ஆசிரியர்: கோ.ஒளிவண்ணன்
பக்கம்: 133 விலை: ரூ.150/-
வெளியீடு: எழிலினி பதிப்பகம்,
15ஏ, முதல் மாடி, காசா மேஜர் சாலை, எழும்பூர், சென்னை-8.
கைப்பேசி: 98406 96574
இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார் _ குறள்.
தான் கற்றதைப் பிறருக்கு விளங்க எடுத்துரைக்கும் ஆற்றல் இல்லாதவர் பூத்தும் மணக்காத பூவினைப் போன்று பயனற்றவராவர் என்ற வள்ளுவர் கணிப்பு இக்கால இளைஞர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய முதன்மைச் செய்தியாகும்.
இன்றைக்கு வேலைக்குச் செல்ல முயலும் இளைஞர்-களிடம் வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் பெரிதும் எதிர்பார்ப்பது இதுதான்.
என்ன உயர் மதிப்பெண் பெற்றுத் தேறியிருந்தாலும் தன் கருத்தை பிறருக்குப் புரியும்-படியும், பிறர் ஏற்கும்படியும் எடுத்துரைக்
கும் திறன் இல்லை-யென்றால் அவரை எந்த நிறுவனமும் விரும்புவதில்லை.
குறைவான மதிப்பெண் பெற்றவர்கூட இத்திறன் மிக்கிருப்பின் வேலைக்குத் தேர்வு செய்யப்படுகிறார்.
எனவே, இன்றைய இளைஞர்கள் தங்களது பேச்சுத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டியது கட்டாயக் கடமையாகும்.
உடல் வலிமையும், உயர் கல்வியும் பெற்றவர்கள்கூட பிறரிடம் பேச, மேடையில் பேசத் தயங்குகின்றனர். அவைக்கு அஞ்சுவது பலரிடம் எக்காலத்தும் காணப்படுகிறது. அதனால்தான் வள்ளுவர் அவை அஞ்சாமை என்ற அதிகாரமே வைத்தார்.
மனிதனை உயர்த்தும் தகுதிகளில் பேச்சுத் திறன் முதன்மையானது. அண்ணாவின் ஆளுமையாக பேச்சுத்திறனே அமைந்து, அவருக்கு ஆட்சியையே கொண்டுவந்து சேர்த்தது என்பது வரலாற்று உண்மை.
இந்நூலின் ஆசிரியர் கோ.ஒளிவண்ணன் நல்ல குடும்பப் பின்னணியில் பிறந்தபோதிலும், மேடை கண்டு அஞ்சக்கூடியவராய் இருந்தார். ஆனால், அந்த நிலையை மாற்றி டைப் பேச்சாளனாய்த் தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ள பெரிதும் முயன்று அதைச் சாதித்தும் உள்ளார்.
அந்த அனுபவங்களை இன்றைய இளைஞர்களுக்கும் அளித்து அவர்களையும் பேச்சுத் திறனுடையவராக்கும் நல்ல நோக்கில் இந்நூலை எழுதியுள்ளார்.
முதலில் அச்சம் தவிர்க்கப்பட வேண்டும், முயற்சி தளரக்கூடாது, முன்கூட்டியே முழுமையாக பேசக் கூடியவற்றைத் தயார் செய்துகொள்ள வேண்டும், குறிப்புகள் வைத்துக் கொள்ள வேண்டும்.
கருத்துகளை சுவையாய் கேட்போர்க்குச் சலிக்காமல், ஆர்வத்தைத் தூண்டும் வகையில் சிந்தனையைக் கிளறும் வண்ணம், நகைச்சுவை, கதை, மேற்கோள் இவற்றை பொருத்தமாய்க் கலந்து பேச வேண்டும்.
பேச்சுக்கேற்ற உடல்பாவம் வேண்டும. கூட்டத்தில் பலர் மீதும் பார்வையை படரவிட வேண்டும். சொந்தக்குரலில், தெளிவாக தேவையான ஒலி அளவில் பேச வேண்டும் என்பன போன்ற பல்வேறு நுட்பங்களை எடுத்துக் கூறும் இந்நூலாசிரியர், 10 வயது முதலே மேடையில் திறமையாய் பேசிவரும் தி.க. தலைவர் மானமிக கி.வீரமணி அவர்களின் பேச்சு முறையை எடுத்துக்காட்டி இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டியுள்ளார்.
இன்றைய இளைஞர்களுக்குப் பெரிதும் பயன்படும் நூல். பயன்படுத்திக் கொள்ள வேண்டியது இளைஞர்களின் கடமை. காலச் சூழலுக்கும் தேவைக்கும் ஏற்ப இந்நூலை எழுதி வெளியிட்டுள்ள கோ.ஒளிவண்ணன் அவர்கள் பாராட்டுக்குரியவர்.