கெடுதல் செய்யும் பூச்சிகளை அழிக்க சோலார் விளக்குப்பொறி உருவாக்கப்பட்டுள்ளது
சுற்றுச்சுழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் விவசாய நிலங்களில் பூச்சி மேலாண்மைக்காக சோலார் விளக்குப்பொறியை உருவாக்கியுள்ளனர் புதுவை சாப்ஸ் (SAFS) வேளாண் நிறுவன விஞ்ஞானிகள். அது குறித்த விவரங்களை விவரிக்கிறார், சாப்ஸ் வேளாண் நிறுவனத்தின் நிறுவனர் அப்துல் காதர்…
வயலில் உள்ள பூச்சிகளை அழிப்பதற்காக ரசாயன மருந்துகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாகக் கண்டறிந்த முறைதான் இந்த சோலார் விளக்குப்பொறி. இயற்கை முறையில் இதன் மூலம் பூச்சிகளைக் கட்டுபடுத்தலாம்.
முற்றிலும் சூரிய ஒளியில் தானியங்கி முறையில் இந்த சோலார் விளக்குப்பொறியை வடிவமைத்து உள்ளோம்.
அதிலும் தீமை செய்யும் பூச்சிகளை மட்டும் அழிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதற்காக அவை முழுத் திறனுடன் பயிர்களை அழிக்கும் நேரத்தைத் தெரிந்து அதற்கேற்றாற்போல சோலார் விளக்குப் பொறியை வடிவமைத்து உள்ளோம். பூச்சியியல் நிபுணர் முனைவர் வைத்தியலிங்கத்தின் உதவியுடன் சூரியன் மறைகின்ற நேரம் முதல் தொடர்ச்சியாக நான்கு மணி நேரம் செயல்படும் விதமாக இந்தக் கருவியை மைக்ரோ கண்ட்ரோல் போர்டு மூலம் வடிவமைத்தோம். இதில் சூரிய சக்தியை சேமிக்க பேட்டரிகள் உள்ளன.
இந்தச் சோலார் விளக்குப் பொறியை தோட்டப்பயிர்கள், காய்கறிப் பயிர்கள், நெல் எண்ணெய் வித்துப் பயிர்கள், மலைத் தோட்டப் பயிர்கள், என அனைத்திற்கும் பயன்படுத்தலாம். தேவையான இடத்திற்கு இக்கருவியை எளிதில் மாற்றலாம்.
தாய் அந்துப் பூச்சிகள் காய் துளைப்பான், பழம் துளைப்பான், சாறு உறிஞ்சும் பூச்சி, வெள்ளை ஈ, வண்டுகள் முதலியவற்றை இந்த விளக்குப்பொறியின் மூலம் கட்டுப்படுத்தலாம். 85 சதவிகிதம் தீமை செய்யும் பூச்சிகளே இக்கருவியில் விழுகின்றன. நன்மை செய்யும் பூச்சிகள் விடிகாலைப் பொழுதில் அதிகம் வரும்.
சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் உள்ள பூச்சிகளை இந்த விளக்குப்பொறியின் மூலம் கட்டுப்படுத்தலாம். தற்போது விவசாயிகளுக்கு இக்கருவியை 2,625 ரூபாய்க்கு விற்பனை செய்துவருகிறோம். இதே தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு மின்சார பேட்டரியின் மூலம் செயல்படக் கூடிய விளக்குப் பொறியையும் உருவாக்கி, தற்போது 1,800 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறோம் என்கிறார்.
கடந்த பருவத்தில் கத்தரிப் பயிர் செய்திருந்தேன், இந்தச் சோலார் விளக்குப் பொறியை அதில் பயன்படுத்தியதன் மூலம் பூச்சிக்கொல்லிகளுக்குச் செலவிடும் தொகையில் 75 சதவிகிதத்தைக் குறைத்துள்ளேன். விளைச்சலும் அதிகரித்துள்ளது என்கிறார், பூத்துறை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர்.