தமிழ்நாட்டில் பிறந்தது தப்பா?
இந்திய கிரிக்கட் அணித் தலைவர், டென்னிஸ் நட்சத்திரங்கள், விமானப் பயணம், சொகுசு கார், கோடிக்கணக்கில் வருவாய்.
ஆனால், கூடைப்பந்தாட்ட அணியின் தலைவர் அனிதா பால்துரை சென்னை மாநகரப் பேருந்தில் செல்கிறார்.
இந்தியக் கூடைப்பந்தின் தலைசிறந்த வீரர் _ உலகின் சிறந்த 10 வீரர்களில் ஒருவர். எட்டுமுறை ஆசியக் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துகொண்ட ஒரே வீரர். ஆசியக் கூடைப்பந்துப் போட்டியில் தொடர்ச்சியாகத் தங்கப் பதக்கம் வென்றவர். இப்படிப்பட்டவாக்கு இந்த நாட்டில் என்ன மரியாதை.?
அவர் என்ன சாதிக்கவில்லை. அதுவும் ஒரு பெண் சாதிக்கிறார். உலக அளவில் சாதிக்கிறார். ஆனால், இந்த நாடும், அரசும் அவருக்கு அளிக்கும் மரியாதை என்ன? வசதிகள், ஊக்குவிப்புகள் என்ன? ஒன்றுமில்லை!
இந்த உச்சத்தை அவர் எப்படி எட்டினார் அவரே சொல்கிறார் படியுங்கள்:
என் அப்பா போலீஸ்ல தலைமைக் காவலரா இருந்தார். நான் படிச்சது எல்லாம் சென்னையில்தான். சின்ன வயசுல அத்லெடிக்ஸ்ல ஆர்வம். என் பயிற்சியாளர் சம்பத் சார்தான் பேஸ்கட்பால் பயிற்சிக்கு என்னை முழுமையாகத் திருப்பிவிட்டார். பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகளில் எங்க டீம்தான் ஜெயிச்சுட்டே இருக்கும். 9_வது படிச்சிட்டிருந்தப்ப ஒரு போட்டியில் ஒரு காலேஜ் டீமை ஜெயிச்சோம். அந்த கேம்ல எனக்கு பெஸ்ட் பிளேயர் அவார்டும் 250 ரூபாயும் கொடுத்தாங்க. இன்னைக்கும் மறக்க முடியாத கேம் அது. அந்த நாளின் வெற்றிப் பூரிப்புதான் அப்படியே தேசிய, சர்வதேசப் போட்டிகளில் என்னைக் கொண்டுவந்து நிறுத்தியது. தாய்லாந்து, இலங்கை, சீனாவில் நடந்த போட்டிகளில் கோல்டு மெடல் ஜெயிச்சோம்.
சீனாவில் நடந்த ஆசியக் கூடைப் பந்தாட்டப் போட்டியில் சாதிக்க முடியாமைக்கு என்ன காரணம்? என்று அவரிடம் கேட்டதற்கு,
போட்டி முடிஞ்ச பிறகு தோல்வி பத்தி விசாரிப்பாங்க. ஆனா, போட்டிக்கு முன்னாடி எங்களைப் பத்தி யாருக்காச்சும் கவலை இருக்கா? ஒரு போட்டித் தொடர்ல கலந்துக்கிறதுக்கு முன்னாடி நாலு மாசப் பயிற்சி அவசியம். ஆனா, சீனா போறதுக்கு முன்னாடி பெங்களூருல ஒன்றரை மாசம்தான் பயிற்சியெடுக்க முடிஞ்சது. கேட்டா, மைதானங்கள் ஃப்ரீயா இல்லைனு சொல்றாங்க. ஆனா, சீனா, ஜப்பயான்ல ஒரு வருஷத்துக்குப் பயிற்சி கொடுக்கிறாங்க. ஒன்றரை மாசப் பயிற்சியில் நாங்க என்ன பண்ண முடியும்? சீனா, ஜப்பான், கொரியா நாட்டு பிளேயர்களோடு ஒப்பிடும்போது, அடிப்படை வசதிகள், பயிற்சினு எல்லாத்துலயும் நாங்க 50 சதவிகிதம் பின்தங்கியிருக்கோம். சீன பிளேயர்ஸ் ஒவ்வொருத்தருக்கும் ஒரு பயிற்சியாளர், மருத்துவ உதவியாளர் இருப்பாங்க. ஆனா, எங்களுக்கு வர்ற ஒரே ஒரு பிசியோதெரபிஸ்ட் சின்னப் பையில் கொஞ்சம் பொருட்கள் வெச்சிருப்பாங்க. எங்களுக்குக் கிடைக்கிற அலவன்ஸுக்கு இதுதான் வாங்க முடியும்னு சொல்வாங்க. அதனால் நாங்களே சக பிளேயர்களுக்கு முதல் உதவி பண்ணிப்போம். பெண்கள் அணிக்கு பெரிய ஸ்பான்ஸர் கிடைக்க மாட்டாங்க. டீம்ல சிலர்தான் திறமையான பிளேயர்கள். மத்தவங்க கோட்டாவுல உள்ள வருவாங்க. அது தனி பாலிட்டிக்ஸ். 2005_ம் வருஷம் வரை ஆசிய அளவில் இந்தியக் கூடைப்பந்தாட்ட பெண்கள் அணி, பெரிய வெற்றிகள் குவிச்சது இல்லை.
உங்கள் மனக்குறை என்ன? என்று கேட்டதற்கு,
15 வருஷத்தை விளையாட்டிற்காக அர்ப்பணிச்சேன். இன்றுவரை மாநில அரசின் ஒரு சின்ன விருதுகூட கிடைக்கவில்லை. முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்றீர்களா என்றதற்கு,
எத்தனையோ முறை போட்டுப் பார்த்துட்டேன். ஒரு நாள் முழுக்கக் காத்திருந்து அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்திச்சு விஷயம் சொன்னேன். கண்டிப்பா பண்றோம்னு சொன்னார். மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்தான் பரிந்துரை பண்ணணும். அவங்ககிட்ட எப்ப கேட்டாலும், உங்க ஃபைல் பெண்டிங்ல இருக்குனு சொல்றாங்க. மாநில அரசு அங்கீகாரம் கொடுத்தாதான், மத்திய அரசு விருதுக்கு முயற்சி பண்ண முடியும். போன வருஷம் கடைசி நேரத்தில் அர்ஜுனா அவார்டும் தவறிப்போச்சு. அர்ஜுனா அவார்டுக்கு என் பேர்தான் முதல்ல பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஆனா, கமிட்டி உறுப்பினர் ஒருத்தர் என் ஃபைலை நிராகரிச்சுட்டார். நான் 15 வருஷம் இந்தியாவுக்காக விளையாடிட்டிருக்கேன். ஏன் எனக்கு அங்கீகாரம இல்லை?னு கேட்டா, நோ மெடல். யூஸ்லெஸ் கேம்னு சொல்றாங்க. ஆனா, 2014_ம் ஆண்டுல கீது அன்னா ஜோஸ்ங்ற கேரள பிளேயருக்கு அர்ஜுனா விருது கொடுத்தாங்க. அவங்க என்னைவிட ரெண்டு வருஷம் ஜூனியர். அவங்களுக்கு விருது கிடைச்சது எனக்கும் சந்தோஷம்தான். ஆனா, அதுக்குக் காரணம் கேரள அதிகாரிகள் அவருக்காக பெரிய அளவில் மேற்கொண்ட ஆதரவுப் பிரச்சாரம். தகுதி, திறமை இருந்தும் தமிழ்நாட்டுல பிறந்ததால எனக்கு அங்கீகாரம் இல்லையா?
இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு வங்கி, சுங்கத் துறை, ரயில்வே என பல துறைகளில் வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஆனால், பெண்கள் கூடைப்பந்தாட்ட அணியினருக்கு ரயில்வேயில் மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. மற்ற அரசு நிறுவனங்களில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது குதிரைக் கொம்பு!