செய்யக்கூடாதவை

அக்டோபர் 16-31

ஒடும் வாகனங்களில் ஏறவோ இறங்கவோ கூடாது

இளைஞர்கள் இதைச் சாதனையாகவும், மகிழ்வாகவும், விளையாட்டாகவும் செய்கிறார்கள். விபத்து ஏற்படும் என்று தெரிந்து அதில் விளையாடுவது கற்கும் இளைஞர்களுக்கு அழகா? சிந்திக்க வேண்டும்! தவறினால் உயிர் போகும் அல்லது உறுப்புகள் சிதையும். ஒரு பிள்ளையை வளர்த்து ஆளாக்கப் பெற்றோர் படும்பாடு எவ்வளவு? அவர்களைப் படிக்க வைத்து உயர்த்த எவ்வளவு கடன்பட்டு, தங்கள் வசதிகளைக் குறைத்து அல்லல்படுகிறார்கள் என்பவற்றை எண்ணிப் பார்த்து, குடும்பப் பொறுப்பு உணர்ந்து அறிவுடன் செயல்பட வேண்டும். விபத்தோடு விளையாடுவது தற்கொலைக்குச் சமம் என்பதைச் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

அதிக வேகம் செல்லக் கூடாது

வாகனங்களில் செல்லும்போது அளவிற்கு அதிகமான வேகத்தில் செல்லக்கூடாது. அதிக வேகம் என்பது விபத்தில்தான் முடியும்.

நாம் செய்கின்ற தவறு நம்மோடு மட்டும் முடிவதில்லை; நம்மை மட்டும் பாதிப்பதில்லை. சாலையில் சரியாக வருகின்றவர்களையும் பாதிக்கும். அதை எண்ணியாவது பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

பேசிக் கொண்டே வாகனம் ஓட்டக் கூடாது

வாகனத்தில் அமர்ந்திருப்பவருடனோ, அல்லது செல்பேசியிலோ பேசிக் கொண்டே வாகனம் ஓட்டக் கூடாது. நமது கவனம் பேச்சில் செல்வதால், சாலை விபத்து ஏற்பட்டு, விதிமுறைப்படி வருகின்றவர்களையும் விபத்திற்குள்ளாக்கும். மதுமயக்கத்தில் வாகனம் ஓட்டுவது கட்டாயம் தடுக்கப்பட வேண்டும்.

தூக்கக் கிறக்கத்தில் மயக்கத்தில் வாகனம் ஓட்டக் கூடாது.

தூக்கம் என்பது நம்மையும் மீறி வருவது. எனவே, தூக்கம் வந்தால் வாகனத்தைப் பாதுகாப்பான இடத்தில் நிறுத்திவிட்டு, நன்றாக உறங்கி ஓய்வெடுத்த பின்னரே வாகனம் ஓட்ட வேண்டும். சரியாகத் தூங்கி ஓய்வெடுக்காத நிலையில் வாகனம் ஓட்டவே கூடாது. தூக்கத்தைச் சமாளித்து ஓட்டி விடலாம் என்று எண்ணி ஓட்டுவது அறியாமை. காரணம் தூக்கம் ஒரு நொடிப்பொழுதில் நம்மையும் அறியாமல் பற்றும். யாரும் அதை வெல்ல முடியாது. எனவே, தூக்கத்தோடு போட்டியிட்டு வாகனத்தை ஓட்டினால் துக்கத்தில்தான் முடியும்!

குற்றங்களையே கூறிக் கொண்டிருக்கக் கூடாது

மனிதர்கள் இயல்பாகப் பல வகைப்படுவர். சிலர் வாயைத் திறந்தாலே யாரையாவது குறை சொல்லிக் கொண்டேயிருப்பர். பிறரைப் பாராட்டி, சிறப்பித்து எப்போதும் பேச மாட்டார்கள். சிலர் குறை நிறை இரண்டையும் கூறுவர். இதில் முதல் வகையினர் செயல் தவறானது. குற்றம்  பார்க்கின் சுற்றமில்லை என்பதை அவர்கள் ஆழமாக மனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். சுற்றம் என்பதற்கு உறவு என்பது மட்டும் பொருளன்று. சுற்றியுள்ளவர்கள் என்ற பொருளும் உண்டு. குற்றம் கண்டு, குறையே கூறிக் கொண்டிருந்தால் சுற்றியுள்ள எல்லோருமே, குற்றச்சாட்டுக்-காளாகி வெறுத்து ஒதுங்குவர். நட்பும், தோழமையும் விலகிப் போகும்.

குற்றத்தையே பேசும் குணமுள்ளவர்கள் ஒன்றை ஆழமாக மனதில் கொள்ள வேண்டும். எல்லோரையும் குற்றம் சொல்லும் தான் குற்றமற்றவரா? தன்னை மற்றவர்கள் எப்படி எண்ணுகிறார்கள்? நம்மிடம் என்னென்ன குறைகள், குற்றங்கள் உள்ளன என்பதை எண்ணிப் பார்த்தால் பிறரை எப்போதும் குறை சொல்லும் செயல் விலகும். தன்னிடம் குற்றமில்லாதவர்களுக்குத்தான் பிறரைக் குற்றம் சொல்லும் தகுதியே உண்டு என்பதை அனைவரும் ஆழமாக மனத்தில் கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *