ஆசிரியர் பதில்கள்

ஜூன் 16-30

கேள்வி : கடவுள் உண்டா இல்லையா என்பது இருக்கட்டும்.  கடவுள் நம்பிக்கை இருப்பது நல்லதுதானே  என்று கேட்கும் நண்பருக்கு என்ன பதில் சொல்லுவது? – இ. கிருபாகரன் , சோளிங்கர்

பதில் : உங்கள் நண்பரைக் கேளுங்கள்; கடவுள் நம்பிக்கை இருப்பது எவ்வகையில் நல்லது என்று.

1. கடவுள் நம்பிக்கையினால் ஒழுக்கம், நன்னடத்தை கூடுமென்றால், இத்தனை சிறைச்சாலைகள், குற்றங்கள், கோயில்கொள்ளைகள், அர்ச்சகர்களே பெண்களிடம் ஒழுக்கயீனமாக நடத்தல் நாளும் பெருகுமா?  சங்கரமடம் கொலைக்குற்றத்திற்கு ஆளாகுமா?  போப்பாண்டவர்களே ஒழுக்கக்கேட்டினை ஒப்புக் கொள்வார்களா?  ஈராக் மீது போர் தொடுக்க – அழிக்க கடவுள் பேசினார் என்று புஷ் புருடா விடுவாரா?

2. கடவுள் நம்பிக்கை – எல்லாம் அவன் செயல் என்பதால் – நம் மனிதர்களின் சுயமுயற்சிக்கு இடமில்லாமல் ஆக்கி, தன்னம்பிக்கையைத் தகர்த்துவிடுகிறதா இல்லையா?

3. பிரார்த்தனை மூலம்தானே கடவுள் வழிபாடு – அங்கேதான் லஞ்சமே துவங்குகிறது!  கடவுளுக்கு லஞ்சம் – கையூட்டுதானே தினப்பிரார்த்தனை_ படையல் – உண்டியல் காணிக்கையெல்லாம்!

கேள்வி : நான் கிறித்தவப் பிரிவைச் சார்ந்தவன். பைபிளைப் பலமுறை படித்தும் அதிலுள்ள எதையும் நம்ப முடியவில்லை.  இயேசுவின் வரலாற்றை அறிய எந்த நூலைப் படிக்க வேண்டும்? – அ. ராஜா,  தூத்துக்குடி

பதில் : பெர்ட்ரண்ட் ரசலின் நான் ஏன் கிறிஸ்தவன் அல்ல என்ற நூலைப் படியுங்கள்.  உங்களுக்குக் குழப்பம் தீரும் – தெளிவு ஏற்படும்.

கேள்வி : குழந்தைக்கறி, கண்கள், தன் மனைவி போன்றவற்றைக் கொடுத்தவர்களுக்கு அன்பே சிவமான கடவுள் சொர்க்கத்தில் இடம் கொடுத்ததாக பெரியபுராணம் கூறுகிறதே……  – பாவலர் அறிவரசன், திருலோக்கி

பதில் : இதுவா அன்பு?  என்னே மடமை?  அதை நம்புவதும் பரப்புவதும் எத்தனை மடங்கு மடமை?

கேள்வி : புனிதமானது என்றழைக்கப்படும் கங்கை நீர் உலகத்திலேயே மிகவும் அசுத்தமானதாமே? – ம. உமாமகேசுவரி, உறையூர்

பதில் : ஆமாம்!  அதிலென்ன சந்தேகம்.  ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது இந்திய நதிகளின் தண்ணீர் சேகரிப்பை பிரான்சில் – பாரிசின் செயின் நதியில் ஊற்றிடும் முயற்சியை பிரெஞ்சு அரசாங்கம் தடுத்து நிறுத்தியது.  இதைத்தான் (கங்கை அசுத்தநீர் – தூய்மையற்றது) என்று கூறி தடுத்ததே  ஆதாரமாகும்!

கேள்வி : தந்தை பெரியார் அவர்களை ஈ.வெ.ராமசாமி என்றும் அண்ணாவை அண்ணாதுரை என்றும் எழுதும் பார்ப்பனியப் பத்திரிகைகள் சங்கராச்சாரியை மட்டும் காஞ்சிப் பெரியவர் என்று எழுதுகின்றன.  தமிழ்ப் பத்திரிகைகளுக்கு அந்த இன உணர்வு வரவேண்டாமா? – மு. இராசாராம், எர்ரம்பட்டி

பதில் : பல தமிழ்ப் பத்திரிகையாளர்களுக்கு மானத்தைவிட சோறுதான் முக்கியம்.

கேள்வி : கவிஞர் வாலியின் தாய், பிரசவத்தின்போது, ஜன்னி கண்டு மோசமான நிலையிலிருந்ததால், ஒரு முஸ்லிம் தாய், பாலூட்டி வளர்த்ததாக விகடனில் (18.5.11) குறிப்பிடுகிறார்.  அதேபோல ஒரு முஸ்லிம் தாய் முடியாமலிருந்தால், ஒரு பார்ப்பனத் தாய் பாலூட்டி வளர்ப்பாளா? – நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்

பதில் : பெரிதும் நிச்சயம் நடக்காது, விலக்காக ஏதாவது நடந்தால் உண்டு!

கேள்வி : சமச்சீர் கல்வி முறையை ஜெயலலிதா கைவிட்டதை ராம. கோபாலன் பாராட்டி இருக்கிறாரே?  _ தா. சுந்தர், மதுரை

பதில் : இதிலிருந்தே அதன் அடிப்படை மூலம் எங்கேயிருந்து கிளம்பியிருக்கிறது என்பது நன்கு புரிகிறது அல்லவா?

கேள்வி : எல்லா மதத்தினரும் கடவுள் ஒன்று என்கிறார்கள். அப்படி என்றால் சைவக் கடவுள் அசைவக் கடவுள் தோன்றியது எப்படி? – சி. சுவாமிநாதன், ஊற்றங்கரை

பதில் : சிக்கலான கேள்வி – மதவாதிகளுக்கு!  எல்லாம் பிள்ளை விளையாட்டே – என்பது பகுத்தறிவுவாதிகள் பதில்!

கேள்வி : அரசு, சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென உபதேசம் செய்கிறது.  ஆனால் 200 கோடி ரூபாய் செலவில் அச்சடிக்கப்பட்ட சமச்சீர் கல்விப் புத்தகங்களையும், 1200 கோடி செலவில் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தையும் நிறுத்துவது சரியா? – கோ. செழியன், சமயபுரம்

பதில் : போகப்போகத்தான் தெரியும். நிழலின் அருமை வெயில் தகிக்கும்போதுதானே புரியும்?

கேள்வி : கூடா நட்பு கேடாய் முடியும் என்று கலைஞர் யாரைச் சொல்கிறார்? – க. பூங்குழலி, துவரங்குறிச்சி

பதில் : கைப் புண்ணுக்குக் கண்ணாடியா தேவை?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *