கேள்வி: வருத்தியழைக்கும் உலக முதலீட்டாளர் நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு அமுல்படுத்தப்-படுமா?
– நெய்வேலி தியாகராசன், கொர நாட்டுக்கருப்பூர்
பதில்: முதலில் முதலீட்டாளர்கள் வரட்டும்; தனியார் துறையில் இடஒதுக்கீட்டுக் கோரிக்கையை வலியுறுத்துவது அதற்கும் பொருந்துமே!
கேள்வி: வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தி.க. யாரை ஆதரிக்கும்?
– காஜாமைதின், பெரிய கலையம்புத்தூர்
பதில்: சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வரட்டும் அப்போது உங்களுக்குத் தெரியும்.
கேள்வி: தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்ச்சிகளைக் கூர்ந்து கவனித்தால், ஜனநாயக மரபுகளில் நம்பிக்கையுடையோர் வேதனைப்படுவதாய் உள்ளதே!
– நாத்திகன் ச.கோ., பெரம்பலூர்
பதில்: கூர்ந்துகூட கவனிக்க வேண்டாம்; சாதாரணமாக 3 நாள் தொடர்ந்து பார்த்தாலே எவருக்கும் விளங்கும்!
கேள்வி: அறிவியல் முடிவு கடவுள் இல்லை என்பது. அப்படியிருக்க விஞ்ஞானிகள் கடவுளை நம்புவது எதனடிப்படையில்?
– – முகிலன், எழும்பூர்
பதில்: விஞ்ஞானிகளிலும் பகுத்தறிவை முழுமையாகச் செலுத்தாதவர்கள் பலர் உண்டே!
கேள்வி: ஆர்.எஸ்.எஸ். தன் செயல் திட்டங்களை செயல்படுத்த தீவிரங்காட்டும் நிலையில், மதச்சார்பற்ற தலைவர்கள் இந்திய அளவில் ஒன்றுகூடி எதிர்வினையாற்ற தாமதிக்கலாமா?
– – கவின், திருவண்ணாமலை
பதில்: அந்த மதச்சார்பற்ற தலைவர்களுக்கு அல்லவா இது விளங்க வேண்டும். தங்கள் பதவிகளை முன்னிறுத்துபவர் எப்படி கவனிப்பர்?
கேள்வி: திருமாவளவன், ஜவாகருல்லா போன்ற தலைவர்கள்கூட எத்தனை சீட் என்பதில் சபலப்பட்டு தலைமுறைத் தவறு செய்வதைத் தாங்கள் மட்டுமே தடுக்கமுடியும் என்ற நிலையில் முயற்சி மேற்கொள்வீர்களா?
– புவனேஷ்வரி, திருச்சி
பதில்: நம் வேலை அதுவல்ல, என்றாலும் அவர்கள் விரும்பினால் நம் கடமை ஏதுவாயினும் தயக்கமின்றி மேற்கொள்வோம்.
கேள்வி: தி.மு.க.வுடன் கூட்டு சேரமட்டும் ஊழலைக் காரணங்காட்டி ஒதுங்கும் கம்யூனிஸ்ட்டுகள் அ.தி.மு.க.வு.டன் கூட்டுசேர மட்டும் அலைவது இரட்டை அளவு கோல் அல்லவா?
– ரங்கராஜன், மதுரை
பதில்: முன்பு அவர்களே (வாதத்திற்காக ஊழல் என்று முடிவு செய்துவிட்டால் கூட) ஊழலா, மதவாதமா என்றால் மதவாதமே ஆபத்தானது என்றார்கள்!
இந்த திராவிடக்கட்சிகளால்தானே முன்பு காத்திருந்து ஓரிரு பதவி பெற்றனர்? அது வரலாறு! என்ன செய்ய வேதனை அடைவதைத் தவிர வேறு வழியில்லை!
கேள்வி: தன் பிள்ளையை அறுத்துச் சமைத்த சிறுத்தொண்டன் கதையை இன்றும் நாடகமாக நடத்துவதையும், சொற்பொழிவு செய்வதையும் சட்டப்படி ஏன் தடை செய்ய முயற்சி மேற்கொள்ளப்படுவதில்லை?
– பகலவன், குன்னூர்
பதில்: சட்டம், நீதி, குறட்டைவிட்டுத் தூங்குகிறதே! நெம்புகோல் போட்டு எழுப்பி தூக்கத்தை யாராவது கலைக்கலாமே!
கேள்வி: நாடு என்ற தமிழ்ச் சொல்லை விட்டுவிட்டு, தேசம், தேசியம் என்ற வேற்றுச் சொல்லைப் பயன்படுத்தும் தமிழ்த் தேசிய அரைவேக்காடுகளுக்கு திராவிடம் பற்றி விமர்சிக்க என்ன தகுதியுள்ளது?
– அறவாழி, தஞ்சாவூர்
பதில்: உங்கள் கேள்வியிலேயே பதிலும் அடங்கியிருப்பதால் தனி பதில் தேவையில்லை!