Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

மதங்கொண்ட தேசத்தில்
மனிதநேயம் பேசினாய்!

ஜாதியச் சாக்கடையில்
மோதிநின்ற மக்களிடம்
சமத்துவத்தைப் போதித்தாய்!

பெண்ணடிமை காக்க
ஆணாதிக்க முதுகெலும்பை
அடித்து நொறுக்கி
பெண்ணுரிமை பேசினாய்!

மூட நம்பிக்கைகளின்
மூலத்தைக் கண்டறிந்து
தன்மானம் ஊட்டிய பெரியார்
அதன் ஆணி வேரையே
ஆட்டிப் பிடுங்கினாய்!

கல்லைக் கடவுளென்றும்
மூத்திரத்தைத் தீர்த்தமென்றும்
நம்பிய நம்மக்கள்
மூளையைச் சலவை செய்தாய்!

தன்மான உணர்வூட்டி
ஆதிக்கம் அழித்தொழித்தாய்!
சமூக நீதி தந்து!

– பாசு ஓவியச்செல்வன்

***

நீங்கள்  எம்மைச்  சூத்திரன்
என்றழைத்தபோது?
எம்  கையில்  சவரக் கத்தி
இருந்தது.
எம்  கையில்  பிணமெரிக்கும்
கட்டை  இருந்தது.
அனல் தின்னும் பறை  காய
தீக்குச்சி  இருந்தது.
பல  புதுச்  செருப்புகள்  தைத்தே
இருந்தன.
நீங்கள்  நம்பிக் காட்டிய
குரல்வளையைக்
கிழித்தாரில்லை!
தன்னந்தனிச் சுடுகாட்டில்
பயந்துபோய்
வந்தாரில்லை..!!
நீங்கள் எரித்தீரென்று
பதிலுக்கு
எரித்தாரில்லை..!!!
கண்டதும் கழட்டச் சொன்னீர்
செருப்பை -_ இருந்தும்
கிழிந்த  உம்  செருப்பைத்
தைக்காதவரில்லை.?
இன்றோ பேனா பிடித்துவிட்டோம்.
பிரபஞ்சம் சுற்றுகின்றோம்.
ஜில்லெட் கொண்டு
சிரைத்துக்கொள்.!
மின் சுடுகாட்டில்
சாம்பல் அள்ளு.!!
சத்தமில்லாமல்
காடு சேர்..!!!
கிழிந்தால்  தூக்கியெறி.
உனக்கும் எனக்கும் ஒரே
வடிவ தீ தான்
கனன்று கொண்டிருக்கிறது.

– வினயன்

***

உங்களுக்கேது ஒழுக்கம்?

ஓரினச் சேர்க்கையென்றால்
ஒக்களிக்கும் இந்துத்வாவே
அரனும் அரியும் கூடித்தானே
அய்யப்பன் வந்தான்!
நாரதனும் நாராயணனும்
நாணமின்றி சேர்ந்துப்பெற்ற
ஆண்டுகள்தானே அறுபதும்!
உமக்கேது ஒழுக்கம்?
உம் கடவுளுக்கே இல்லாதபோது!

– நாராயணசாமி