பிள்ளையார் பிறப்புக்குப் பல கதைகள் இருப்பதுபோல (கடவுளுக்குப் பிறப்பு உண்டு என்று சொல்வதே கதை தானே!) பிள்ளையார் சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, கணேஷ் சதுர்த்தி என்று பல பெயர்களில் வழங்கப்படும் அந்த மூடத்தன நிகழ்ச்சி இந்த ஆண்டும் களை கட்டிவிட்டதாம்! நாடு முழுதும் பல ஆயிரம் கோடி ரூபாய்களை வீணடிக்கும் இந்து மதப் பண்டிகைகளில் இதுவும் ஒன்று.
தமிழ்நாட்டில், முன்பெல்லாம், ஒரு அடி அல்லது ஒன்னரை அடி உயரத்தில், சின்னதாகப் பிள்ளையாரை வாங்கி, சைக்கிளில் வைத்து எடுத்துக்கொண்டு போய் வீட்டில் வைத்து வணங்கி விட்டு, மூன்றாம் நாள், நீர் நிலைகளில் கரைப்பார்கள். பதினைந்து ஆண்டுகளாகத் தான் பத்து அடி பதினைந்து அடி உயர, சிலைகளைச் செய்து தெருவில் வைத்து, ஆர்பாட்டமாகக் கூத்தடித்து, மக்களுக்கு இடையூறையும் வீண் செலவையும் அதிகமாக்கிவிட்டனர்.
ஆன்மிக வாதிகள் பாணியிலேயே சொல்ல வேண்டுமென்றால், சின்னப் பிள்ளையார் செய்து, சின்னதாகப் பொருள் விரயம் செய்த காலத்தில், நிறைய மழை பெய்தது! பிள்ளையார் சிலையின் அளவும் அயோக்கியத்தனமும் பெரிதானபின் மழை குறைந்துவிட்டது- ஏரி , குளம், கிணறு எதிலும் தண்ணீர் இல்லை. சதுர்த்தி பிள்ளையார் அழிக்கப்படுவது ஏன்?
பிள்ளையார் சதுர்த்திக்காக, தெருவில் வைக்கப்படும் ஒவ்வொரு சிலைக்கும் லட்சக்கணக்கில் செலவு செய்து பூஜை, விழா என அமர்க்களப்படுத்திவிட்டு, அந்த சிலைகளை ஏன் தண்ணீரில் கரைக்கவேண்டும்?
தண்ணீரில் கரைப்பதுமட்டுமா? அந்த சிலைகளைக் காலால் உதைத்து, மிதித்து கரைக்கிறார்கள்.
நாத்திகர்கள் யாராவது ஏதேனும் கடவுள் சிலையை அல்லது படத்தை அவமதித்துவிட்டால், வழக்குப் போடுவதும், கண்டனம் தெரிவிப்பதும் நேரடி தாக்குதலில் ஈடுபடுவதும் ஆத்திகர்களின் வாடிக்கை! ஆனால் அவர்களின் கடவுளை அவர்களே அவமதிப்பதும் அதற்காகவே ஒரு விழா,ஊர்வலம் என செய்வதும் ஏன்?
சூத்திரக் கடவுள்!
பிள்ளையார் சதுர்த்தியில் முச்சந்திகளில் அல்லது வீடுகளில் வைத்து பூஜை செய்யப்படும் பிள்ளையார்கள் வேத ஆகம விதிப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டு, பார்ப்பனர்களால் மந்திரம் ஓதி,புனித நீர் தெளிக்கப்பட்டு கடவுளாக உயிர்ப்பிக்கப்படுவதில்லை என்பதை கவனிக்க வேண்டும்.
விநாயகர் சதுர்த்திப் பிள்ளையார்கள் சூத்திர மக்களாலேயே வடிவமைக்கப்பட்டு, சூத்திரர்களாலேயே பூஜை செய்யப்படுவதால் அது உண்மை யான கடவுளாக ஆவதில்லை. அன்றைய நாளில், விநாயகனை பிரபலப்படுத்துவதற்காக மட்டுமே இதுபோல் பிள்ளையார் சிலைகள் வீடுகளுக்கு எடுத்துச் சென்று வழிபடலாம் என்று அனுமதிக்கப்பட்டது.
பின்னர் இந்துமதத்தின் பலத்தைக் காட்டுவதற்காக இன்னும் விரிவு படுத்தப்பட்டு தெருக்களிலும் பெரிதாக சிலைகள் வைக்கப்பட்டு, ஊர்வலம் மேளதாளம் என அமர்க்களப்படுகிறது.
மேலே சொன்னதுபோல், சூத்திரர்களால் தொட்டு,பூஜை செய்யப்பட்ட விநாயகன் வெறும் பொம்மைதான். அது கடவுள் இல்லை, வெறும் களிமண்தான் . எனவேதான் அந்த விநாயகனை நீர்நிலைகளில் கரைத்துவிடுகிறார்கள். அப்படிக் கரைக்கும்போது, பக்தர்கள் காலால் மிதித்தும்,உதைத்தும் அவமதித்தாலும் அதைப் புன்முறுவலோடு பார்ப்பதும் ஊடகங்களில் அதைப் பெருமிதத்தோடு வெளியிடுவதும் அதனால்தான்.
கடவுளாகவே இருந்தாலும், சூத்திரன் கைபட்டால், அது வெறும் களிமண்ணாகிவிடுகிறது. அதை அவமானப்படுத்தலாம். அப்படியெனில், அந்த சூத்திரனை அவமானப்படுத்த தயங்குவார்களா இந்துமதவாதிகள்?
பக்திவந்தால் புத்தி போகும்;
புத்திவந்தால் பக்தி போகும்!