கேள்வி : தமிழ்நாட்டில் சிவசேனா வன்முறை ஆயுதத்தைக் கையில் எடுத்திருப்பது எதனைக் காட்டுகிறது?
_ நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
பதில் : இங்கே தனி பலம் இல்லாத ஒரு வடநாட்டுக் கிளை அமைப்பு இப்படி தலைதுள்ளி ஆடுவதற்குக் காரணம் மத்திய, மாநில அரசுகளின் ஆதரவு தங்களுக்கு உள்ளது என்ற தப்புக் கணக்கு காரணமாகவே.
கேள்வி : அதானிகளையும் அம்பானிகளையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு உலகின் மனிதவள தலைநகராக இந்தியாவை உருவாக்க வேண்டும் என மோடி பேசி வருவது கேலிக்குரியதாக இல்லையா?
_ நாத்திகன் சா.கோ., பெரம்பலூர்
பதில் : அவரது மனிதவளம் என்பது அதானிகளையும் அம்பானிகளையும் முன்னிலைப்படுத்துவதேயாகும். இல்லாவிட்டால் ஆஸ்திரேலியாவுக்கு அதானியுடன் செல்லுவாரா பிரதமர். தமிழ்நாட்டையும் _இந்த ஆட்சியையும் அதானி குழுமம் வளைத்துவிட்டதே!
கேள்வி : திருமணம் ஆன பெண்கள் தனக்கு சகோதரன் இருந்தும் தன் அப்பா, அம்மா பெயரில் உள்ள சொத்தில் பங்கு கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாமா?
_ வெ.இளங்கோவன், சென்னை
பதில் : தாராளமாக; ஏன் கூடாது? திருமணம் ஆன ஆண்களுக்குள்ள உரிமை பெண்ணுக்கும் உண்டே. 2006 சட்டப்படி மகனுக்குள்ளது மகளுக்கும் உண்டே!
கேள்வி : கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் பெருமளவு குறைந்திருப்பதாக மத்திய அரசு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளதே?
_ சீ.இலட்சுமிபதி, தாம்பரம்
பதில் : ஆம்; பலவிடங்களில் பெண் குழந்தைகளை கருவில் அடையாளம் கண்டு _சட்ட விரோதமானது அது என்றபோதிலும் _ அழிப்பதின் விளைவே இது!
இன்னமும் மகளிருக்கு நம் நாட்டில் சுதந்திரமாகப் பிறக்கும் பிறப்புரிமைகூட இல்லையே! கருவறையிலேயே அவர்கள் அழிக்கப்படுகிறார்களே? அதன் விளைவே இந்நிலை!
கேள்வி : மக்களின் மனம் கவர்ந்த, அறிவியல் மேதை அப்துல் கலாம் அவர்களின் திடீர் மறைவு…?
_ தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி
பதில் : எதிர்பாராதது; எளிதில் ஏற்கமுடியாத மாபெரும் இழப்பு மனித குலத்திற்கு.
கேள்வி : மோடி – ஜெ சந்திப்பு உள்நோக்கம் என்ன? அரசியல் ரீதியா? ஆரிய ரீதியா? _ வெங்கட.இராசா, ம.பொடையூர்
பதில் : எல்லா ரீதியாகவும் இருக்கலாம். ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே என்ற உடுமலையாரின் பாட்டு வரிகள் நினைவுக்கு வருகின்றன.
கேள்வி : நாடாளுமன்றத் தேர்தலில் தவறான முடிவெடுத்து பின்வருந்திய தமிழருவி மணியன், சட்டமன்றத் தேர்தலிலும் தவறாக வியூகம் வகுக்கிறாரே! தான்தோன்றி மணியன் என்பதுதான் சரியா?
_ வே.ஆறுமுகம், தென்காசி
பதில் : அவர் போன்ற பெரும் அறிவுஜீவிகளைப்பற்றி அடியேனால் புரிந்து கொள்ள எளிதில் முடியாதே!
கேள்வி : விடுதலைச் சிறுத்தைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி போன்ற தெளிவான அமைப்புகளே அரசியல் கணக்கில் தடுமாறும் நிலையில் தங்களின் விரிவான வழிகாட்டும் அறிக்கை வருமா?
-_ கா.முத்துக்குமரன், வேளச்சேரி
பதில் : வழிகேட்டால் வழி சொல்வதுதான் சரியாக இருக்குமே தவிர, சம்மன் இல்லாமல் ஆஜர் ஆவது அதிகப் பிரசங்கித்தனம்.
கேள்வி : இடஒதுக்கீடு என்பது உரிமை! அதைப் பெறாமல் போனால்தானே இழிவு? பெறுவது எப்படி இழிவாகும்?
_ தா.யேசுதாஸ், திண்டிவனம்.
பதில் : உங்கள் கேள்வியும் பதிலும் இணைந்தே உள்ளது. பாராட்டுகள்!
கேள்வி : புடம் போட்ட பேராசிரியரை கலைஞரிடமிருந்து பிரிக்க முயலும் குமுதம் போன்ற குள்ளநரிகள்பற்றித் தங்கள் கருத்து?
_ நீ.கார்த்திகேயன், காஞ்சிபுரம்.
பதில் : குள்ளநரிகளுக்கு ஏது வேறு வேலை?
கேள்வி : தீண்டத்தகாதக் கட்சியாக தி.மு.க.வைக் காட்டும் வஞ்சகர்களை வீழ்த்திட தாங்கள்தான் வியூகம் வகுக்க வேண்டும் என்று திராவிட உணர்வாளர்கள் எதிர்பார்ப்பது நிறைவேறுமா?
_ தே.முல்லைவேந்தன், திருச்சி
பதில் : கேடயம் நாம்; எனவே தாய்க்கழகம் அதன் கடமையைச் செய்யத் தவறாது என்பது உறுதி.