பட்டுப்புடைவையை வெய்யிலில் வைக்கக் கூடாது
பட்டுப்புடைவையை சூரிய ஒளியில் உலர வைக்கக் கூடாது. சோப்போ, சோப்புப் பவுடரோ பயன்படுத்தி அலசக்கூடாது. வெறும் தண்ணீரில் அலசினால் போதும். அடித்துத் துவைக்கக் கூடாது, சொரசொரப்பான பொருளால் தோய்க்கக்கூடாது.
பட்டுப் புடைவையை வருடக் கணக்கில் தண்ணீரில் நனைக்காமல் வைக்கக்கூடாது. ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது தண்ணீரில் அலசி, நிழலில் உலர்த்தி மடித்து வைக்க வேண்டும். அதிக சூட்டில் இஸ்திரி போடக்கூடாது. பட்டுப் புடைவையை இரும்புப் பீரோவில் வைக்காமல் மரப்பீரோவில் வைக்க வேண்டும்.
கட்டிய பட்டுப் புடைவையை அவிழ்த்ததும் மடிக்காமல், நிழலில் உலர்த்தி மடித்து வைக்க வேண்டும்.
பட்டுப்புடைவை மீது நேரடியாக இஸ்திரி போடக்கூடாது. மெல்லியத் துணியை அதன்மீது போட்டுத் தேய்க்க வேண்டும்.
தண்ணீரில் நனைத்து அலசுவதைவிட உலர்சலவை செய்வது சிறந்தது. கல் உப்பு கலந்த நீரில் 5நிமிடம் ஊறவைத்து அலசலாம்.
பாசிப் பருப்பை ஊற வைத்து நீர்விட்டு அரைத்து, பட்டுப்புடைவையில் உள்ள கறை போகத் தேய்த்து அலச வேண்டும். கற்பூர உருண்டைகளைப் பட்டுப் புடைவையில் வைக்கக்கூடாது.
மின்சாரத் தீயை நீர் ஊற்றி அணைக்கக்கூடாது
மின்சாரத்தால் தீப்பற்றி எரியும்போது, நீர் ஊற்றி அணைக்கக்கூடாது. நீர் ஊற்றினால் மின் அதிர்ச்சியும் தீக்காயங்களும் ஏற்படும். மின்கசிவினால் ஏற்படும் தீயை அணைக்க கார்பன்டையாக்ஸைடு, கார்பன்டெட்ரா குளோரைட் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும்.
உடம்பில் தீப்பற்றினால் ஓடக் கூடாது
உடம்பில் தீப்பற்றியவர் ஓடினால் காற்று உரசுவதால் தீ விரைவாகப் பரவும். எனவே, சாக்கு அல்லது சமுக்காளம் போன்ற பருத்தித் துணிகளால் உடலைப் போர்த்தித் தரையில் மெல்ல உருள வேண்டும். அவ்வாறு செய்தால், தீ பரவத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல் தீ விரைவில் அணைந்து போகும்.
எண்ணெய்யில் தீ பற்றினால் தண்ணீர் ஊற்றக் கூடாது
எண்ணெய்யில் தீ பற்றினால் தண்ணீர் ஊற்றக் கூடாது. மணல் அல்லது மண்ணைக் கொட்டி அணைக்க வேண்டும். தூரத்தில் நின்று மண் அல்லது மணலைக் கொட்ட வேண்டும். எண்ணெய் மேலே தெறிக்காமல் கவனமுடன் மண் கொட்ட வேண்டும்.
செல்பேசியை இதயத்துக்கு அருகில் வைக்கக் கூடாது
பெரும்பாலோர் சட்டையின் இடதுபக்க மேல்பையில் செல்போனை வைப்பர். அது சரியல்ல. செல்பேசியின் அதிர்வும், கதிர்வீச்சும் இருதயத்தைப் பாதிக்கும். இடுப்பில் பக்கவாட்டில் வைப்பது பாதிப்பைக் குறைக்கும். செல்பேசியைக் காதருகில் வைத்து அதிக நேரம் பேசக் கூடாது. பேசினால் மூளையும் காதும் வெகுவாகப் பாதிக்கப்படும். எனவே, வாய்க்கு முன் அல்லது காது கருவி மூலம் பேச வேண்டும். அதிக நேரம் பேச வேண்டி வருமானால் கம்பிவழித் தொலைபேசியில் பேச வேண்டும். செல்பேசியைத் தலையருகில் வைத்துத் தூங்கக் கூடாது. கால்பகுதியில் தூரத்தில் வைத்துத் தூங்க வேண்டும். பயணத்தின்போது தூங்கினால் கால்சட்டைப் பையில் வைத்துத் தூங்க வேண்டும்.
குழந்தைகளுக்கு வலிப்பு வந்தால் துணியைப் போர்த்தக் கூடாது.
காற்றோட்டமான இடத்தில் கிடத்தி, அணிந்துள்ள இறுக்கமான ஆடைகளைத் தளர்த்திவிட வேண்டும். உடலை வெதுவெதுப்பான நீரால் துடைக்க வேண்டும். பால் குடிக்கும் குழந்தையென்றால் தாய் அருகில் படுத்துப் பால் கொடுக்க வேண்டும்.