உலப்பகுத்தறிவாளர்

ஜூன் 16-30

கிறிஸ்டோஃபர் ஹிட்சென்ஸ்

இறைவன் மிகப் பெரியவன் என்பார்கள்.  இந்த வாசகங்கள் எழுதப்பட்ட சரக்குந்துகள் சாலையோரங்களில் தலைகுப்புற விழுந்து கிடக்கும் காட்சிகளும் சர்வ சாதாரணம், தமிழ்நாட்டில்! கடவுள் ஒன்றும் பெரிய ஆள் அல்ல (GOD IS NOT GREAT) என்ற தலைப்பில் ஒரு நூல் 2007 இல் வெளிவந்து கடவுள் நம்பிக்கையாளர்களை ஒரு கலக்குக் கலக்கியது.  அந்நூலாசிரியர் கிறிஸ்டோஃபர் ஹிட்சென்ஸ் என்பவர் 63 வயதான அமெரிக்கர்.

1949 ஆம் ஆண்டில் ஏப்ரல் 13 ஆம் நாளில் இங்கிலாந்து நாட்டில் போர்ட்ஸ் மவுத் எனும் ஊரில் பிறந்து, ஆக்ஸ்போர்டு பல்லியால் கல்லூரியில் பயின்று இதழாளராகவும் நூலாசிரியராகவும் செயல்பட்டு அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பவர் ஹிட்சென்ஸ்.  தி அட்லான்டிக், வானிடிஃபேர், ஸ்லேட், வொர்ல்டு அஃபேர்ஸ், தி நேஷன், ஃபிரீ என்கொயரி போன்ற பல ஏடுகளில் எழுதி வருபவர், தொலைக்காட்சிகளில் டாக் ஷோ (TALK SHOW), விவாதங்கள் போன்றவற்றில் பங்குபெற்று தம் நாத்திக முத்திரையைப் பதித்து வருபவர்.  2005 ஆம் ஆண்டில் நடத்தப்பெற்ற அயல்நாட்டுக் கொள்கை வாக்கெடுப்பில் இவர் பெயரும் போட்டியில் சேர்க்கப்பட்டு, டாப் 5 இல் இவரும் ஒருவராக உலக அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதே இவருக்கும் இவரது கொள்கைக்கும் கிடைத்த பெருமையைப் பறைசாற்றும்.  இவரது புகழ் இவர் பிறந்த பிரிட்டனிலும் வாழ்ந்துவரும் அமெரிக்காவிலும் இடதுசாரிக் கருத்தாளர்களிடையே பரவலான செல்வாக்கைப் பெற்றுள்ளது ஆனாலும் அரசியல் இடதுசாரிகள் எனப்படுவோர் மத்தியிலிருந்து இவர் வேறுபட்டுக் காட்சியளிக்கும் நிலை 1989 இல் ஏற்பட்டது.  புகழ்பெற்ற பகுத்தறிவு எழுத்தாளரான சல்மான் ருஷ்டி எழுதிய சாத்தானின் கவிதைகள் நூலுக்காக அவருக்கு மரணதண்டனை விதித்து, மதக்கட்டளை (ஃபாட்வா) பிறப்பித்த ஈரான் மதத்தலைவர் அயாதொல்லா கொமேனிக்கு எதிர்ப்புத் தெரிவிக்க இந்த இடதுசாரிகள் தயங்கிக் கொண்டிருந்த நேரத்தில் ஹிட்சென்ஸ் கடும் கண்டனம் தெரிவித்து தாம் வித்தியாசமானவர் என்பதை எண்பித்தார்.  தொடர்ந்து அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட போது மத முகமூடியுடன் பாசிச முகம் காட்சி அளித்ததைக் கண்டித்தார்.

புதிய நாத்திக இயக்கத்தவன் எனத் தம்மைக் கூறிக் கொள்ளும் இவர், தமக்குக் கடவுள் நம்பிக்கை அறவே கிடையாது என அறிவித்திருக்கிறார்.  தம்மை ATHEIST  எனக் கூறிக் கொள்வதைவிட ANTITHEIST எனக் கூறிக் கொள்ளவே விரும்புகிறார்.

இந்தச் சொல் பரப்பப்படவேண்டும் எனக் கூறுகிறார்.  கடவுள் என்பதோ, சர்வ சக்தி படைத்த பொருள் என்றோ கூறுவதும் நம்புவதும் தனிமனிதனின் சிந்தனைச் சுதந்திரத்தைத் தடைசெய்து வருகிறது எனும் கொள்கையைக் கொண்டவர்.  அறிவியல் கண்டுபிடிப்புகள் மட்டுமே அறநெறிகளையும் (ETHICS) மனித நாகரிகங் களையும் உருவாக்கி, மதங்கள் ஆக்ரமித்துள்ள இடத்தை அழித்திட வேண்டும் என்று வலியுறுத்தி கடவுள் பெரிதானதல்ல என்ற நூலை எழுதியிருக்கிறார்.

பிரிட்டன் கப்பல் படையில் பணிபுரிந்த தாய்க்கும் தந்தைக்கும் பிறந்தவர்.  இட்லரின் போர்க்கப்பல் ஒன்றினை வடமுனைப் போரில் மூழ்கடித்த பிரிட்டிஷ் ஜமைக்கா கப்பலின் தளபதியாக தந்தை எரிக் ஹிட்சென்ஸ் பணியாற்றிய போது, கப்பல் படையில் பெண் பிரிவின் அதிகாரியாக தாய் யுவோன் பணிபுரிந்தார்.

கேம்பிரிட்ஜ் பள்ளியிலும் ஆக்ஸ்போர்டு கல்லூரியிலும் படித்தவரான ஹிட்சென்ஸ் அமெரிக்காவின் வியட்நாம் நாட்டுக்கு எதிரான போர்ச் செயல்களைக் கண்டித்து 1960 களின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கினார்.  1965 இல் தொழிற்கட்சியில் சேர்ந்தார். அதே வேகத்தில் 1967 இல் தொழிற்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.  வியட்நாம் போரில் அமெரிக்காவை ஆதரித்துச் செயல்பட்டவர் அப்போதைய இங்கிலாந்து தொழிற்கட்சிப் பிரதமர் ஹெரால்டு வில்சன் கட்சியின் நிலைக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த காரணத்தால் ஹிட்சென்ஸ் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.  ஆனாலும் இதே நிலைப்பாட்டைத் தம் எழுத்துகளில் வெளிப்படுத்தித்தான் நியூ ஸ்டேட்ஸ்மேன் ஏட்டில் எழுதிக் கொண்டிருந்தார்.  அப்போதைய அமெரிக்க வெளியுறவு அமைச்சரான கிசிஞ்சர் என்பாரைத் தாக்கித்தான் எழுதினார்.

1981 இல் அமெரிக்காவுக்குப் போய் தி நேஷன் இதழில் அப்போதைய குடியரசுத் தலைவர்கள் ரீகன், ஜார்ஜ் புஷ் ஆகியோரின் அயல் உறவுக் கொள்கைகளைக் கண்டித்தே எழுதி வந்தார்.  சைப்ரஸ் நாட்டில் பத்திரிகை நிருபராக இருந்தபோது, எலனி மெலீக்கு என்பாரை மணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையானார்.  1989 இல் எழுத்தாளரான கரோல் ப்ளூ என்பாரை மணந்து அன்டோனியா எனும் மகளுக்குத் தந்தையானார்.

சீரான படைப்பு (INTELLIGENT DESIGN) எனும் கடவுள் நம்பிக்கையாளர்களின் புதிய படைப்புக் கொள்கையையும், அமெரிக்காவில் சில பள்ளிகளில் அது பாடமாக வைக்கப்பட்டிருப்பதையும் கடுமையாக எதிர்ப்பவர் ஹிட்சென்ஸ்.  இக்கொள்கையை ஆதரிக்கும் அதிபர் புஷ்சையும் கடுமையான சொற்களால் விமரிசனம் செய்து வந்தவர்.  ஈராக் போரில் அமெரிக்க ராணுவம் நடத்திய படுகொலைகளைக் கண்டித்தவர்.  புஷ் அரசு பிறப்பித்த வாரன்ட் இல்லாமல் யாரையும் உளவு பார்க்கும் உரிமைச் சட்டத்தை எதிர்த்து வழக்குப் போட்டவர்.  ஓர் எழுத்தாளனாக சமூகத்திற்கு எதிரான ஒடுக்கு முறைகளை எதிர்த்து எல்லா முனைகளிலும் போராடியவர் ஹிட்சென்ஸ் எனலாம்.

பிரிட்டனின் அரச வம்சம் நீக்கப்பட வேண்டும் என்பதற்காகக் குரல் கொடுத்த எழுத்தாளராகவும் விளங்குகிறார்.

ஆப்ரகாம் மதங்கள் எனப்படும் மூன்று பெரிய மதங்களையும் கண்டித்தவர்.  ஏக இறைவன் எனும் கொள்கையுடைய யூத, கிறித்துவ, இசுலாமிய மதங்களை ஒருசேரக் கண்டிப்பவர்; எல்லாக் கேடுகளுக்கும் அச்சாக விளங்குபவை இம்மூன்று மதங்களே என்று ஆணி அறைந்தாற்போலக் கூறுபவர்.  மேற்கத்திய பகுத்தறிவாளர்கள் இம்மூன்று மதங்களைத் தாக்குவதோடு நிறுத்திக் கொள்வர்.  இவரோ, மற்றவர்கள் தொடாத மதங்களான இந்து மதம், துக்கடா மதங்கள் போன்றவை பற்றியும் விமரிசனம் செய்து கண்டனக் குரல் எழுப்பிய பகுத்தறிவு எழுத்தாளராவார்.

எந்த மதத்தைச் சேர்ந்த யாராக இருந்தாலும், அவர்களோடு வாதிடத் தயார் எனப் பகிரங்கமாக அறிவித்துள்ளவர்.  அதன்படி கிறித்துவப் பாதிரியாரான டக்ளஸ் வில்சன் என்பவருடன் வாதிட்டார். இதன் விவரங்கள் இன்றைய கிறித்துவம் (CHRISTIANITY TODAY) எனும் இதழில் வெளியிடப்பட்டன. “IS CHRISTIANITY GOOD FOR THE WORLD?” (கிறித்துவம் உலகிற்கு நன்மையானதா?)  எனும் தலைப்பில் இவரது வாதம் 2008 இல் நூலாகவே வெளியிடப் பட்டுள்ளது.  இந்நூலைப் பிரபலப்படுத்து வதற்காக பலநாடுகளுக்கும் அவர் சென்றார்.

சினிமாப்படத் தயாரிப்பாளரான டாரன் டோன் என்பவர் தம் படப்பிடிப்புக் குழுவினரை அவருடன் அனுப்பி “COLLISION:  IS CHRISTIANITY GOOD FOR THE WORLD” என்ற திரைப்பட மாகவே தயாரித்துள்ளார். 27-10-2009 இல் திரைப்படம் வெளிவந்தது.

கிறிஸ்டோஃபர் ஹிட்சென்சின் வாதத்திறமை உலகப் புகழ் பெற்றது என்பதற்கு இன்னுமோர் நிகழ்ச்சி.  பிரிட்டனின் பிரதமராக இருந்தவர் டோனி பிளேர் என்பவர்.  தொழிற்கட்சிக்காரர்.  நம்மூர் கம்யூனிஸ்ட் களைப் போலவே அவரும் மதம், கடவுள் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டவர்.  அவர் புரொடஸ்டன்ட் (மறுப்பியல்) கிறித்துவப் பிரிவைச் சார்ந்தவர், அவரது மனைவி கத்தோலிக்கக் கிறித்துவர்.  எந்தப் பிரிவின்படி திருமணம் செய்து கொண்டனர், எந்தப் பிரிவின்படி ஜெபம் செய்து குடும்பம் நடத்தினர் என்பதற்கான விவரங்கள் (என்னிடம்) இல்லை.
டோனி பிளேர் பிரதமராக இருந்த போது அமெரிக்கா அடாவடியாக ஈடுபட்ட ஈராக் போரை ஆதரித்தவர்.  போர் முடிந்து, பதவி இழந்து போனவர் புஷ்சைப் போலவே!  இதன் காரணமாக ஹிட்சென்ஸ் இவரை எதிர்த்தது ஒரு முனை. மற்றொரு முனை என்னவென்றால், பதவி இல்லாத பிளேர் தம் மனைவியின் கத்தோலிக்க மதத்திற்கு மாறிவிட்டவர், இதனாலும் கண்டனம் செய்யப்பட்டவர்.

நண்டு கொழுத்தால் வளையில் இருக்காது என்று நம் ஊரில் சொல்வது போல, இந்தப் புதிய கத்தோலிக்கர், நம் ஹிட்சென்சை வாதத்திற்கு அழைத்து வாங்கிக் கட்டிக் கொண்டார். கனடா நாட்டின் டொரோன்டோ (TORONTO)  நகரில் 26_10_2010 இல் வாதப்போர் நடந்தது.  மங்க் அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வாதப்போரில் ஹிட்சென்ஸ் வழக்குத் தொடுத்தார், டோனி பிளேர் வழக்கை மறுத்தார்.  வாதத்திற்கு முன்னதாகவே மக்களின் மத்தியில் பரபரப்பு தொற்றி, மக்களின் வாதப்பிரதிவாதங்கள் மங்க் அறக் கட்டளையின் வலைப்பதிவில் பதிவு செய்யப்பட்டன.  அதன்படி ஹிட்சென்சின் வழக்குக்கு ஆதரவாக 56 விழுக்காடு வாக்குகள், எதிர்ப்பாக (டோனி பிளேருக்கு ஆதரவாக) 22 விழுக்காடும் பதிவானது. 21 விழுக்காடு முடிவெடுக்க முடியாதவர்களின் விகிதாச்சாரம்.

வாதப்போர் முடிந்தபிறகு, ஹிட்சென்ஸ் தரப்புக்கு 68 விழுக்காடு ஆதரவு பெருகியது.  32 விழுக்காடு ஆதரவை மட்டுமே  டோனி பிளேர் பெற முடிந்தது.  அதாவது, கிறித்துவம் உலகிற்கு நல்லதல்ல எனும் முடிவுக்கு மூன்றில் இரண்டு பங்கினர் வந்துள்ளனர்.  மூன்றில் ஒரு பங்கு ஆதரவை மட்டுமே கிறித்துவ மதம் பெற முடிந்தது.  மதம் என்றுமே வென்றதில்லை; என்றும் வெல்லாது.

– தொடரும்

– சு.அறிவுக்கரசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *