மனிதம் ஆளட்டும்! தாழ்த்தப்பட்ட சமூக சகோதரர்கள் நாதியற்றவர்களா?

நவம்பர் 01-15

நாட்டிற்குச் சுதந்திரம் வந்து 69 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன! நாட்டுக்கு நல்ல துரை வந்தாலும்

தோட்டிக்கு புல்கட்டு போகாது

என்ற அனுபவ அவலமொழிதான் இங்கு நாளும் காட்சியாக நடைபெற்றுக் கொண்டுள்ளது!

புல்கட்டு இருக்கிறது ஆனால் உயிரே போகிறது இப்போது!

ஊடகங்களில் வரும் செய்திகள் மனிதநேயமுள்ளவர்களின் நெஞ்சைப் பிளக்கின்றன; இரத்தக் கண்ணீருடன்தான் அச்செய்திகளை வாசிக்கவோ, கேட்கவோ முடிகிறது!

யார் இந்த சமூகத்தின் தேவையைப் பூர்த்தி செய்ய வாழ்வு முழுவதும் வியர்வை _ இரத்தம் சிந்தி இந்த நாட்டில் உழைக்கிறானோ அவன் கீழ்ஜாதி, தொடக்கூடாத ஜாதி, ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் வாழும் ஜாதி _ ஈனஜாதி, இழிஜாதி என்று முத்திரை குத்தப்பட்டுள்ளதோடு, அந்த அடிமை வாழ்வு வாழக்கூட அவனுக்கு உத்திரவாதம் ஏதும் இல்லை இந்நாட்டில்.

நாளும் பச்சைப் படுகொலைகள், அவர்களை அழிக்க நடந்தேறிவரும் கொடுமைக்கும் கோரத்தாண்டவத்திற்கும் பஞ்சமே இல்லை!

ஹரியானா மாநிலத்தில் நேற்று ஒரு தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிடர் குடும்பத்தவரை _ பச்சிளம் குழந்தைகள் உட்பட, உறங்கிக் கொண்டிருக்கும்போது, உயிருடன் தீ வைத்து, எரித்துள்ளனர், அவர்களை வெறுத்த, அவ்வூரின் மேல்ஜாதி என்று நினைத்த, கொழுப்பு மிகுந்த கொடுமையாளர்கள்!

காவல்துறை முழுக்க இந்த ஆதிக்கவாதிகளான, ஆணவத்திமிர் பிடித்த, தீய சக்திகளுக்கே துணைபோகும் மிகுந்த கேவலநிலை. வன்மையான கண்டனத்திற்குரிய இந்த நிகழ்ச்சி; டில்லித் தலைநகர் அருகில் உள்ள மாநிலமான ஹரியானாவில் சோனாபத் என்ற பகுதியில்!

அங்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பயிற்சி பெற்று, பா.ஜ.க.வில் தேர்தல் புலிகளில் ஒன்றென்று பிரதமர் மோடி, பா.ஜ.க தலைவர் அமித் ஷாவால் மதிக்கப்பட்ட மனோகர் லால் கட்டார் என்பவர் முதல் அமைச்சர்!

அண்மையில் இவர்தான் மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் இந்நாட்டை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று முழங்கிய ஹிந்துத்துவா மேதை!

இவர்கள் ஆட்சி ஏற்பட்ட நிலையில் நிலைமை முன்னிலும்விட மோசமாகி உள்ளது என்பதை தேசிய குற்றப்பட்டியல் ஆவணம் கூறுகிறது.

2014இல் மட்டும் அங்கே 21 தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் கொல்லப்பட்டனர்.

நாடு முழுவதும் 47,000 தாக்குதல்கள் அவர்கள் மீது நிகழ்த்தப்பட்டுள்ளன!

அவர்தம் பெண்களிடையே, மற்ற ஜாதி வெறியர்களால் பாலியல் பலாத்காரத்திற்கு 2,293 பேர்கள் ஆளாக்கப்பட்டுள்ளார்கள்!

மனிதர்கள்தானா இந்த வன்முறை வக்கிர புத்திக்காரர்கள்?

தலைநகர் டில்லியைச் சுற்றியுள்ள மாநிலம்தான் ஹரியானா! அங்கேயே ஓராண்டில் அவ்வாட்சியின் சாதனையா இது?

காவல்துறை அலட்சியம் என்று அவர்கள் மீது பழிபோட்டுத் தப்பித்துக் கொள்ளலாமா அங்கே ஆளக்கூடிய பா.ஜ.க. முதல் அமைச்சரும் அவரது சகாக்களும்?

ஜாதிப் பஞ்சாயத்துக்கள் சிணீமீ ரிணீறீஷீஜீ அங்கே கட்டப் பஞ்சாயத்துக்களாக நடைபெறுவதை முதலில் தடைசெய்து சட்டத்தின் முன் அத்தகையவர்கள் நிறுத்தப்படல் வேண்டும்.

போதிய பாதுகாப்பு அளிக்க நீண்டகாலக் கண்ணோட்டத் திட்டம், உடனடி நிவாரணம் மற்றும் தடுப்பு ஏற்பாடுகள் பற்றிய திட்டங்கள் பற்றி மத்திய, மாநில ஆட்சியினர் சிந்தித்து உடனே செயலில் இறங்க முன்வர வேண்டும்!

காலனி _ ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் அமைவதைவிட, சமத்துவபுரங்களாக அவைகள் மாற்றப்படும் வகையில் அனைவரையும் ஊருக்குள் குடி அமர்த்தி நல்ல பள்ளி, நல்ல மருத்துவமனை வசதிகள் செய்து தந்து அவர்கள் நிலையை உயர்த்திட முன்வர வேண்டும்! அவர்களில் படித்த இளைஞர்கள் எவ்வளவு காலம் அடிமைத்தளையால் அவதிப்பட இசைவார்கள்! எதிர்வினை இயற்கைதானே!

எனவே, 10 லட்ச ரூபாய் இறந்த குழந்தைகள்  குடும்பத்திற்கு என்று தருவது அசல் கண்துடைப்பு நாடகம்; ஆக்கபூர்வமான வருமுன் காக்கும் செயல்பாடுகளில் ஈடுபட அரசுகள் திட்டம் தீட்டி மனிதத்தை ஆளச் செய்ய வேண்டும்!

கி.வீரமணி,
ஆசிரியர்

 

1. தாழ்த்தப்பட்டவர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரால் உயிருடன் எரிப்பு!

அரியானா மாநிலம், யமுனா நகர் தவ்லத்பூர் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கேகர் சிங் என்பவர் மகன் ரஜத் (21) என்பவர், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் சிலரால் உயிருடன் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொளுத்தப்பட்டார். (21.10.2015) மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். (23.10.2015)

2. பெங்களூருவில் தாழ்த்தப்பட்ட எழுத்தாளர் மீது தாக்குதல்

23.10.2015 அன்று பெங்களூருவில் ஒடாலா கிச்சு என்ற நூலை எழுதிய தாழ்த்தப்பட்ட சமுதாய எழுத்தாளர் இந்துமத வெறியர்-களால் தாக்கப்பட்டுள்ளார்.

ஹுச்சாங்கி பிரசாத் என்ற 24 வயதுடைய தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். தாவங்கெரே பகுதியில் உள்ள பல்கலைக்-கழகத்தில் ஊடகத்துறையில் உள்ளார். இவர் தாழ்த்தப்பட்டோர் முன்னேற இடஒதுக்கீடு அவசியம் என்று ஒரு நூல் எழுதியுள்ளார். மேலும் தாழ்த்தப்பட்டோர் மீது ஜாதி வெறியர்கள் நடத்தும் தாக்குதல்களையும் இந்நூலில் விவரித்துள்ளார்.

2014 ஏப்ரல் மாதம் இந்நூலை பகுத்தறிவு எழுத்தாளர் கே.எஸ்.பகவான் வெளியிட்டார். அந்நூலில், தான் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவன் என்பதையும் இவர் குறிப்பிட்டிருந்தார்.

அந்நூல் வெளியிடப்பட்டதிலிருந்து அவருக்கு அச்சுறுத்தல் கொடுத்துவந்த மதவெறியர்கள் 23.10.2015 அன்று, அவர் தாய்க்கு மாரடைப்பு என்று பொய்ச்சொல்லி அவரைக் காட்டுப்பகுதிக்குக் கடத்திச் சென்று கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்துக்களைப் பற்றி எழுதுவதை இனி நிறுத்து என்று சொல்லியபடியே தாக்கியுள்ளனர்.

தலித்துகளை குறிவைத்துத் தாக்கும் கொடுமை, பி.ஜே.பி. மத்தியில் ஆட்சிக்கு வந்தபின் இந்தியா முழுவதும் தொடர்ந்து நடப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தாழ்த்தப்பட்டோர் கொதித்து எழுந்தால் விளைவு மோசமாகும்; நிலை தலைகீழாய் மாறும்! என்பதை மதவெறிக் கூட்டம் மனதில் கொள்ளவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *