குடியரசு வழங்கும் வரலாற்றுக் குறிப்புகள்

ஜூன் 16-30

பார்ப்பன ஆசிரியனின் மிருகச் செயல். இதைக் கேட்க நாதியில்லையா?

(நம் தமிழ்நாட்டில் பார்ப்பனரின் எண்ணிக்கை மூன்று விழுக்காடுதான்.  எனினும் அவர்களிடம் உள்ள ஆணவமும், ஆதிக்க மனப்பான்மையும் அன்றுதொட்டு இன்றுவரை குறையவே இல்லை.  அண்மையில் கோவை மேட்டுப்பாளையத்தில் சித்தி விநாயகர் கோவிலுக்குள் சென்று விபூதியை எடுத்து வைத்துக்கொண்ட ஒரு ஆதிதிராவிட இளைஞரை மிகவும் கேவலமாகப் பேசி, அவமானப்படுத்தி அந்தக் கோவிலின் அர்ச்சகப் பார்ப்பானும்,  அவன் மகனும் அடித்துள்ளனர்.  ஆனால், நம் காவல்துறை அதிகாரிகள் வழமைபோல் தாக்கியவர்கள் பார்ப்பனர் என்பதால் அவர்கள் மேல் உள்ள வழக்கை மென்மையான வழக்காகப் பதிவு செய்துள்ளனர்.

என்னே கொடுமை!  இப்படிப்பட்ட வன்கொடுமைப் பார்ப்பனர் ஒருவரின் மிருகச் செயல் பற்றி 21.08.1948 குடிஅரசில் பேரறிஞர் அண்ணா  செய்தியை விளக்கமாக நமக்குத் தருகிறார்.  அப்பார்ப்பனர் ஓர் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் என்பதுதான் அதிர்ச்சியூட்டும் செய்தி.  எனவே, பார்ப்பனர் என்போர் படித்தவராயினும்.  படிக்காதவராயினும் தமிழர்களை அழித்தொழிக்கவே செயல்படுவர் என்பதற்கு இந்நிகழ்வும், அண்மையில் மேட்டுப்பாளையத்தில் நடந்த நிகழ்வும் நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றன அல்லவா? )

அரியலூர் உயர்நிலைப் பள்ளி 3_ஆம் பாரமாணவன் கோ. ராஜு 3.8.48 மாலை 5 1/2 மணிக்கு வை. வரதராஜன் என்ற பார்ப்பன மாணவனுடன், ஆரிய திராவிடப் பிரச்சினை பற்றி தமாஷாக உரையாடியதை, அப்பார்ப்பன மாணவன் தவறாக எடுத்துக்கொண்டு 4.8.48 இல் தலைமையாசிரியரான பார்ப்பனரிடம் ரிப்போர்ட் செய்ததின் பேரில் மேற்படி திராவிட மாணவனை அப்பார்ப்பன தலைமையாசிரியர் சுமார் 1 1/2 மணிநேரம் வெயிலில் நிற்கவைத்து, பிறகு அம்மாணவனைத் தனது அறையில் அழைத்து அவனது ஒரு கன்னத்தில் ஒரு கையை வைத்து அணைத்துக்கொண்டு, மற்றொரு கையால் மற்றொரு கன்னத்தில் கை சோர்வடையும் வரை அடித்து, பிறகு மற்றொரு கன்னத்திலும் இவ்விதமே அடிக்க மாணவன் பயந்து போய் அங்கேயே சிறுநீர் கழித்துவிட்டான்.  பிறகு மாணவனைக் கக்கூசுக்குப் போய் வரச்சொல்லி மறுபடியும் இரு கன்னங்களிலும் மாறி மாறி அடித்த பிறகு, மாணவனைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிட்டார்.  சம்பவம் நடக்கும் போது பள்ளிக்கூடத்தின் 3-_ஆவது பீரியட் நடந்து கொண்டிருந்தது.  இதற்குச் சாட்சிகளும் உள்ளனர்.  பிறகு வகுப்புக்குப் போகச் சொல்லி மறுபடியும் பள்ளியின் இடைவேளையில் மீண்டும் கூப்பிட்டு கட்டாயப்படுத்தி மன்னிப்பு எழுதி வாங்கிக்கொண்டு தினம் காலையிலும் மாலையிலும் தன்னிடம் வந்து அன்றாட நிகழ்ச்சிகளைச் சொல்லிவிட்டுப் போக வேண்டுமென கட்டளையிட்டுள்ளார்.

மாணவன் பட்ட அடியினால் அவனுக்கு உடனே மூளைக்குழப்பமும், மயக்கமும், நரம்புத் தளர்ச்சியும் சிறிது நேரம் கழித்து காய்ச்சலும் ஏற்பட்டு அன்றிரவே காய்ச்சலோடு வீட்டில் வந்து படுத்துவிட்டான்.  மறுநாள் (5ஆம் தேதி) காலை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றதில் பார்ப்பனரான டாக்டர் பையன் அடிபடவில்லையென்றும், வெறும் காய்ச்சல் மட்டும் தானென்றும் சொல்லி வெறும் மருந்து மட்டும் கொடுத்து அனுப்பிவிட்டார்.  9ஆம் தேதி சாயங்காலம் மாணவனுக்கு ஜன்னிபிறந்து ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றதில் இம்பேசண்ட் ஆகச் சேர்க்கப்பட்டு அச்சமயம் மாணவனின் வெப்பநிலை 84 டிகிரி ஆக இருந்து (?) 11 ஆம் தேதி காலை 103 டிகிரி ஆக இருந்தது.  பார்ப்பனரான டாக்டர், மாணவன் அடிபட்டதற்கு சர்டிபிகேட் தருகிறேன், தருகிறேன் என்று 5 ஆம் தேதியிலிருந்து சொல்லிக்கொண்டே வந்து 10 ஆம் தேதியன்று இன்றைய நிலைமைக்குத்தான், அதாவது ஜுரத்துக்கு மாத்திரம்தான் சர்டிபிகேட் தரமுடியும்.  அடிபட்டதற்கு அடையாளமு மில்லை, காயமுமில்லை, ஆதலால் நான் எப்படிக் கொடுக்கமுடியும் என்று சொல்லி மறுத்துவிட்டார்.  அரியலூரிலுள்ள மற்ற இரு பிரைவேட் டாக்டர்களும் பார்ப்பனர்.

– குடிஅரசு 21.8.1948 , பக்கம் 15

தகவல் – மு.நீ.சிவராசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *