சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

செப்டம்பர் 01-15

நூல்: திராவிட நாட்டுக் கல்வி வரலாறு

ஆசிரியர்: திராவிடப்பித்தன்

பக்கம்: 232, விலை: ரூ.190/_

முகவரி: கயன்கவின், 16/25, இரண்டாம் சீவார்டு சாலை, வால்மீகி நகர், திருவான்மியூர், சென்னை_41.

தொலைப்பேசி: 044_4202 0389.

மின்னஞ்சல்: kayalkavin@gmail.com

வரலாற்றுக்கு முற்பட்ட பண்டைய தமிழகத்தில் வாழ்ந்த மக்கள் எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்தனர். தமிழகத்தில் கிடைத்துள்ள வரலாற்றுச் சான்றுகளான தமிழ்பிராமிக் கல்வெட்டுக்களிலும், பானையோடுகளிலும் காணப்படும் எழுத்து வடிவங்களும், குறியீடுகளும் இந்தியாவின் பிறபகுதிகளில் கிடைக்கும் சான்றுகள் போல அரசு, அதிகார அமைப்பைச் சார்ந்தவர்களிடம் மட்டுமல்லாது எளிய மக்களிடமும் கிடைத்துள்ளன. இதனை அரசவையிலும், மேனிலை மக்களிடையேயுள்ள வழிப்பாட்டுத் தலங்களிலும் மட்டுமே எழுத்தறிவு என்ற நிலை தமிழகத்தில் காணப்படவில்லை. மாறாக எல்லா நிலைகளிலும் எல்லா மக்களிடையேயும் எழுத்தறிவு மிகப்பரவலாகக் காணப்பட்டது.

தமிழ்மக்கள் சுமார் கி.மு.ஆயிரம் வாக்கிலேயே ஒருவகையான எழுத்துப் பொறிப்புக்களை அல்லது வரிவடிவத்தைத் தமது கருத்துப் பரிமாற்றத்திற்கும் பயன்படுத்தினர் எனலாம் (கா.இராஜன் 2004: 73-74)

வடநாட்டில் குருமார் வேதங்களை வாய்மொழியாகவே கற்க வேண்டுமென்றும் அவற்றை எழுதுவது கூடாது என்றும் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். இதனாலேயே வேதங்களை எழுதாக்கிளவி (சுருதி) என்று அழைத்தார்கள். இச்சூழ்நிலையில்தான் வடநாட்டில் எழுத்துமுறை தோன்றி 400 ஆண்டுகள் வரை சமஸ்கிருத மொழியில் கல்வெட்டுகள் காணப்படவில்லை. எல்லாக் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் நாணயங்களும் இலச்சினைகளும் பிராகிருத மொழியிலேயே எழுதப்பட்டன. சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ள முதல் முக்கியமான கல்வெட்டு கி.பி.2 ஆம் நூற்றாண்டில் ஆண்ட ருத்ரதாமன் என்ற மன்னருடையதாகும். தமிழகத்தில் கல்வி எந்த ஒரு குழுவிடமோ, சாதியிடமோ கட்டுண்டு கிடக்கவில்லை (ஜராவதம் மகாதேவன் 1996: 50) என விளக்குவார்.

மேலும் தமிழ்பிராமி கல்வெட்டுகளில் காணப்படும் உபாச்சன் (திருவாதவூர் கி.பி. 2) உவாச்சன் (கீழவளவு, பொங்கர் புளியங்குளம்), ஆச்சாரியா (பறையன்பட்டு, திருநாதர்குன்று கி.மு. 6) மாணாக்கர் (பறையன் பட்டு) ஆகிய சொற்கள் பண்டைய தமிழகத்தில், எழுத்தறிவும் அதைக் கற்றுத்தரும் அமைப்புகளும் இருந்ததற்கான வரலாற்றுச் சான்றுகளாம் (Iravatham Mahadevan 2003: 130 – 131). இந்த தொல்லியல் சான்றுகள் தமிழகத்தின் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் எழுத்தறிவு சமுதாயத்தின் எல்லாப் பிரிவு மக்களிடமும் பரவலாக வழக்கில் இருந்ததை உறுதி செய்கின்றன.

இதே காலகட்டத்தில் இந்தியாவின் வடபகுதியில் தோன்றிய மனுதர்ம சார்பு அரசியல் சாதிகளின் தோற்றத்துக்கு வித்திட்டது. இதன் தொடர்ச்சியாக பிறப்பின் அடிப்படையில் தொழிலை நிர்ணயிக்கும் மனுதர்ம அடிமைக் கோட்பாடு தோற்றம் கொண்டது.

பள்ளிக்கூடங்கள், பாடப்புத்தகங்கள், திட்டமிட்ட பயிற்சிகள் போன்ற அமைப்புகள் தேவை. எழுத்தறிவில்லாமல் எழுதப்படிக்கத் தெரியாமல் மேற்கூறிய வசதிகளை எப்படிப் பயன்படுத்த முடியும்?

என அண்ணல் அம்பேத்கார் விளக்குவார் (அம்பேத்கர் 1995: 59) உலகில் அறிவு பெறுவதையும், கற்றுக்கொள்வதையும் தடை செய்த ஒரே சமுதாய அமைப்பு இந்து சமுதாய அமைப்பு என்பதையும், அக்கொடுங்கோண்மை அமைப்பை நிலைநிறுத்திய ஆதிக்கமூளை மனு வினுடையது என்றால் மிகையில்லை.

மனுதர்மத்தின் இக்கொடுங்கோன்மையான சட்டத்தால் அறிவுத் தேடல் என்ற செயல்பாடு பார்ப்பனரல்லாதாருக்கு முழுமையாக மறுக்கப்பட்டது. மேலும் பார்ப்பனிய, வைசிய, சத்திரிய, சூத்திர அடுக்கமைவு சமுதாய அமைப்பு உள்ள இந்துமதம் பார்ப்பனர்கள் மட்டுமே கல்வி பெறும் வாய்ப்பை நிரந்தரமாக மனுதர்மத்தின் மூலம் ஏற்படுத்தியது. பிறப்பின் அடிப்படையில் தொழிலை நிர்ணயம் செய்த இந்தக் கொடிய அமைப்பு கல்வி கற்பதையும், எழுத்தறிவு பெறுவதையும் வேதத்தை மய்யமாகக் கொண்டே செயல்படுத்தியது.

வர்த்தமான மகாவீரரும், சாக்கிய புத்தரும் தோன்றினர்; பிராமணர்களுக்கும் பிராமணியத்திற்கும் எமனாக மாறினர். அவர்களது சமதர்ம கொள்கைகள் வருணாஸ்ரம முறையை தகர்த்து பொதுமக்களின் கல்வி ஞானத்தையும் அறிவையும் தூண்டிவிட்டன. சாதிப் பாகுபாடுகளை நிராகரித்த சமண, பௌத்தர்கள் எல்லா மக்களையும் கல்விக்கூடங்களில் சேர்த்து ஒருபடித்தான கல்வி அறிவைப் புகட்டினர். சமண, பவுத்த பள்ளிகள் ஆயிரக்கணக்கில் நாடெங்கும், துவக்கப்பட்டு மக்கள் கல்வி வளர்க்கப்ட்டது.

தென்னாடான திராவிட நாட்டைப் பொறுத்தவரையில் பவுத்த, சமணர்களின் தொண்டானது திராவிட இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் துணையாக இருந்துவந்துள்ள உண்மையை எவரும் மறுக்க முடியாது. கல்வித்துறையில் பெருமளவிற்கு மக்கள் ஈடுபடவும் அறிவு பெறவும் பவுத்த, சமணர்கள் அரும்பெரும் தொண்டாற்றியுள்ளனர்.

இந்தியாவின் மீது முகமதியர்களின் படையெடுப்பானது பிராமணர்களின் வருணாஸ்ரம கல்வி முறையை நாசமாக்கியது. சமஸ்கிருத வளர்ச்சிக்கு சில இந்திய அரசர்களால் கொடுக்கப்பட்டு வந்த மானியங்கள் நிறுத்தப்பட்டன. சமஸ்கிருத இலக்கிய நூல்கள் அழிக்கப்பட்டன. பிராமணிய கோயில்களும் மடங்களும் வேத ஆசிரமங்களும் தயவு தாட்சண்யமின்றி இடித்து நாசமாக்கப்பட்டன. இந்தியாவில் ராஜ்யங்களை அமைத்துக்கொண்டு ஆண்டுவந்த முகமதியர்கள் பிராமணிய இந்துக்களின் வைரிகளாக இருந்து வந்தார்கள். அவர்கள் தம் சொந்த மொழியையும் கல்வி முறையையும் பரவச் செய்து வருவதில் கருத்து கொண்டனர். பெர்சிய மொழியையும் பரவச்செய்து வருவதில் கருத்து கொண்டனர். பெர்சிய மொழியையும், அரபு மொழியையும் ஆட்சி மொழிகளாக ஏற்படுத்தினர். மக்தாப் என்னும் சிறு பள்ளிகளையும் மத்ரசா என்னும் உயர்தரப் பள்ளிகளையும் நாடெங்கும் ஏற்படுத்தினர்.

லார்ட் கர்சான் கவர்னர் ஜெனரலாக இருந்த காலத்தில் கல்வித்துறையில் மிகுதியான அளவிற்கு நாட்டம் செலுத்தப்பட்டது.

1901 ஆம் ஆண்டில் கர்சான் தன் சொந்த முயற்சியினால் கல்வி மாநாடு ஒன்றைக் கூட்டினார். இம்மாநாட்டில் மக்கட் கல்வியின் பிற்போக்கு நிலைமையை தெளிவாக எடுத்துக்கூறி பொதுமக்களின் கல்வி அறிவை அதிகரிக்கச் செய்யும்படியான காரியங்களை மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தினார். அவர் கூறிய யோசனையின் பயனாக மக்களிடையே துவக்கக் கல்வி வளர்ச்சியடைவதற்கான ஏற்ற வழி வகைகள் வகுக்கப்பட்டன. மாகாண சர்க்கார்கள் இவைகளைக் கடைப்பிடித்து காரியமாற்றும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். துவக்கக் கல்வி மட்டுமல்லாது உயர்தரக் கல்வியும் கல்லூரிக் கல்வியும் கூட வளர்ச்சியடைய வேண்டியதின் அவசியத்தை உணர்ந்து 1902 ஆம் ஆண்டு ஜனவரியில் பல்கலைக்கழக கமிஷன் ஒன்றை நியமித்தார் லார்ட் கர்சான், இக்கமிஷன் போற்றத்தக்க வகையில் தன் கடமையைச் செய்து நல்ல கருத்துக்களைத் தெரிவித்த தென்றாலும் நமது திராவிடத்தைப் பொறுத்தமட்டில் பாதகமே செய்தது எனக் கூறவேண்டியுள்ளது. அப்போது திருச்சி, திருவனந்தை, மங்களூர் ஆகிய இடங்களில் புதிய பல்கலைக்கழகங்கள் துவக்குவதற்கான திட்டங்கள் தென்னாட்டு சர்க்காரிடையே இருந்துவந்தன.

ஆனால் இவ்விடங்களில் பல்கலைக்கழகங்கள் துவக்கப்படுவதற்கான உரிய காலம் இன்னும் வரவில்லை என்று கமிஷன் தன் கருத்தைத் தெரிவித்ததால் இவ்விடங்களில் பல்கலைக் கழகங்கள் ஏற்படுவது நின்றுவிட்டது. பல்கலைக் கழகங்களின் நிர்வாகத்தைப் பற்றியும் அவைகளின் திறமையான கல்விப் பயிற்சியைப் பற்றியும் விரிவான சட்டங்கள் இயற்றப்பட்டதும் ஒவ்வொரு பல்கலைக்கழகமும் நல்ல முறையில் ஒரு புத்தகசாலை வைத்திருக்க வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டதும் குறிப்பிட வேண்டியதாகும்.

இந்நூற்றாண்டின் துவக்கத்தில் திராவிட நாட்டுக் கல்வி வளர்ச்சியானது படிப்படியே முன்னேறிக் கொண்டிருந்தது. 1910 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் முதன்முதலாக எஸ்.எஸ்.எல்.சி பரிட்சை துவங்கப்பட்டது.

இப்பரிட்சையானது சென்னை மாகாண உயர்தரக் கல்வி சரித்திரத்தில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்திவிட்டுத் தனக்கே உரியதொரு புகழைப் பெற்றுள்ளது. 1913ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தினர் செய்த காரியங்களுள் தமிழ் அகராதி (ஜிணீனீவீறீ லிமீஜ்வீநீஷீஸீ) ஒன்று தொகுப்பதற்காக ஒரு லட்சம் ரூபாய் அளித்ததும் குறிப்பிட வேண்டியதாகும். தவிர சென்னைப் பல்கலைக்கழக நூல்நிலையத்திற்கென கட்டிடம் ஒன்று கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டதும் அம்முடிவை சர்க்கார் ஒப்பியதும் பல்கலைக்கழக சரித்திரத்தில் ஒரு முக்கிய சம்பவமாகும். இக்காலத்தில் ஆரம்ப ஆசிரியர்களின் சம்பள விகிதம் உயர்த்தப்பட்டது. ஆரம்பக்கல்வி சரித்திரத்தில் முதலிடம் பெறுவதாகும். சென்னையில் பெண்களுக்கென புதிய கல்லூரியொன்று கிருத்துவப் பெண்கள் கல்லூரி என்ற பெயரில் நிறுவப்பட்டதும் முக்கிய நிகழ்ச்சியாகும்.

திராவிடர்களைப் பற்றிக் கேட்பாரோ பார்ப்பாரோ இல்லாமலேயிருந்து வந்தது. திராவிடரின் இவ்விரங்கத்தக்க நிலையை முதல் முதல் உண்ர்ந்தார் ஒரு பெரியார். அவர்தான் திராவிட தந்தை டாக்டர் சி.நடேசனார் அவர்கள் கல்வித்துறையை மிக முக்கியமாகக் கருதி அதில் நாட்டம் கொண்டு திராவிடர் நலனுக்காக உழைக்க முன்வந்த தலைசிறந்த பெரியார் டாக்டர் நடேச முதலியார் என்பதை திராவிட உலகம் நன்கறியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *