கண்கவர் கோசுமெல் மனதை மயக்கும் மயன் நாகரிகம்!
– மருத்துவர்கள் சோம&சரோ.இளங்கோவன்
முதல் 11/2 நாட்களும் கடைசி 11/2 நாட்களும் கடல் பயணத்தில் போய் விடும். மயாமி விட்டுக் கிளம்பி 30 மணித்துளிகளிலேயே நடுக்கடல் வந்து விடும். அப்புறம் கடல்,கடல் எங்கும் கடல் தான்! எப்போதாவது ஒரு வணிகக் கப்பலோ, உல்லாசக் கப்பலோ தொலைவில் தெரியும், அவ்வளவு தான். மீன், திமிங்கலம் ஒன்று கூடப் பார்ப்பது கடினம். வெறுங் கடலையே எவ்வளவு நேரந்தான் பார்க்க முடியும் ?
அங்குதான் உல்லாசக் கப்பல் நிறுவனங்களின் வணிகத் தன்மையின் சிறப்பு தெரியும். மகிழ்ச்சியை அப்படியே ஒவ்வொன்றிலும் பணமாக்கி விடுகின்றார்கள். உள்ளே நுழையும் போதிலிருந்து ஆங்காங்கே புகைப்படக் கலைஞர்கள் நம்மைப்படம் எடுத்துத் தள்ளி விடுவார்கள் .
அவ்வளவு நன்றாக இருக்கும். விலை தான் கூடுதலாக ஒவ்வொரு படமும் 10- 15 டாலர்கள். மொத்தமாக வாங்கினால் குறைவு! காலை முதல் நள்ளிரவுத்தாண்டி எப்போதும் உடற்பயிற்சி, யோகா என்று நேரங்குறித்து வரச்சொல்லி அங்கே அவர்களுக்கே உரிய திறமையைக் காட்டி பல உடற்கூறு பற்றிய பொருட்களை மிகவும் பெரிய விலைக்கு அருமையாகப் பேசி விற்று விடுவார்கள். பணம் கொடுத்தால் வலிக்கும் என்பதால் எல்லாமே உள்ளே நுழையும் போது கொடுத்த அட்டையிலே போட்டு வாங்கிவிடுவார்கள். பல்வகை சூதாட்டங்கள் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டே இருக்கும்.
அதிலே பல போட்டிகள் ஆயிரக்கணக்கில் பரிசுகள், ஆனால் போட்டிக்குப் பணங்கட்ட வேண்டும் என்று எல்லாமே வணிகம். அதிலேயே நிறைய பொருளீட்டி ஆக வேண்டும். இல்லாவிட்டால் அவ்வளவு வகையான அளவில்லாத உணவு, நாளைக்குக் குறைந்தது 10 வகையான பெரிய ஆட்ட பாட்ட, நகைச்சுவை நிகழ்ச்சிகள், இரண்டு பயணிகளுக்கு ஒரு ஊழியர் என்ற அளவிலே பல ஊழியர்கள், இதையெல்லாம் எப்படி நடத்த முடியும்?பல வகையானப் போட்டிகள் மிகவும் மகிழ்ச்சியுள்ளதாக இருக்கும். பாடுதல், ஆடுதல்,கோல்ப் ,கூடைப்பந்து, மேடைப்பந்து என்று நடந்து கொண்டே இருக்கும். அனைத்திற்கும் பல வகையான பரிசுகள் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். குழந்தைகளுக்குத் தனி நிகழ்ச்சிகள், பார்த்துக் கொள்ள ஆட்கள் என்று நன்கு விளையாட விட்டுப் பார்த்துக் கொள்வார்கள். காலம் போவதே தெரியாது!
நான்கு நாட்கள், நான்கு நாடுகளில், நல்ல இடங்களில் கப்பல் காலையில் போய் நின்று மாலையில் கிளம்பும். அங்கே பல வகை நிகழ்ச்சிகளுக்குப் பணங்கொடுத்து வாங்கிப் பதிவு செய்து கொள்ள வேண்டும். முதலில் சென்ற இடம் மெக்சிகோவின் அழகான கோசுமெல் என்ற தீவு. பழமையான மாயன் நாகரீகத்தின் சின்னங்கள் உள்ள இடம். அங்கே மக்கள் மிகவும் விரும்புவது அங்கே உள்ளப் பவளப் பாறைகள். ஆசுதிரேலியாவின் மிகப் பெரிய பவளப் பாறைகட்கு அடுத்த இடத்தில் போற்றப் படுவது. ஆசுதிரேலியா பெரிய இடத்தில் பவளப்பாறைகள் .ஆனால் இங்கே வண்ணங்கள் மிகுந்திருந்தன. பல வண்ணங்களில் மீன்கள், பாறைகளில் உள்ள அழகு செடி கொடிகள், மற்றும் ஆமைகள் என்று கண் கவர் காட்சிகள் தான். நீச்சல் நன்கு தெரிந்தவர்கள், ஆழ்கடல் வாயுத்தொட்டிகளைக் கட்டிக் கொண்டு அதிலிருந்து மூக்கிற்கு வருங் குழாயினால் மூச்சு விட்டுக் கொண்டு இரண்டு முதல் நான்கு மணிநேரம் கடலில் வாழலாம். கொஞ்சம் தெரிந்தவர்கள் நெஞ்சில் மிதவை, மூக்குக் குழாய் மாட்டிக் கொண்டு கண்ணாடி மாட்டிய கண்கள் வழியாக அவைகளுடன் மிதந்து கொண்டே நீந்தி அனுபவிக்கலாம். நீச்சல் தெரியாதவர்கள் கண்ணாடிப் படகிலோ, நீர் மூழ்கிக் கப்பலிலோ சென்று பார்க்கலாம்.
ஓரிரு இடத்திலே டால்பின்களை காப்பாற்றுகின்றார்கள். கடலில் வாழ முடியாதவை இவை. அவற்றைப் பழக்கித் தாண்டவும், சுழலளவும் வைப்பார்கள். அந்த டால்பினின் முதுகைப் பிடித்துக் கொண்டு நாமும் நீந்தும் மாதிரி அருமையான ஏற்பாடு செய்துள்ளார்கள். நாம் நீந்தி வந்தவுடன் அந்த டால்பின் நமக்கு முத்தந்தரும். அதைப் புகைப்படம் எடுத்து விற்பார்கள். குழந்தைகளும், வயதானவர்களும் அங்கே அடையும் இன்பத்தை வார்த்தையில் வரைய முடியாது ! அனைத்து டால்பின்களும் ஒன்றையொன்று பெயரிட்டுத் தான் அழைக்குமாம் ! அவை பேசுவதும் பாடுவதும் அழகே அழகு !
வெள்ளை மணலுடன் நீல நிறம், பச்சை நிறம் கொண்ட கடல் அங்கே பலவித தண்ணீர் விளையாட்டுக்கள் என்று கடற்கரைகள் மக்கள் வெள்ளத்திலே மிதக்கும். இந்த உல்லாசக் கப்பல்கள் அதிலே நல்ல இடமாகக் கும்பல் இல்லாத இடத்தில் மகிழ்சசியுடன் கூடியவற்றை செய்திருப்பார்கள்.
மற்ற பலர் ஊர் சுற்றுவதற்கும், மாயன் நாகரீகக் கட்டிடங்களைப் பார்க்கவும் சென்றிடுவார்கள். அங்கிருந்து சிறிது தொலைவில் உள்ள மாயன் காலக் கட்டிடம் பிரமிடுகள் போல இருக்கும்.பல படிகள் ஏற வேண்டும். மேலே
ஏறிப்பார்த்தால் நாம் வானத்தில் தொங்குவது போல இருக்கும்.கீழே உள்ள படிகள் தெரியாது. தரை மட்டுந்தான் தெரியும். அது எப்படி அப்படிக் கட்டினார்களோ தெரியவில்லை.மிகவும் ஓரத்தில் வந்து பார்த்தால் படிகள் தெரியலாம் .அந்த வம்பு எதற்கு? மேலிருந்து பார்க்கும் போதே தலை சுற்றுகிறது .
கப்பல் நிற்கும் இடங்களின் அருகே பல கடைகள் இருக்கும். அங்கு பல பொருள் அங்காடிகளும், அதை விட மிகுதியாகத் தங்க வைர, பவள நகைக் கடைகள் நிறைந்து வழியும். 50%- 60 % குறைந்த விலை என்று (ஏமாற்றுவார்கள்) விற்பார்கள்! டி பேர் வைரம் போன்ற நல்ல பெயர் போனக் கடைகள்தான். விலை தான் தலை சுற்றும். ஆனால் வாங்குபவர்கள் உண்டு.
நல்ல இளநீர் கிடைக்கும் .அங்குள்ள மீன் வகைகள் பிடித்த சில மணித்துளிகளே ஆனவை வறுத்ததும், வேகவைத்ததும் சிறிது காரமாகவே கிடைக்கும்.
ஒரு வழியாக நாம் அனைத்தையும் பார்த்து முடிப்பதற்கும் கப்பல் ஏற நேரம் வந்து விட்டது என்று கடற்கரையில் நம்மை அழைப்பதற்கும் சரியாக இருக்கும். வாங்கிய மூட்டைகளைச் சுமந்து கொண்டு கப்பலில் ஏறி அறைக்குச் சென்று களைப்பாறி அன்றைய இரவை அனுபவிப்பதற்குத் தயாராகலாம்! உணவும் நிகழ்ச்சிகளும் மகிழ்விக்கத் தயார், நீங்கள் தயாராகுங்கள்.