக்கூடாது என்றனர். ஆனால், ஆர்.எஸ்.எஸ். பேர்வழிகளான குருமூர்த்தி, அரவிந்த நீலகண்டன் ஆகியோரை அழைத்துப் பேசவைத்தனர். இப்படி எல்லாமே மனுநீதிச் செயல்பாடுகள்!

தற்கொலைக்குக் காரணங்கள் எவை?

முழுக்க முழுக்க ஆரிய பார்ப்பன ஆதிக்கக் கோட்டையாயும், ஆர்.எஸ்.எஸ். பயிற்சிக் களமாகவும், மனுதர்ம ஆட்சிப் பீடமாகவும் இருந்த அய்.அய்.டியில் தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும் பல்வேறு போராட்ங்-களுக்குப் பின் உள்நுழைந்ததால், ஆத்திரமுற்ற ஆரிய பார்ப்பனர்கள், இந்த மாணவர்களை பல்வேறு முறைகளில் கொடுமைப்படுத்தினர்; புறக்கணித்தனர்; படிப்பை தொடரமுடியாத வகையில் நெருக்கடிகளைத் தந்தனர்.

இதுவரை 50க்கும் மேற்பட்ட தலித் மாணவர்கள் அய்.அய்.டி. வளாகத்திற்-குள்ளும், விடுதியிலும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

எடுத்துக்காட்டாக பழங்குடி_ தாழ்த்தப்-பட்டோர் இணையருக்குப் பிறந்த சுஜி என்ற தலித் பெண். 12ஆம் வகுப்பில் ஆந்திர மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்றுத் தேறிய இம்மாணவி சென்னை அய்.அய்.டி.யில் சேர்ந்தார். தாழ்த்தப்பட்ட மாணவர் என்றால் அவர்களுக்கு ஓராண்டு கூடுதல் படிப்பு. மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்ற பெண் என்றாலும் தாழ்த்தப்பட்டவர் என்பதால் கூடுதலாக ஓராண்டு தனிப் பயிற்சியாம்! எப்படி பாருங்கள்!

சுஜியின் தனிப் பயிற்சி வகுப்பில் கணிதம் நடத்திய ஒரு பார்ப்பனப் பேராசிரியரையே விஞ்சும் அளவிற்கு சுஜியின் கணித அறிவு இருந்தது. இதைக் கண்டு எரிச்சல் அடைந்த அப்பேராசிரியர் அம்மாணவியைத் தனிப் பயிற்சித் தேர்வில் தோல்வியுறச் செய்தார். இதனால் பெரும் போராட்டம் வெடித்தது.

தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் முறை-யிட, அதன் தலைவர் கண்ணகி பாக்கியநாதன் அய்.அய்.டி.யிடம் விளக்கம் கேட்டார். தொடர் போராட்டத்தின் விளைவாய், அம்மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதி விலக்கப்பட்டு, அவர் தேர்ச்சி பெற்றதாய் அறிவிக்கப்பட்டார்.

பல்கலைக் கழக நீதிக் குழுவின் முன்னாள் தலைவர் சுகதேவ தோரட் நேரடியாக ஆய்வுகளைச் செய்து, 72% தாழ்த்தப்பட்ட மாணவர்கள் புறக்கணிப்பிற்கும், அவமானத்-திற்கும் உள்ளாகின்றனர் என்பதை வெளிப்-படுத்தினார்.

(ஆதாரம்: டைமஸ் ஆப் இந்தியா செப்-2014)

அய்.அய்.டி. தொடங்கியதிலிருந்து இயக்குநர்-களாக பி.வி.இராசேந்திரன், எல்.எஸ்.சிறீநாத், என்.வி.சி.சாமி, ஆர்.நடராஜன், அனந்த் என்று தொடர்ந்து பாஸ்கர் இராமமூர்த்தி வரை அனைவரும் ஆரிய பார்ப்பனர்களே என்பதால், அவர்களின் நிர்வாகத்தில் ஆரிய பார்ப்பன மனுதர்ம நடைமுறையால் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் பல்வேறு இன்னல்களை ஏற்று, வெந்து, நொந்து அதன் உச்சத்தில் தற்கொலை செய்து கொள்கின்றனர். என்று மாணவர்கள் கூறுகின்றனர்

கவுரி சங்கர் தற்கொலை:

2011 செப்டம்பர் 1ஆம் தேதி அய்.அய்.டி.  விடுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இவருக்கு வயது 36. சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர்.

பெங்களூரில் தனியார் கம்பெனியில் அதிகாரியாக வேலை பார்த்துவந்த இவர், அக்கம்பெனி அனுமதியுடன் சென்னை அய்.அய்.டி.யில் தங்கிப் படித்தார். இவருக்கு மனைவியும் இரு மகன்களும் உள்ளனர்.

ஆக, வேலையில் உள்ள, திருமணமான, குழந்தை பெற்ற ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார் என்றால் அவருக்கு அய்.அய்.டி. நிர்வாகம் தந்த நெருக்கடியில்லாமல் வேறு என்ன காரணம் இருக்க முடியும்? என்று சமூக ஆர்வலகள் கேட்கின்றனர்

நிதின் குமார் என்ற மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துவந்த மாணவனின் தற்கொலைக்கு நிர்வாகத்தின் கொடுமையே காரணம் தற்கொலைகளுக்கு என்பதை உறுதி செய்கிறது.

கேம்ப்பஸ் இன்டர்வியூவில் பெங்களூரில் நல்ல வேலையில் சேர இருந்த இந்த மாணவர் தற்கொலை செய்துகொண்டதற்குக் காரணம் அவருக்கு நிர்வாகம் கொடுத்த அநியாயமான நெருக்கடியே காரணம் என்று தெரியவந்தது.

வேலையில் சேர அனுமதி கேட்ட இந்த மாணவரை விடுவிக்க வேண்டிய நிர்வாகம், விடுவிக்காமல், அவர் சமர்ப்பித்த புராஜெக்ட் சரியில்லை. அதனால் இன்னும் 6 மாதம் தங்கி புராஜக்டை முடித்துவிட்டு போ என்றது. பேராசிரியர்கள் நெருக்கடி தந்து, அவன் வேலைவாய்ப்பை முடக்கியதாலேதான் அந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டான் என்று உடன் படிக்கும் மாணவர்கள் உறுதி செய்தனர்.

மேலும், தாழ்த்தப்பட்ட பிறபடுத்தப்பட்ட மாணவர்கள் நன்றாகப் படித்தாலும் அவர்களை மட்டம் தட்டியே பேராசிரியர்கள் பேசுவர் என்றும் மாணவர்கள் கூறுகின்றனர்.

தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்-களில் 99% பார்ப்பனர் அல்லாத மாணவர்-களே! படிக்கும் மொத்த மாணவர்களில் பார்ப்பனர்களே அதிகம். பார்ப்பனர் அல்லாதார் மிக மிகக் குறைவு. அப்படியிருந்தம் 99% தற்கொலை பார்ப்பனர் அல்லாதார் செய்து-கொள்கின்றனர் என்பது  அங்கு நடக்கும் கொடுமைகளை உறுதி செய்கிறது.

2012 ஆகஸ்ட்டில் ஆந்திர மாநிலம், கரிம் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.டெக். இரசாயனப் பொறியியல் மாணவர் எஸ்.மெருகுமினஸா (வயது 22) தற்கொலை செய்துகொண்டார்.

2012இல் செப்டம்பரில் உத்தரபிரதேசம் ஆக்ராவைச் சேர்ந்த பி.டெக். சிவில் இரண்டாம் ஆண்டு மாணவர் குல்தீப் தற்கொலை செய்துகொண்டார்.

2013 நவம்பரில் ராஜஸ்தானைச் சேர்ந்த பி.டெக் இரசாயன பொறியியல் மாணவர் அக்ஷய் குமார் மீனா (18 வயது) தற்கொலை செய்துகொண்டார். இப்படி தற்கொலை தொடர்ந்த நிலையில், 2015 செப்டம்பரில் ஆந்திராவைச் சேர்ந்த எம்.டெக். மாணவர் நாகேந்திரகுமார் தற்கொலை செய்துகொண்ட ஒரு மாதத்தில் கேரளத்தைச் சேர்ந்த பி.டெக். மாணவர் ராகுல் பிரசாத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இவர் படிப்பில் மிகவும் சிறந்தவர். அப்படியிருந்தும் அவர் தற்கொலைக்கு என்ன காரணம்? வயதிலும் இளையவர். வேறு குடும்பத் தொல்லைகளுக்கும் வழியில்லை.

எனவே, இப்படிப்பட்ட தற்கொலைகளுக்கு முடிவுகட்ட, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்படுவதோடு, அய்.அய்.டி. நிர்வாகத்தையும் அதிலுள்ள இயக்குநர் மற்றும் பேராசிரியர்களின் செயல்பாடுகளையும் முழுமையாக ஆய்வு செய்து உண்மை கண்டு தீர்வு காணவேண்டும். உரியவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அய்.அய்.டி.யில் பணிபுரியும் நேர்மையான பேராசிரியர்கள் உண்மையை, நீதியைப் பேசினால் அவர்களும் அச்சுறுத்தப்-படுகிறார்கள்.

1998_2000இல் வசந்தா கந்தசாமி என்ற கணிதப் பேராசிரியர் ஆரியப் பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராய் குரல் கொடுத்தார் என்பதால், அவருக்குப் பல தொல்லைகள் தந்து பழிவாங்கினார்கள்.

அவருக்குக் கிடைக்க வேண்டிய பட் நகர்  விருது கிடைக்காமல் அய்.அய்.டி. நிர்வாகத்தால் தடுக்கப்பட்டது. அதை எதிர்த்து உயர்நீதி-மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளது.

அதேபோல் அய்.அய்.டி.யில் படித்துச் சிறந்த மாணவருக்கான விருது பெற்ற டாக்டர் முரளிதரன் அமெரிக்காவின் உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பெற்றவர். மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். எல்லா தகுதியும்  இருந்தும் அய்.அய்.டி. நிர்வாகம் அவருக்கு அய்.அய்.டி.யில் பேராசிரியர் பணி வழங்க மறுத்துவிட்டது. ஒரே காரணம் அவர் ஆரிய பார்ப்பனராகப் பிறக்காததுதான்.

அது மட்டுமல்ல ஆரியப் பார்ப்பனர் ஆதிக்கம் செலுத்த வசதியாக விதிகளையும் வகுத்துள்ளனர்.

அய்.அய்.டி. சட்டம் 13(5)ஆவது பிரிவுப்படி ஒரு பேராசிரியரை அல்லது ஊழியரை விளக்கம் கேட்காமலே பணி நீக்கம் செய்யலாம்.

வேலைவாய்ப்பு பற்றி விளம்பரம் செய்யாமலே நிர்வாகம் யாரையும் நியமனம் செய்யலாம்.

இவ்விதிகளின் உட்பொருள் என்ன? நிர்வாகம் விரும்புபவர் மட்டுமே இங்கே நுழைய முடியும். அதாவது ஆரிய பார்ப்பனர் மட்டுமே பணிவாய்ப்பு பெற முடியும். காரணம், இயக்குநர்கள் தொடர்ந்து பார்ப்பனர்களாகவே நியமிக்கப்படுகின்றனர்.

இப்போது புரிகிறதா? அங்கு ஏன் ஆரிய பார்ப்பன ஆதிக்கம் உச்சத்தில் இருக்கிறது; ஏன் இவ்வளவு கொடுமைகள் நடக்கின்றன என்பதற்குக் காரணம்.

எனவே, அரசு தலையிட்டு உரிய சட்டங்களை இயற்றி, இடஒதுக்கீட்டை அமுல்படுத்தி, தற்கொலைக்கு காரணமானவர்களைத் தண்டிக்க வேண்டியது உடனடித் தேவை, கட்டாயம் ஆகும். இல்லையெனில் மக்கள் போராட்டம் தவிர்க்க முடியாததாகிவிடும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *