எந்த ஒரு மகாகோழைத்தனமான செயலையும் கடவுள் பெயரில் செய்யலாம்-இதுதான் கீதைசெல்லும் உபதேசம்
பூரிச்ரவஸூம் சாத்யகியும் ஜென்மவிரோதிகள். இருவரும் அண்டை தேசத்து அரசர்கள். சாத்யகி கண்ணனின் நண்பன். பூரிச்ரவஸ் எதிருக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் கவுரவர் படையில் சேர்கிறான்
.
கத்திச் சண்டையில் பூரிச்ரவஸை மிஞ்ச புவியில் யாரும் கிடையாது என புகழ் பெற்றவன். கதாயுதத்துக்கு பீமனும், வில்லுக்கு அர்ஜுனன் என்பது போல் கத்தி சண்டைக்கு பூரிச்ரவஸ் என்று பெயர்.
12ஆம் நாள் யுத்தத்தில் அபிமன்யு கொல்லப்படுகிறான். 13ஆம் நாள் சூரியன் மறைவதற்குள் அபிமன்யு மரணத்துக்கு காரணமான ஜெயத்ரதனை கொல்வேன் இல்லையெனில் தீக்குளித்து உயிர் துறப்பேன் என அர்ஜுனன் சத்யம் செய்கிறான்.
மிகப்பெரும் காவல் வியூகம் ஜெயத்ரதனுக்கு உருவாக்கப்படுகிறது. துரோணர் படை முன் நிற்கிறார். அவரை வென்று தான் கவுரவர் வியூகத்திற்குள் நுழையவே முடியும் என்ற நிலை. உள்ளே நுழைந்தால் அடுத்து கர்ணன். இவர்கள் இருவரையும் வெல்லும் திறன் படைத்தவர்கள் பாண்டவர் தரப்பில் அர்ஜுனனும் பீமனுமே. இவர்கள் இருவரையும் தோற்கடித்து அர்ஜுனன் உள் நுழைகிறான்.
உள்ளே கவுரவர் படையின் முழு ஆற்றலும் அவனை நோக்கி திருப்பி விடப்படுகிறது. முழு படையையும் அர்ஜுனன் ஒருவனே சமாளிக்கிறான். கவலை அடைந்த தருமர் பீமனை உதவிக்கு அனுப்புகிறார். கர்ணனையும் துரோணரையும் தோற்கடித்து விட்டு பீமனும் உள்ளே நுழைகிறான். உள்ளே போன பீமன் துரியோதனன் தம்பிகளை பார்த்ததும் போன காரியத்தை மறந்துவிட்டு அவர்களை வேட்டையாட துவங்குகிறான். இப்போது இந்த வியூகத்திற்குள் நுழையும் சக்தி பாண்டவர் தரப்பில் யாருக்கும் இல்லை. ஆனால் துணிந்து சாத்யகி அர்ஜுனனுக்கு உதவியாக வியூகத்திற்குள் நுழைகிறான். பிரமிக்கத்தக்க பெரும்போர் புரிந்து துரோணாச்சாரியாரையும் கர்ணனையும் வென்று உள்ளே நுழைகிறான்.
உள்ளே கவுரவர் படைகளை தனி ஒருவனாக எதிர்க்கும் அர்ஜுனனுக்கு ஆதரவாக சாத்யகி கடும்போர் புரிகிறான்.
அர்ஜுனன் ஜெயத்ரதனை தேடி செல்கிறான். சாத்யகியை பூரிச்ரவஸ் எதிர்கொள்கிறான். மாவீரர்களை எதிர்த்து களைப்படைந்த சாத்யகி பூரிச்ரவஸுடன் கடும்போர் புரிகிறான். முதலில் விற்போர் நடக்கிறது. பூரிச்ரவஸ் கடும் அடி வாங்குகிறான். ஆனால் எதிர்பாராவிதமாக சாத்யகியின் சாரதி கொல்லப்பட சாத்யகி திணருகிறான். சாரதியை இழந்த சாத்யகியின் தேர் பூரிச்ரவஸால் அழிக்கப்-படுகிறது.
கீழே நிற்கும் ஒருவனுடன் ரதத்தில் இருந்து போர் புரிதல் தகாது என்பதால் பூரிச்ரவஸ் கத்தியை எடுத்து கீழிறங்குகிறான். சாத்யகியும் கத்தியை எடுக்கிறான். கத்தி சண்டையில் நிகரற்ற பூரிச்ரவஸுக்கு சாத்யகி பொருட்டே அல்ல. சாத்யகியை அடித்து வீழ்த்தி அவன் நெஞ்சில் காலை வைத்து அவன் தலையை துண்டிக்க கத்தியை ஓங்குகிறான்.
சாத்யகியின் நண்பனான பரந்தாமன் இதை பார்த்துக்கொண்டே இருக்கிறான். சாத்யகி தோற்றுவிடுவான் அர்ஜுனா. நீ பூரிச்ரவஸை கொல், கொல் என சொல்லிக்கொண்டே இருக்கிறான். தன்னுடன் சண்டை பிடிக்காத இன்னொருவனுடன் சண்டை பிடிப்பது யுத்த தருமமல்ல என அர்ஜுனன் தயங்குகிறான். சாத்யகியின் தலை துண்டிக்கபடப்போகும் வினாடியில் பரந்தாமன் பொறுமை இழக்கிறான்.
கண்னெதிரே தன் பக்தன் தலை துண்டிக்கப்பட பரந்தாமன் விடுவானா? ஆயுதம் ஏந்துவதில்லை என தான் செய்த சத்தியத்தையும் மீறுகிறான்.
விஷ்ணு சக்கரத்தை ஏந்தி நரசிம்ம அவதாரமாக பார்த்தசாரதி தரையில் குதிக்கிறான். கண்ணன் ஆயுதம் ஏந்தியதும் அர்ஜுனனின் தயக்கம் விடை பெறுகிறது.
அம்பை எடுக்கிறான். யுத்ததருமம், வேதம், சாத்திரம் அத்தனையையும் மீறி பூரிச்ரவஸின் பின்புறமிருந்து அவன் மீது அம்பை ஏவுகிறான். நன்மை தீமை அனைத்தும் என்னை சார்ந்தது. உன் கடமையை செய். அதன் பலன் எனக்கே என்ற கீதையின் மந்திரம் அர்ஜுனனை செலுத்துகிறது.
அந்த அடாத செயலை அர்ஜுனன் செய்கிறான். அர்ஜுன பாணம் பூரிச்ரவஸின் கையை துணிக்கிறது. கத்தியோடு பூரிச்ரவஸின் வலது கரம் பின்புறமிருந்து துண்டிக்கப்படுகிறது. போர்க்களமெங்கும் ஆகா எனும் அதிர்ச்சிக்குரல் எழுகிறது. குலகுரு துரோணர், கர்ணன், பீமன் ஆகிய மாபெரும் வீரர்கள் அர்ஜுனனின் இந்த செயலை கண்டு அதிர்கின்றனர். எவன் இத்தகைய கடைந்தெடுத்த கோழைத்-தனமான காரியத்தை செய்தான் என்று அதிர்ச்சியுடன் பூரிச்ரவஸ் திரும்பிப்-பார்க்கிறான். பார்த்தன் தான் அதை செய்தது என்பதை அறிந்ததும் அதிர்கிறான்.
பூரிச்ரவஸ் சுத்த வீரன். பெரும் பக்திமான். அர்ஜுனன் இதை செய்தான் என்பதை அவனால் நம்பவே முடியவில்லை. அர்ஜுனா. ஏன் இப்படி செய்தாய்? என்று கேட்கிறான்.
பார்த்தன் எந்த பதிலும் சொல்லவில்லை. தலைகுனிந்து நிற்கிறான். பூரிச்ரவஸ் சக்ராயுதத்தோடு தன் எதிரெ நிற்கும் கண்ணனை கண்டதும் உண்மையை உணர்கிறான். ஜோதிவடிவான பரம்பொருளை பூரிச்ரவஸ் தரிசிக்கிறான்.
தன் முடிவு நெருங்கிவிட்டது என்பதையும் தான் அய்க்கியமாகப்போகும் பரம்பொருள் தன் எதிரே நிற்கிறது என்பதையும் அறிகிறான். மண்டியிட்டு அந்த ஜோதியின் முன் தலைகுனிந்து வணங்குகிறான். அவன் தலை பூமியை தொடுகிறது. ஆவேசத்தோடு சாத்யகி எழுகிறான். கத்தியை எடுக்கிறான். வேண்டாம், வேண்டாம் என கண்ணனும் அர்ஜுனனும் கூவ கூவ கேட்காமல் ஒரே சீவு. பூரிச்ரவஸின் தலை துண்டாகிறது. மீண்டும் போர்க்களமெங்கும் ஆகாகாரம் எழுகிறது. கண்ணனும் அர்ஜுனனும் பீமனும் பாண்டவரும் தலைகுனிந்து நிற்கின்றனர்.
ஆயுதம் ஏந்தமாட்டேன் என்று போர் துவங்கும் முன் கண்ணன் செய்த சத்தியம் காற்றிலே போய்விட்டதே! இந்தப் பித்தலாட்டப் பேர்வழிதான் கடவுளா? இதைப் போதிப்பதுதான் நீதிநூலா?