பேரழகு பொலிவும் பெலீசு நாடு!

செப்டம்பர் 16-30

இரவு ஆட்ட பாட்டங்கள் முடிந்து உறங்கி எழுந்தால் கப்பல் தென்

அமெரிக்காவின் பெலீசு  நாட்டில் நிற்கின்றது. காலை உணவை முடித்து (எத்தனை விதமான உணவுகள்?) பெலீசைப் பார்க்கக் கிளம்பினோம்.

தென் அமெரிக்காவில் அழகிய சிறிய நாடுகள் பல உள்ளன, அதில் பெலீசு ஒன்று. முன்னர் ஹாண்டுராசுடன் இருந்தது. மலை, காடு-, நீர்வளம் அமைதியும்,

புன்னகையும் புரியும் இசை விரும்பும் மக்கள் நிறைந்த இடம் .மாயன் நாகரீகத்தில் இருந்து ஜமாய்க்காவி-லிருந்து வந்து குடியேறியவர்கள் என்று பல இனக்கலப்பு இங்கே! கரும்புத் தோட்டத்தில் வேலை செய்யக் கொண்டு-வரப்-பட்ட இந்தியர் 1850 களில் இருந்து வாழ்கின்றனர். சென்னையில் இருந்து கிளம்பிய முதல் உழைப்பாளிகளின் ஏற்றுமதிக்கப்பல் அருகே உள்ள பிரிட்டிசு கயானா நாட்டிற்கு 200 ஆண்டுகட்கு முன்னர் வந்தது.

பெலீசில் பார்ப்பத்ற்குப் பல, இடங்கள் உள்ளன.மாயன் வரலாற்றுச் சின்னங்கள், பல கடற்கரைகள்,பல தீவுகள் என்று. நாங்கள் படகிலேறி ஆழ் கடலின் நடுவே வெள்ளை வெளேறென்ற மணலிலே அமைந்-திருந்த அழகிய தீவு ஒன்றிற்குச் சென்றோம். நீலமும் பச்சையுங் கலந்த நிறத்திலே கடல் மணலிலும் கடலிலும் விளையாடலாம்.  கூட வந்திருந்தவர்-களுடன் ஆண்களும் பெண்களு-மாகக் கைப்பந்து மற்ற விளையாட்டுக்கள், நன்கு நீச்சல் தெரிந்தவர்கள், அவ்வளவாகத் தெரியாதவர்கள் என்று பிரித்தனர். அங்குள்ளக் கடலை நன்கறிந்தவர் முன் செல்ல அவரைத் தொடர்ந்து மூக்கு வாய் வழிக்குழாயும் நீரில் பார்க்கும் கண்ணாடியும், கால்களில் துடுப்பும் அணிந்து அனைவரும் தயாரானோம். கரையி-லிருந்து நூறடி தொலைவில் ஆரம்பித்துக் கண்ணுக்கும் நெஞ்சிற்கும் விருந்து  ஆரம்பமானது. அழகழகானப் பாறைகள் கிளிஞ்சல்கள், சங்குகள் மீன் ஆமை வகைகள். அவர் அங்கங்கே காட்டிக் கொண்டே வருவார். சுமார் அறுபதடி ஆழத்திற்குச் சென்று சங்கை மேலே கொண்டுவந்து அருகில் காட்டிப் பின்னர் கொண்டு விட்டு விடுவார். நாம் எதையும் தொட முடியாது. அவர் ஒரு சுறாவைக் காட்டினார். அனைவர்க்கும் அச்சந்தான். ஒன்றும் செய்யாது நீங்கள் நீந்திச் செல்லுங்கள் என்றார். சிலருக்குப் பார்க்க விருப்பம், பலருக்கோ உயிரின் மேல் விருப்பம், நீச்சல் விரை-வடைந்தது! மணலோடு மணலாகப் படுத்திருந்த வெள்ளை கத்தி மீன் (Sting ray) என்று பல எங்கள் கண்ணிற்குத் தெரியாதவை அவர் கண்ணிற்குத் தெரிந்தன! ஒரு மணி நேரம் போனதே தெரிய-வில்லை! வந்து உணவருந்தி இளைப்பாறினோம்.

பின்னர் படகில் ஏறி வந்தோம். அங்கே ஒரு வாடகைக் காரை அமர்த்திக்கொண்டு அவரிடம் பெலீசின் முக்கிய இடங்களைக் காண்பிக்கச் சொல்லி சென்றோம். ஏழை பணக்காரார்கள் வாழும் இடங்கள், தலைநகரக் கட்டிடங்கள், விளையாட்டு இடங்கள், கடை வீதிகள் என்று எல்லாவற்றையும் காண்பித்தார். இந்திய வணிக நிறுவனங்களும் உள்ளன. அங்கிருந்த உச்ச நீதி மன்றத்திலே ஈழத் தமிழர்

ஒருவர் நீதி அரசராக இருந்துள்ளார். மக்கள் ஆங்காங்கே அமைதியாக ஆராவாரம் இல்லாமல் இருந்தனர். இசை எங்கும் நமது ஊர் வானொலி போல நிறைந்திருந்தது. அவர்களின் டிரம் இசை தான் மிகுதி. அவர்கள் பேசும் ஆங்கிலம் பல உச்சரிப்புக்களைச் சுறுக்கி, மாற்றி சென்னைத் தமிழ் போல இருந்தது. பேச்சு மட்டும் விரைவாக இருந்தது. வாழ்க்கை மெதுவாக அனுபவித்து வாழ்வது போல அமைதி! செல்வம் கொழிக்கும் நாடாக இல்லாவிட்டாலும் மகிழ்ச்சி நிறைந்த நாடாக இருந்தது.

கோடையும், குளிர்காலமும் எப்போதும் நன்றாகவே இருப்பதால் உல்லாசப் பயணிகள் வருவது ஆண்டு முழுவதும் வருமானம் தருகின்றது. ஆழ் கடல் முழுகி அனுபவிப்பதற்கு உலகின் மிக்க விருப்பமான இடம் என்பதால் அங்கு நிறைய பேர் வருகின்றனர். ஏமாற்றமடையாமல் இயற்கையும் மிகவும் ஒத்துழைக்கின்றதாம். புயல் மற்றும் மழை குறைவு.

தென் அமெரிக்காவிலேயே  ஆங்கிலம் ஆட்சி மொழியாக உள்ள நாடு பெலீசு மட்டுமே !

நீச்சல் தெரியாதவர்களும் பழைய நாகரீகத்தில் ஈடுபாடு கொண்டவர்களும் பல மாயன் நாகரீகத்தின் அடையாளங்களைக் கண்டு கழித்தனர். அவ்வளவு நன்றாகப் பாதுகாக்கப் படவில்லை.

மாயன் நாட்காட்டி, பிரமிடு போன்ற கட்டிடங்கள் நிறைய உள்ளன. மற்றும் படகிலேயே சென்று காணக்கூடிய குகைகள் உள்ளன.

திரும்பி வந்த அனைவரும் அங்குள்ள கடைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கப்பலில் ஏறுவதற்கு அழைப்பு வந்து விட்டது.கப்பலை விட்டு விட்டு நீந்தியா போக முடியும்? அனைவரும் விரைவாகத் திரும்பினோம் அன்றிரவு நிகழ்ச்சிகள் என்னென்ன போகலாம் என்று பேசிக்-கொண்டே !

வாருங்கள் போவோம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *