இன்றைய இந்தியாவின் பெரும் மக்கள் திரளான மத்திய தரவர்க்கத்திடம் எப்படிப் புகழ் பெறலாம்-?, அவர்களது குற்ற உணர்வைத் தூண்டுவதன் மூலம் பழியைப் பிறர் மீது போட்டுத் தப்பித்துக் கொண்டு, தம் மீது தூய பிம்பத்தை வார்த்துக் கொள்ளும் தந்திரத்தை அவர்களுக்குக் கற்றுத் தந்து எவ்வாறு தங்கள் அணியில் சேர்த்துக் கொள்ளலாம் என்ற வித்தையை அரசியல்வாதி களைக் காட்டிலும் அண்மைக் காலங்களில் சிலர் கற்று வைத்திருக்கிறார்கள்.
அவர்களில் முதன்மையானவர்களாக சாமியார்களையும், திட்டமிட்டு உருவாக்கப்படும் புனித பிம்பங்களையும் முன்னுக்குக் காட்டி, பின்னணியில் இருந்து இயங்கிக் கொண்டிருக்கிறது காவிக் கூட்டம்.
அதனால்தான், அரசியல்வாதிகள் பேசவேண்டியதையெல்லாம் சாமியார்கள் பேசத் தொடங்கி விட்டார்கள். அரசியலில் தூய்மையாகப் பணியாற்றிய ஜெயப் பிரகாஷ் நாராயணன் எழுப்பிய ஊழல் எதிர்ப்புக் கோரிக்கைகளை இப்போது கார்ப்பரேட் சாமியார் ராம்தேவ் எழுப்புகிறார். ஆயுதம் வாங்கியதில் ஊழல், அரசு நிலத்தை உறவினர்களுக்குப் பட்டா போட்டுத் தந்ததில் முறைகேடு, தொலைத் தொடர்பு ஒதுக்கீட்டில் முறைகேடு, இராணுவ வீரர்களுக்கு சவப்பெட்டி வாங்கியதில் ஊழல் என தனது ஆட்சிகளில் ஊழலில் திளைத்த பா.ஜ.க. இப்போது தாங்கள் நேரடியாக ஊழல் எதிர்ப்பு என்று போராடினால் மக்கள் எள்ளி நகையாடுவார்கள் என்பதால் முதல் கட்டமாக இதைப் போன்ற ஒரு போராட்டத்தைக் காவிகளின் கையில் கூட நேரடியாகக் கொடுக்காமல், காந்தியவாதி என்ற போர்வையில் ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளரான அன்னா ஹசாரே-வைக் கிளப்பி விட்டது காவிக்கூட்டம். அதில் மெல்ல காவிகளின் ஆதரவைக் காட்டவைத்து அடுத்த கட்டத்தில் காவி கட்டிய ராம்தேவ்களைக் கிளப்பிவிட்டிருக்கிறது.
சவாலுக்குப் பயந்தோடிய சுவாமிகள்!? தனது யோகமருத்துவ முறைகளால் எவ்வித நோயையும் குணப்படுத்தமுடியும் என்று பீலா விட்டுக் கொண்டிருந்த சுவாமி ராம்தேவை 2006-ஆம் ஆண்டு என்.டி.டி.வி பேட்டியில் பிடித்து மடக்கினார் இந்திய அறிவியல் மற்றும் பகுத்தறிவாளர் சங்கத்தின் பிரபீர் கோஷ். தான் அனுப்பும் ஒரு நோயாளியையும், டெல்லியைச் சேர்ந்த ஒரு வழுக்கைத் தலையரையும் நவீன மருத்துவ முறைகளைப் பின்பற்றாமல், முற்றிலும் நீங்கள் சொல்லும் யோக மருத்துவ முறைகளைப் பயன்படுத்தி குணப்படுத்த முடியுமா? என்று நேருக்கு நேர் சவால்விட்டார் கோஷ். சவாலை ஒப்புக் கொள்ளாமல், ஓட்டம் விட்டார் ராம்தேவ். |
முதலில் கருப்புப் பணத்தை மீட்கவும், ஊழலுக்கு எதிராகவும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார் ராம்தேவ். அவரை விமான நிலையத்திலேயே சந்தித்து சமாதானம் செய்யப் பார்த்தது மத்திய அரசு. ஆனால், அப்படியும் அடங்காமல் ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் தொடங்கினார் பாபா ராம்தேவ். முதலில் தனது சாந்த சொரூபத்தைக் காட்டி சரி செய்யப் பார்த்த காங்கிரஸ், ராம்தேவின் பின்னணியில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தையும், அதன் கள்ள நோக்கத்தையும் புரிந்துகொண்டு, உபாயத்தை மாற்றி, அடுத்த அஸ்திரத்தை எடுத்து வீசியது ராம்லீலா மைதானத்தை வைத்து! 5000 பேருடன் யோகா செய்யப் போகிறேன் என்று கூறி அரசிடம் அனுமதி வாங்கிவிட்டு, சாகும் வரை உண்ணாவிரதம் என்று 50,000 பேருக்கும் மேல் கூட்டி வைத்துக் கொண்டு சண்டித்தனம் செய்வதா எனச் சீறியது. காவிகளைச் சுளுக்கெடுப்பதில் வல்லவரான, காங்கிரசின் திக் விஜய்சிங் தொடுத்த கேள்வி களால் ராம்தேவின் குட்டு ஒவ்வொன்றாக உடையத் தொடங்கியது. உண்ணாவிரதம் என்றால் நாம் வழக்கமாகப் பார்ப்பதுபோல சாமியானா போட்டு எளிமையாக உட்கார்ந்திருப்பது அல்ல; ராம்லீலா மைதானம் முழுதும் அலங்காரப் பந்தல் போட்டு அந்தப் பகுதி முழுமையையும் குளு குளு ஏ.சி. வசதி செய்து ஆடம்பரமாக உட்கார்ந்தனர் ராம்தேவும் அவரது சீடர்களும்.
உண்ணாவிரதத்திற்கு 18 கோடி ரூபாய் நிதி உடனடியாக வசூல் செய்யப்பட்டிருக்கிறது. இவரது கோரிக்கை என்ன? வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவரவேண்டும்; அந்தப் பணத்தை தேசியச் சொத்தாக அறிவிக்க வேண்டும்; அதன் உரிமையாளர்களை தேசத் துரோகி களாக அறிவிக்க வேண்டும். சரி, இந்த நோக்கம் சரிதான். ஆனால் இதனைச் சொல்பவர் எப்படி இருக்க வேண்டும்? 1,000 கோடிக்கும் அதிகமாக சொத்துக் குவித்திருப்பவர் இந்தக் கோரிக்கையை எழுப்புகிறார். இந்தக் காவி உடை வேடதாரிக்கு ஆயிரக்கணக்கான கோடிகள் குவிந்தது எப்படி என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. உடனடியாக நன்கொடையாகக் கிடைத்த 18 கோடி ரூபாயில் எவ்வளவு வெள்ளை? எவ்வளவு கருப்பு? தன்னிடம் சேர்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான கோடி மூலம் எவ்வளவு கருப்புப் பணம் வெள்ளையாக மாற்றப் பட்டிருக்கிறது? அவை எப்படி காவிப் பணிகளுக்குப் பயன்பட்டுக் கொண்டிருக் கின்றன? கணக்குச் சொல்ல முடியுமா ராம்தேவால்?
ஆர்.எஸ்.எஸ்.தான் பின்புலம் கடந்த மார்ச் மாதம் கருநாடக மாநிலம் புத்தூரில், அகில பாரதிய பிரதிநிதி சபாவின் கூட்டம் நடைபெற்றது. இந்த சபா, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் உயர் நிலைக் குழுவாகும். இந்தக் கூட்டத்தில், தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதில், ஊழலுக்கு எதிராக எந்தத் தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் போராட்டம் நடத்தினாலும், அதற்கு ஆதரவு தர வேண்டும்’ என தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. அது மட்டுமின்றி, ஏப்ரல் 2ஆம் தேதி, ஊழல் எதிர்ப்பு முன்னணி ஒன்றை ஆர்.எஸ். எஸ்., அறிவித்தது. அதில், ஒரு புரவலராக பாபா ராம்தேவ் இடம் பெற்றுள்ளார். இதிலிருந்தே, ராம்தேவின் உண்ணாவிரதப் போராட்டப் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்., உள்ளதை அறிந்து கொள்ளலாம் என்று மத்திய அரசின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் காவிப் பின்புலத்தை ஆதாரத்தோடு அம்பலப்படுத்தியுள்ளார். நன்றாகக் கவனித்தால், இந்தத் தீர்மானத்திற்கு மூன்று நாள்கள் கழித்து தான், அதாவது ஏப்ரல் 5-ஆம் தேதிதான் அன்னா ஹசாரேயின் போராட்டமும் ஆரம்பித்தது. |
சரி, இனிமேல் உண்டியல்களை ஒழித்துவிட்டு, நேரடியாக வருமானவரிக் கணக்குத் தணிக்கைக்கு உட்பட்டு மட்டுமே, வரைவோலை அல்லது காசோலை மூலம் மட்டும்தான் கோவில்களில் நன்கொடைகள் வாங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்து வாரா? அதற்கு, தானே முன்னுதாரணமாக இருந்து தனது யோகா அமைப்புக்கு அவ்வாறே செய்யத் தயாரா ராம்தேவ்? போன்ற கேள்விகள் அறிவுடையோர்களால் எழுப்பப்பட்டது
ராம்தேவ் பலரை ஏமாற்றியிருக்கிறார். 1994 ஆம் ஆண்டு முதல் அவர் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். அவருக்குப் பல கோடி சொத்துச் சேர்ந்தது எப்படி என்பது பற்றி முழுமையாக விசாரிக்க வேண்டும். ஆயுர்வேத மருந்து விற்பனையில் ஈடுபடும் இவருக்கு யோகா குரு என்ற பெயரில் வருமான வரிச்சலுகை எப்படி அளிக்கப்பட்டது என்பது பற்றியும் விசாரிக்க வேண்டும் என்று ரிஷி மூலத்தை நோக்கிப் பாய்ந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக் விஜய்சிங்.
1995 ஆம் ஆண்டில் திவ்யா யோக மந்திர் என்ற பெயரில் ஒரு அமைப்பைத் தொடங்கிய ராம்தேவ் அங்கு யோகாசனங்களைக் கற்றுத்தந்து வந்துள்ளார். 2003 ஆம் ஆண்டில் ஆஸ்தா டி.வி.யில் யோகா கற்றுத் தரத் தொடங்கியதில் இருந்து பிரபலமானாராம். பின்னர் உ.பி.மாநிலம் ஹரித்துவாரில் பதஞ்சலி என்ற யோகா பீடம் அமைத்து அதில், ஆயுர்வேத மருத்துவமனை, பல்கலைக் கழகம், மருந்துத் தயாரிப்புத் தொழிற்சாலை, அழகு சாதனத் தொழிற்சாலை என பெரும் வணிகராக மாறியுள்ளார். இவருக்கும் இவரது கூட்டாளிகளுக்கும் 200 நிறுவனங்கள் உள்ளதாம். தனது யோகா வியாபாரத்தை நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்த ஆஸ்தா டி.வி.யையும் விலைக்கு வாங்கிவிட்டார்.
ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த சுனிதா என்பவர் சில ஆண்டுகளுக்கு முன் உடல் நலம் பாதிக்கப்பட்டு, பாபா ராம் தேவிடம் சிகிச்சை பெற்றார். யோகாசனம் மூலமாக அவரது நோய் நீங்கியதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து சுனிதா, ஸ்காட்லாந்தில் 684 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவை 2 மில்லியன் பவுண்ட்களுக்கு வாங்கி பாபா ராம்தேவுக்குக் கொடுத்துவிட்டார்.
இப்போது, அந்தத் தீவில் பாபா ராம்தேவ் ஒரு ஆசிரமம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
வெளிநாட்டில் இருக்கும் கருப்புப் பணங்களை இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று கூறும் இந்த ராம்தேவுக்கு கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் நாடான மொரிஷியசில் ஆசிரமம் இருக்கிறதாம். ராம்தேவுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட பதஞ்சலி ஆயுர்வேதா லிமிடெட், ஆரோக்கியா ஹெர்பல் உள்ளிட்ட நிறுவனங்கள் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், பாபா ராம்தேவ் தயாரித்து விற்பனை செய்து வரும் ஆயுர்வேத மருந்துகளில் விலங்குகளின் எலும்புகள் சேர்க்கப்படுவதாக குற்றச்சாற்று எழுந்துள்ளது. இது குறித்து, மத்திய அரசு விசாரணையில் இறங்கி உள்ளது.
2006-ஆம் ஆண்டிலேயே பாபா ராம்தேவ் கம்பெனி தயாரிக்கும் ஆயுர்வேத மருந்துகள் குறித்த பிரச்சினை கிளம்பிவிட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிருந்தா காரத் தொடுத்த குற்றச்சாற்றுக்குச் சான்றாக, ஹைதராபாத், சென்னை, கொல்கட்டா உள்ளிட்ட பல இடங்களிலும் உள்ள ஆய்வகங்களிலும் உறுதி செய்யப்பட்ட மாதிரிகள் (ராம்தேவ் மருந்து உற்பத்தியகத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத மருந்துகள்) காண்பிக்கப்பட்டன. அவற்றில் மனித மற்றும் விலங்குகளின் எலும்புப் பொருட்கள் சேர்க்கப்பட்டதற்கான தடயங்கள் உறுதி செய்யப்பட்டன. மேலும், எந்த மருந்துப் பொருளாயினும் அதன் உள்ளடக்கப் பொருள்களின் பட்டியல் தரப்படவேண்டும். ஆனால், ராம்தேவ் மருந்துகளில் பட்டியலில் குறிப்பிடப்படாத பொருள்களும் இணைந்திருக் கின்றன என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
இதையொட்டி அன்றைய உத்திரப் பிரதேச அரசின் சுகாதாரத் துறையும்கூட ஆய்வுகளை மேற்கொண்டது. ஆனால் உத்திரப் பிரதேசத்திற்கு லட்சக்கணக்கில் வரும் ராம்தேவின் பக்தர்களால் அரசுக்குக் கிடைக்கும் சுற்றுலாத்துறை வருமானத்தைக் கணக்கிட்டால் இந்தப் பிரச்சினை எந்தளவுக்கு எடுத்துச் செல்லப்படும் என்பது கேள்விக்குறியே என்று அப்போதே கருதப்பட்டது. மீண்டும் இப்போது இது தோண்டப்பட்டிருப்பது ராம்தேவுக்கு மட்டுமல்லாமல், ஆயுர்வேதம் என்ற பெயரில் இருக்கும் அறிவியலுக்குப் பொருந்தாத போலி மருத்துவக் கும்பலுக்கும் ஆபத்துதான்.
பதஞ்சலி யோகா பீடம் அமைந்துள்ள நிலம் தொடர்பாகவும் சர்ச்சை எழுந்துள்ளது. உண்மையிலேயே, இந்த நிலம் `உதசின் அகாரா’ என்ற மடத்துக்குச் சொந்தமானது. அந்த மடத்தின் தலைவர் மகான் ராஜேந்திரதாஸ் ஆவார். அவருடைய மறைவுக்குப் பின்னர், வாரிசு அடிப்படையில் அந்தச் சொத்து மகான் மகேந்திரதாசுக்கு வந்திருக்க வேண்டும்.
தற்போது, அந்த நிலத்தை பாபா ராம்தேவின் நெருங்கிய கூட்டாளியான பாலகிருஷ்ணா வாங்கி உள்ளார். ஆனால், அந்தச் சொத்து இன்னமும், மகேந்திரதாஸ் பெயரில்தான் இருப்பதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வளவு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் சந்நியாசி(?)தான் இப்போது ஊழலைப் பற்றியும் கருப்புப் பணத்தைப் பற்றியும் பேசுகிறார்.
இந்தியாவில் ஆசிரமங்களுக்கும், சாமியார் களின் மடங்களுக்கும் கோடிக் கணக்கில் சொத்துக்கள் எப்படிச் சேர்கின்றன? அந்த மடங்களில் எல்லாம் பெரும் தொழில் அதிபர்கள் தொடர்பு வைத்துள்ளார்கள். அவர்களது கருப்புப் பணங்கள் ஆசிரமங்க ளுக்குத்தான் செல்கின்றன. இது ஆட்சியில் அமர்ந்துள்ள எல்லாக் கட்சிகளுக்கும் தெரிந்த சங்கதி. ஏனென்றால் இந்த நாட்டில்தான் மதச் சார்பற்ற நாடு என்று சட்டப் புத்தகத்தில் எழுதிவைத்துக் கொண்டு மத விழாக்களில் கலந்து கொள்ள முடியும்; கோவில், சாமியார், ஆசிரமங்களுக்குச் செல்லமுடியும். அந்த இடங்களில் என்ன நடந்தாலும் கேள்வி கேட்பார் இல்லை. அரசின் பிரதிநிதிகளும், ஆட்சியாளர்களும், நிருவாகிகளும், ஏன் நீதிபதிகளும்கூட சாமியார் கால்களில் விழுந்தால் எப்படி அங்கு நடக்கும் தவறுகளைச் சட்டம் தட்டிக் கேட்கும்? இந்தச் சலுகையைத் தெரிந்து கொண்டதால்தான் ராம்தேவ் போன்ற சாமியார்கள் கோடி கோடியாக சொத்துக் குவிக்க முடிகிறது. புட்டபர்த்தி சாய்பாபா, நித்தியானந்தா போல சாமியார் தொழிலில் ஈடுபடுகின்றனர்.
இன்னொரு புறம் இவர்களுக்கு மத அரசியல்வாதிகளின் ஆதரவு இருக்கிறது. இப்போது நடந்த ராம்தேவின் உண்ணா விரதத்தில்கூட பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளியான பெண் சந்நியாசி ரிதம்பரா கலந்து கொண்டு வாழ்த்துகிறார். சங் பரிவாரின் அஷோக் சிங்கால் சந்திக்கிறார். பா.ஜ.க.வினர் உண்ணாவிரதத்தை வரவேற்று ஆர்ப்பரிக் கிறார்கள். ராம்தேவின் உண்ணாவிரதம் குறித்து கருத்துத் தெரிவித்த செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திவேதி மீது செய்தியாளராக வந்த ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஒருவர் செருப்பை வீச முயன்றுள்ளார்.
மத்தியில் பா.ஜ.க.ஆட்சி நடந்த போதெல்லாம் இந்தச் சாமியார்கள் எங்கே இருந்தார்கள்? அப்போது கருப்புப் பணம், ஊழல் என்றெல்லாம் ஏன் குரல் கொடுக்கவில்லை?அவ்வளவு ஏன், இப்போதும் கருநாடக பா.ஜ.க.ஆட்சியின் மீது கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் கொஞ்ச நஞ்சமல்ல. அந்தப் பக்கம் ராம்தேவ்களின் பார்வை படாதது ஏன்? என்னுடைய போராட்டத்திற்கு மதச் சாயம் பூச வேண்டாம் என்று ராம்தேவ் கூறுகிறார். காவி உடை தரித்துவிட்டாலே அது மதச் சாயம்தானே.
தொலைக்காட்சி ஊடகங்கள் பொது நிறுவனங்களாக பங்குகளை வெளியிட்டு விடுவதால் தன்னுடைய வணிகத்திற்காக தினந்தோறும் ஏதேனும் செய்தி கிடைக்காதா என அலைகின்றன. அவர்களுக்கு ராம்தேவ் உண்ணாவிரதங்கள் கை கொடுக்கின்றன. இந்த விளம்பரத்தைப் பயன்படுத்தி புதிய தியாகிகளாக காவி கட்டிய சாமியார்கள் களம் இறங்குகின்றனர். இந்த தியாகச் செம்மல் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு என்றதும், சுடிதார் போட்டுக் கொண்டு, முகத்தை மூடிக் கொண்டு தப்பிக்க முனைந்தது. இதையே வேறு ஆட்கள் செய்திருந்தால் ஊடகங்கள் எப்படி ஊளையிட்டிருக்கும்? இப்போது வாயை மூடிக் கொண்டு இருப்பதேன்?
யோகா, தியானம், ஆய்.., ஊய்.., என்று காலைப் பின்னி போஸ்கொடுத்தபடி, அலப்பறை கொடுத்த இந்தக் கரும யோகி, நாலு நாள் கூட உண்ணாவிரதம் தாங்கமுடியாமல், தேனையும் பழச்சாறையும் குடித்து ஒரு வழியாக குடியாவிரதத்தைக் கைவிட்டு, தெம்பான பொருள்களை உள்ளே தள்ளிக் கொண்டிருக்கிறார். இதை எந்த ஊடகமாவது கேள்வி கேட்குமா?
கருப்புப்பணத்தைப் பற்றிப் பேசும் இந்தக் காவிக் கபடவேடதாரியின் காவி அங்கியைக் கழற்றினாலும், உடம் பெல்லாம் காவிதான்! மூளையெங்கும் காவிச்சிந்தனைதான்!
உண்ணாவிரதத்தின் முக்கிய நோக்கங்களுள் ஒன்று, – ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியை அலுவலக மொழியாக்குவது! இதற்கும் கருப்புப் பண ஒழிப்புக்கும் என்ன சம்பந்தம்! ஆதரவு தெரிவித்து ஆங்காங்கு உண்ணாவிரதம் என்று அமர்ந்த அரைவேக்காடுகளுக்கு இந்த உள்நோக்கங்கள் தெரியுமா? ஆயுதம் தாங்கிப் போராடுவோம் வாருங்கள் என்று அழைத்திருக்கிறாரே! இது பச்சையான காவி பயங்கரவாதம் இல்லையா? கோவில் கட்ட கடப்பாறையோடு வரச்சொல்லி மசூதியை இடித்த கூட்டமல்லவா இது! பசுவதைக்கு எதிர்ப்பு என்று சொல்லி காமராஜரை உயிரோடு கொழுத்தத் துடித்த கும்பலல்லவா இது? அரசின் கைகள் இன்னும் கடுமையாக வேண்டாமா? என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல், உளறிக் கொட்டும் இந்தக் காவிக் கிறுக்கர், இராம் லீலா மைதானத்தில் இராவண லீலா நடக்கும் என்றிருக்கிறார். தெரிந்து சொன்னாரா? புரியாமல் உளறினாரா? தெரியவில்லை.. இராவண லீலா நடக்க வேண்டும்தான்! இந்த இராம பயங்கரவாத கும்பலிடமிருந்து நாட்டை மீட்க இராவண லீலா நடக்க வேண்டும்.
அது தான் சூத்திரர்களின் புரட்சி! இராம்லீலா மைதானத்திலேயே இராவண லீலா நடத்த நாம் தயார்தான்! அப்போதுதானே இந்தக் காவிக் கும்பலை ஒழித்துக் கட்ட முடியும். நேர்மையாக அனுமதி கேட்கிறோம்… இராவண லீலா நடத்துவதில் எங்களுக்குத்தான் அனுபவம் உண்டு! மத்திய அரசே! இராம்லீலா மைதானத்தைத் தாருங்கள்!
2010-ஆம் ஆண்டு அளித்த பேட்டியொன்றில், தனக்கு அரசியல் நோக்கமோ, அரசியல் கட்சிகளில் சேரும் எண்ணமோ இல்லை என்று சொன்ன ராம்தேவ், அதே பேட்டியில் அடுத்த தேர்தலுக்குள் தான் உருவாக்கும் சக்தி, 543 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றியை நிர்ணயிக்கும் என்றார். உளறல்களின் ஊற்றுக்கண்தான் ஆன்மீகமோ? |
– இளையமகன்